காயல்பட்டினம் அப்பாபள்ளித் தெருவிலும், குட்டியப்பா பள்ளியிலும் செயல்பட்டு வருகிறது சமூக நல்லிணக்க மையம் என்ற தஃவா சென்டர்.
இஸ்லாம் மார்க்கத்தை தாமாக முன்வந்து தம் வாழ்வியல் நெறியாக்கி வருவோருக்காக புனித குர்ஆன் கல்லூரி என்ற நிறுவனத்தை அமைத்து மூன்று மாத இஸ்லாமிய ஆரம்பக் கல்வி உள்ளிட்ட பணிகளைச் செய்து வருவதோடு, மாதந்தோறும் தமிழகத்தின் பல பகுதிகளுக்கும் தஃவா சுற்றுப்பயணங்களுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
தஃவா சென்டர் சார்பில் இம்மாதம் 28, 29 தேதிகளில் “வெற்றியை நோக்கி” என்ற தலைப்பில் இரண்டு நாள் இஸ்லாமிய மாநாடு (இஜ்திமா) நடைபெறவுள்ளது. இதுகுறித்து, தஃவா சென்டர் மேலாளர் டி.வி.எஸ்.ஜக்கரிய்யா வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
புனித இஸ்லாமிய மார்க்கப் பிரச்சாரப் பணிகளை தமிழ் பேசும் மக்களிடையே கொண்டு சேர்க்கும் அளப்பரிய பணியை வல்ல அல்லாஹ்வின் பேரருளால், உங்கள் யாவரின் மேலான ஒத்துழைப்புகளுடன் நமது தஃவா சென்டர் சிறப்புற செய்து வருகிறது.
“வெற்றியை நோக்கி!” இரண்டு நாள் இஸ்லாமிய மாநாடு:
இன்ஷாஅல்லாஹ் இம்மாதம் 28, 29 தேதிகளில் நமது சென்டர் சார்பில், “வெற்றியை நோக்கி” எனும் தலைப்பில் இரண்டு நாட்கள் இஸ்லாமிய மாநாடு - இஜ்திமா நிகழ்வுகள் சகோதரர் டி.ஏ.எஸ்.அபூபக்கர் அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ளது.
கருத்தரங்கம்:
29.05.2011 சனிக்கிழமை காலை 10.00 மணி முதல் 12.30 மணி வரை, இஸ்லாமிய கலாச்சார பிரச்சினைகளும், தீர்வுகளும் என்ற தலைப்பின் கீழ் கருத்தரங்கம் நடைபெறுகிறது.
கண்காட்சி:
அன்று மதியம், ஆயிஷா சித்தீக்கா மகளிர் இஸ்லாமிய கல்லூரியின் சார்பில் கண்காட்சி நடத்தப்படவுள்ளது.
மாணவ-மாணவியர் அனுபவ உரை:
அன்று மாலையில், தஃவா சென்டர் மாணவியரின் சுய அனுபவ உரைகளும், இரவு அமர்வில் மாணவர்களின் சுய அனுபவ உரைகளும் இடம்பெறுகின்றன. பல்வேறுபட்ட அனுபவங்களுடன் இஸ்லாம் மார்க்கத்தை தம் வாழ்வியலாக்கிக் கொண்ட அன்பர்கள் தமது வாழ்வின் துயர - இனிய நிகழ்வுகளை இவ்வுரைகள் மூலமாக உங்களுடன் பகிர்ந்துகொள்ளவுள்ளனர்.
இரண்டாம் நாள் நிகழ்வுகள்:
மறுநாள் 29.05.2011 ஞாயிற்றுக்கிழமையன்று காலை 09.30 மணிக்கு இரண்டாம் நாள் நிகழ்வுகள் துவங்குகின்றன. துவக்கமாக, “இஸ்லாமிய பார்வையில் சமூக சேவை” எனும் தலைப்பின்கீழ் அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜிதின் கத்தீபும், ஆயிஷா சித்தீக்கா மகளிர் இஸ்லாமிய கல்லூரியின் முதல்வருமான மவ்லவீ எம்.ஐ.அப்துல் மஜீத் மஹ்ழரீ உரையாற்றுகிறார்.
அதனைத் தொடர்ந்து சிறப்பு விருந்தினர் உரை நடைபெறுகிறது. பின்னர் தஃவா சென்டரின் பணிகள், தஃவா அனுபவங்கள் குறித்து விளக்கப்படுகிறது.
பின்னர், “இறையச்சம்” என்ற தலைப்பில் அன்சார் ஹுஸைன் ஃபிர்தவ்ஸீ உரையாற்றுகிறார். அன்று மதியம் 02.00 மணி முதல் 03.30 மணி வரை மீண்டும் கண்காட்சி நடைபெறுகிறது.
மாலை 04.00 மணி முதல் 06.30 மணி வரை பேய் விரட்டு எனும் தலைப்பின்கீழ் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
அன்றிரவு 07.00 மணி முதல் 08.00 மணி வரை “சுய பரிசோதனை” என்ற தலைப்பில் ஷேக் கமாலுத்தீன் மதனீ உரையாற்றுகிறார்.
இஷா தொழுகை இடைவேளையைத் தொடர்ந்து, இரவு 08.15 மணிக்கு, “சிறந்த சமுதாயம்” என்ற தலைப்பில், மவ்லவீ நவ்ஃபர் சிறப்புரையாற்றுகிறார்.
அனைத்து நிகழ்வுகளிலும் அனைவரும் கலந்து பயனடையுமாறு அன்புடன் அழைக்கிறோம்.
இவ்வாறு, தஃவா சென்டர் மேலாளர் டி.வி.எஸ்.ஜக்கரிய்யா தனதறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தகவல்:
ஆரிஷ் கான்,
செய்தித் தொடர்பாளர்,
சமூக நல்லிணக்க மையம் (தஃவா சென்டர்),
காயல்பட்டினம். |