தூத்துக்குடி மாவட்டத்தில் கோடை விடுமுறையில் பள்ளிகளில் ஸ்பெஷல் வகுப்புகள் நடத்தினால் பள்ளிகள் மீது துறை வாரியான கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பரிமளா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் சில கோடை விடுமுறையை மாணவ, மாணவிகள் ஜாலியாக கழிக்க வழியில்லாத வகையில் விடுமுறை மாதங்களிலும் ஸ்பெஷல் வகுப்பு நடத்தி மாணவர்களின் மன நிலையை பாதிக்கும் வகையில் செயல்படுவதாக கல்வித்துறை அதிகாரிகளுக்கு புகார் வந்தது. இதனை தொடர்ந்து மாவட்ட கலெக்டர் மகேஷ்வரன் உத்தரவின் பேரில் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பரிமளா இது குறித்து அதிரடி நடவடிக்கை மேற்கொள்ள முடிவு செய்துள்ளார்.
இது குறித்து நேற்று சி.இ.ஓ பரிமளா நிருபர்களிடம் கூறியதாவது:-
தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் ஆகியவை கட்டாயம் மே ஒரு மாதம் மாணவர்களை கோடை விடுமுறையை கொண்டாட அனுமதிக்க வேண்டும். கோடை விடுமுறை காலத்தில் பத்தாம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பிற்கு பள்ளியில் ஸ்பெஷல் வகுப்புகள் நடத்தி மாணவர்களின் ஜாலி பொழுதுபோக்கிற்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது.
இதுபோன்ற செயல்களால் மாணவர்களின் சீரான மனநிலை கட்டாயம் பாதிக்கப்படும். இதனை பள்ளி நிர்வாகம் உணர வேண்டும். கோடை விடுமுறை மாணவர்களின் சந்தோஷத்திற்காகவும், பொழுது போக்கிற்கும், அவர்கள் மனது ரிலாக்ஸ் ஆக்குவதற்கும்தான் விடப்படுகிறது. அந்த நேரத்தில் பள்ளிகளில் ஸ்பெஷல் வகுப்பு நடத்தி மாணவர்களின் நலனை பாதிக்க வைக்கக் கூடாது. இதன் மூலம் அவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடும்.
தூத்துக்குடி மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி, பிளஸ் 2 போன்றவற்றிற்காக பள்ளிகளில் ஸ்பெஷல் வகுப்புகளை மே மாதத்தில் பள்ளிகள் நடத்தக் கூடாது. அவ்வாறு நடத்துவது குறித்து பெற்றோர்கள் மற்றும் மாணவர்களிடம் இருந்து புகார் வந்தால் அந்த பள்ளிகள் மீது கல்வித்துறை மூலம் துறை ரீதியான கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு பரிமளா தெரிவித்தார். நேர்முக உதவியாளர்கள் குமாரதாஸ், ரத்தினம், உமரிக்கோட்டை பள்ளி தலைமையாசிரியர் ராமசாமி ஆகியோர் உடனிருந்தனர். மே மாதம் 30ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டத்தில் ஓய்வு பெற்ற பள்ளி தலைமையாசிரியர்களுக்கு பாராட்டு விழா நடத்தப்பட உள்ளதாகவும் சி.இ.ஓ தெரிவித்தார்.
நன்றி:
தினமலர் நாளிதழ் (நெல்லை பதிப்பு - 30.04.2011) |