காயல்பட்டினம் தீவுத்தெருவிலுள்ள ஏ.கே.என்.பெண்கள் தைக்கா வளாகத்தில் செயல்பட்டு வரும் மாதிஹுல் ஜலாலிய்யா மகளிர் அரபிக்கல்லூரியின் பட்டமளிப்பு விழா வரும் மே மாதம் 01, 02, 03 தேதிகளி நடைபெறுகிறது.
விழா நிகழ்வுகளில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்து கல்லூரி நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
அன்பின் காயலர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹ்.
இறையருளால் எமது மாதிஹுல் ஜலாலிய்யா மகளிர் அரபிக்கல்லூரி தனது 09 வயதைப் பூர்த்தி செய்து 10ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது, அல்ஹம்துலில்லாஹ்! இதனை பொதுமக்களுக்கு அறிவிக்கும் வகையில் நாற்பெரும் விழாக்கள் எம் கல்லூரி நிர்வாகத்தால் நடத்தப்படவுள்ளது.
மறுவிலா முழுமதி மஹ்மூது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பிறந்தநாள் பெருவிழா!
மஹ்பூபு சுபுஹானீ அஷ்ஷெய்க் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ அவர்களின் நினைவுநாள் பெருவிழா!!
மத்ரஸா மாதிஹுல் ஜலாலிய்யாவின் 10ஆம் ஆண்டு துவக்க விழா!!!
ஆலிமா ஜலாலிய்யாவின் 04ஆம் ஆண்டு ஸனது வழங்கும் (பட்டமளிப்பு) விழா!!!!
இவ்வாறாக நாற்பெறும் விழாக்கள், மாநபியின் மாமன்றம் புனித மஜ்லிஸுல் புகாரிஷ் ஷரீஃப் ஸபை வளாகத்தில், ஜமாதியுல் அவ்வல் பிறை 26, 27, 28 (மே மாதம் 01, 02, 03) ஞாயிறு, திங்கள், செவ்வாய் தினங்களில் நடைபெறுகிறது, இன்ஷாஅல்லாஹ்!
முதல் இரண்டு தினங்களிலும் பெண்கள் நிகழ்ச்சியாக நடத்தப்படுகிறது. இந்நிகழ்ச்சிகளில் எம் கல்லூரி மாணவியரின் இன்சுவை நிகழ்ச்சிகள், ஹதீது, பேச்சுப்போட்டிகள், சிறப்பு அழைப்பாளர்களின் வாழ்த்துரைகள் இடம்பெறுகின்றன.
மூன்றாம் நாளன்று ஆண்களுக்கும், பெண்களுக்குமான பொது நிகழ்ச்சியாக நடத்தப்படுகிறது. இந்நிகழ்ச்சியில் மார்க்க அறிஞர் பெருந்தகைகளின் மதிப்புயர் வாழ்த்துரைகள், சிறப்பு விருந்தினர் உரை மற்றும் கல்லூரியின் மூன்றாண்டு பாடத்திட்டத்தின் கீழ் கற்றுத் தேர்ந்த ஆறு மாணவியருக்கு “ஆலிமா ஜலாலிய்யா” பட்டமும், ஆலிமாக்களுக்கு பயிற்றுவிப்பதற்கான தனிப்பயிற்சிப் பிரிவில் கற்றுத் தேர்ந்த இரண்டு ஆலிமாக்களுக்கு முதர்ரிஸா பட்டமும் வழங்கப்படவுள்ளது.
அனைத்து நிகழ்வுகளிலும் நிகழ்முறையில் கண்டபடி அனைவரும் கலந்து சிறப்பித்து, மாணவியர் ஹக்கில் துஆ செய்யுமாறு அன்புடன் அழைக்கிறோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
மாதிஹுல் ஜலாலிய்யா மகளிர் அரபிக்கல்லூரி நிர்வாகம் சார்பாக,
ஹாஃபிழ் காரீ சொளுக்கு முஹ்யித்தீன் அப்துல் காதிர் தவ்ஹீத்,
சொளுக்கார் தெரு, காயல்பட்டினம். |