தமிழகத்தின் ஐந்தாம் மாநில தேர்தல்கள் - தமிழகத்தில் 1971 ஆம் ஆண்டு மார்ச் மாதம் - 3 நாட்களாக நடந்தது. மார்ச் 1, மார்ச் 4 மற்றும் மார்ச் 7 ஆகிய தேதிகளில் நடந்த தேர்தலில், 234 தொகுதிகளின் உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
1967 ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றிப்பெற்ற தி.மு.க. ஆட்சி அண்ணாதுரை தலைமையில் அமைந்தது.
பூசாரிகள் இல்லாத சுய மரியாதை திருமணங்களை தி.மு.க. ஆட்சி சட்டபூர்வமாக்கியது. மெட்ராஸ் மாநிலம், தமிழ் நாடு என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. பிற மாநிலங்களில் அமலில் இருந்த மும்மொழி திட்டம் (ஹிந்தி, ஆங்கிலம், மாநில மொழி), இரு மொழி திட்டமாக (தமிழ், ஆங்கிலம்) தமிழகத்தில் மாற்றப்பட்டது.
ஆட்சிக்கு வந்த சில மாதங்களில் இவ்வாறு பல மாற்றங்களை கொண்டு வந்த அண்ணாவின் உடல் நிலை திடீரென பாதிக்கப்பட்டது. செப்டம்பர் 1968இல் புற்று நோய்க்காக அமெரிக்காவில் மருத்துவம் பெற்ற அண்ணா, நவம்பரில் நாடு திரும்பி தன் பணியை தொடர்ந்தார். உடலில் இருந்து புற்று நோய் முற்றிலுமாக நீக்கப்படவில்லை. பிப்ரவரி 3, 1969 அன்று - தனது 60வது வயதில் - அறிஞர் அண்ணா காலமானார். அவரின் இறுதி ஊர்வலத்தில் ஏறத்தாழ 1.5 கோடி பேர் கலந்துக்கொண்டதாக - மாநில போலீசாரை மேற்கோள்காட்டி, கின்னஸ் புத்தகம் தகவல் வெளியிட்டது.
அண்ணா மரணத்திற்கு பிறகு தி.மு.க. தலைமைக்கு மு.கருணாநிதி, எம்.ஜி.ஆர். மற்றும் நெடுஞ்செழியன் ஆகியோர் போட்டிப்போட்டனர். இதில் மு.கருணாநிதி தேர்வாகி முதல்வரானார்.
மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சியில் 1969ஆம் ஆண்டு பிளவு ஏற்பட்டது. காமரஜர் தலைமையில் ஒரு காங்கிரஸ் அணியும் [காங்கிரஸ் (ஒ)], பிரதமர் இந்திரா காந்தி தலைமையில் ஒரு காங்கிரஸ் அணியும் [காங்கிரஸ் (ஐ)] உருவானது. கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் தி.மு.க. வின் உதவியுடன் இந்திரா காந்தி ஆட்சி மத்தியில் தொடர்ந்தது.
1972 ஆம் ஆண்டே பாராளுமன்ற மற்றும் தமிழக சட்டமன்ற தேர்தல்கள் நடைபெற இருந்தன. ஓர் ஆண்டு முன்னரே - மத்தியில் தேர்தல் கொண்டுவர இந்திரா காந்தி முடிவெடுத்ததை தொடர்ந்து, தமிழகத்திலும் தி.மு.க. ஓர் ஆண்டு முன்னரே தேர்தலை கொண்டு வந்தது.
1971 ஆம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலை தி.மு.க. - காங்கிரஸ் (ஐ) கூட்டணியாக சந்தித்தனர். இருப்பினும் காங்கிரஸ் (ஐ) தமிழக சட்டசபை தேர்தலில் ஒரு வேட்பாளரையும் நிறுத்த வில்லை. தமிழகத்தின் 39 பாராளுமன்ற தொகுதிகளில், 9 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிட்டது.
தி.மு.க. அணியில் காங்கிரஸ் (ஐ), சி.பி.ஐ., பிரஜா சோசியலிஸ்ட் கட்சி, பார்வர்ட் பிளாக் கட்சி, இந்தியன் யூனியன் முஸ்லிம் கட்சி ஆகியவை போட்டியிட்டன.
எதிர் அணியில் காங்கிரஸ் (ஒ) கட்சி, சுதந்தரா கட்சி, சம்யுக்தா சோசியலிஸ்ட் கட்சி, Tamilnadu Toilers கட்சி, குடியரசு கட்சி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட விவசாயிகள் சங்கம் ஆகியவை போட்டியிட்டனர்.
1406 வேட்பாளர்கள் போட்டியிட்ட இத்தேர்தலில், மொத்த சுமார் 2 கோடியே, 29 லட்ச வாக்காளர்களில் – 72.10 சதவீத வாக்காளர்கள், தங்கள்
வாக்கினை அளித்தனர்.
திருசெந்தூர் தொகுதியில் 3 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். தொகுதியின் மொத்த வாக்காளர்கள் 113,305. இதில் 78,350 வாக்காளர்கள் (69.15
சதவீதம்) தங்கள் வாக்கினை அளித்தனர்.
தி.மு.க. வேட்பாளர் எட்மன்ட் 39,974 வாக்குகள் பெற்று வெற்றிப்பெற்றார். காங்கிரஸ் (ஒ) கட்சியை சார்ந்த கணேசசுந்தரம் 34,045
வாக்குகள் பெற்று இரண்டாம் இடம் பெற்றார்.
சுயேச்சை வேட்பாளர்
- எம்.பீ.செய்யத் அஹ்மத் 646 வாக்குகள்
பெற்றார் .
மாநிலத்தின் 234 இடங்களில் தி.மு.க. கூட்டணி 205 இடங்கள் வென்று ஆட்சியை தக்கவைத்துக்கொண்டது. மு.கருணாநிதி முதல்வராக
தொடர்ந்தார்.
திராவிட முன்னேற்ற கழகம் (தி.மு.க.) 184 இடங்களை வென்றது. சி.பி. ஐ. 8 இடங்களும், பார்வர்ட் பிளாக் கட்சி 7 இடங்களும், பிரஜா
சோசியலிஸ்ட் கட்சி 4 இடமும், இந்தியன் யூனியன் முஸ்லிம் கட்சி 2 இடமும் இத்தேர்தலில் வென்றனர்.
காங்கிரஸ் (ஒ) கூட்டணி 21 இடங்களை வென்றது. காங்கிரஸ் (ஒ) கட்சி 15 இடங்களும், சுதந்தரா கட்சி 6 இடமும் வென்றனர்.
[பாகம் 1] [பாகம் 2] [பாகம் 3]
[பாகம் 4] [பாகம் 5] [பாகம்
6]
[தொடரும்]
|