திருசெந்தூரிலிருந்து திருப்பூர் செல்லும் பேரூந்தில், காயல்பட்டின பயணிகளை ஏற்றாமால் சென்ற பேரூந்தின் நடத்துனர் மீது நடவடிக்கை
எடுக்கப்பட்டிருப்பதாக தமிழ்நாடு அரசு பேரூந்து கழகம் (கோவை) பிரிவு - ஈரோடு மண்டல துணை மேலாளர் (வணிகம்) கணேசன்
தெரிவித்துள்ளார்.
கடந்த ஏப்ரல் 8 அன்று திருசெந்தூரிலிருந்து திருப்பூர் செல்லும் பேரூந்தில், காயல்பட்டின பயணிகள் 8 பேர், திருச்செந்தூர் பேரூந்து
நிலையத்திலிருந்து பயணம் செய்ய முயற்சித்தனர். ஆனால் அவர்களை பேரூந்தின் நடத்துனர் ஏற்றவில்லை. இது குறித்து தமிழ்நாடு அரசு பேரூந்து
கழகம் (கோவை) பிரிவுக்கு மக்கள் சேவாக் கரங்கள் நிறுவனர் பா.மு. ஜலாலி புகார் மனு ஒன்று அனுப்பியிருந்தார். அதில்
தெரிவிக்கப்பட்டிருந்ததாவது:-
நேற்று 8.4.2011 அன்று இரவு 7:20 மணியளவில் திருச்செந்தூர் பேரூந்து நிலையத்தில் இருந்து திருப்பூர் புறப்பட்டு சென்ற தங்கள் அலுவலக
கட்டுப்பாட்டில் இயங்கி வரும் காயல்பட்டினம் வழியே செல்லும் பேரூந்தில் காயல்பட்டினம் செல்வதற்கு நான் ஏறினேன். பேரூந்து
நடத்துனர் ஏற்றமறுத்து, இறக்கி விட்டார். மேலும் ஏழு, எட்டு நபர்களையும் ஏற்றவில்லை. இதென்ன டவுன் பஸ்ஸா எல்லோரையும் காயல்பட்டினம்
ஏற்றி செல்ல. புறப்படும் போது ஏறுங்கள் என்று படிக்கட்டில் நின்று கொண்டே நடத்துனர் கூறிவிட்டு எங்களை ஏற்றாமல் பேரூந்து புறப்பட்டு சென்று
விட்டது.
பெருத்த அவமதிப்புடன் நாங்கள் நான்கு நபர்கள் இன்னொரு தமிழ்நாடு அரசு பேரூந்து கழகம் பேரூந்தில் ஏறி காயல்பட்டினம் சென்றோம். அதே
நேரத்தில் தங்கள் தமிழ்நாடு அரசு பேரூந்து கழகம் (கோவை) பேரூந்து எங்கள் காயல்பட்டினம் வழியாகவே சென்றது. ஆனால் எங்களை
ஏற்றவில்லை. இதை பெருத்த அவமதிப்பாகவே கருதிகின்றோம்.
என்னுடன் (1) ஜான்சன் (த/பெ சூசா நாயகம்), கொம்புத்துறை, காயல்பட்டினம்) (2) மகபூப் ஜான் (த/பெ அமீர் ஜான், பைபாஸ் ரோடு,
காயல்பட்டினம்), (3) முஹம்மது மொய்தீன் (த/பெ பூசரி, பைபாஸ் ரோடு, காயல்பட்டினம்) ஆகிய 3 பேர்களும் உடன் பிரயாணித்தனர். மீதி 4,
5 நபர்கள் வேறொரு பேரூந்தில் பிரயாணித்து காயல்பட்டினம் வந்தனர்.
தங்கள் நடத்துனர் போக்குவரத்து விதிகளை மீறியது மட்டுமன்றி, பயணிகளிடம் மனித நேயம் இன்றி நடந்து கொண்டதற்குமாக அவர் மீது ஒழுங்கு
நடவடிக்கை எடுக்கும்படியாக மெத்த பணிவுடன் வேண்டுகின்றோம். எங்கள் பொன்னான நேரத்தை வீணாக்கி விட்டுதான் இந்த புகாரை
எழுதுகின்றோம். உரிய நடவடிக்கை எடுத்து, தெரியப்படுத்த வேண்டுகிறோம். இதுபோன்ற சம்பவங்கள் இனியும் தொடர அனுமதிக்க வேண்டாம்
எனவும் வேண்டுகிறோம்.
இப்படிக்கு,
பா.மு.ஜலாலி.
இது குறித்து நேரடி விசாரணை செய்ய தமிழ்நாடு அரசு பேரூந்து கழகம் (கோவை) பிரிவு - ஈரோடு மண்டல துணை மேலாளர் (வணிகம்) கணேசன் கடந்த ஏப்ரல் 21 அன்று காயல்பட்டினம் வந்தார்.
அவ்வேளையில் மக்கள் சேவா கரங்கள் நிறுவனர் பா.மு. ஜலாலியுடன் நகர பிரமுகர்கள் - எஸ்.ஹெச்.முஹம்மது முஹைதீன், பீ.ஏ. சேக், கொமந்தார் இஸ்மாயில் ஆகியோர் இருந்தனர்.
சம்பவம் குறித்து விளக்கம் கேட்ட துணை மேலாளர் (வணிகம்) கணேசன் - நடத்துனர் மீது நிர்வாகம் நடவடிக்கை எடுத்திருப்பதாக கூறி அதற்க்கான விளக்க பதிலை நேரடியாக வழங்கினார்.
தகவல்:
பா.மு.ஜலாலி,
நிறுவனர், மக்கள் சேவாக் கரங்கள். |