தமிழகத்தில் சட்டசபை தேர்தல் முடிந்து ஓட்டு எண்ணிக்கை பரபரப்பு இருந்து வரும் நிலையில் அடுத்ததாக உள்ளாட்சி தேர்தல் ஏற்பாடுகளில் மாநில தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது. ஒரே கட்டமாக இந்த தேர்தலை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இது சம்பந்தமாக வரும் 3ஆம் தேதி முதல் மாநில தேர்தல் ஆணைய குழுவினர் மாவட்டங்களில் விசிட் செய்கின்றனர். நெல்லைக்கு 9ஆம் தேதியும், தூத்துக்குடிக்கு 10ஆம் தேதியும், கன்னியாகுமரிக்கு 11ஆம் தேதி குழு வருகிறது.
தமிழகத்தில் கடந்த 13ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடந்து முடிந்தது. ஓட்டு எண்ணிக்கை மே 13ஆம் தேதி நடப்பதால் அந்த நாளை எதிர்நோக்கி அரசியல் கட்சியினரும், பொதுமக்களும், அரசுத்துறை அதிகாரிகளும் காத்திருக்கின்றனர். தேர்தல் முடிவுகள் ஆளும் கட்சிக்கு சாதகமாக இருந்தாலோ, எதிர்கட்சிக்கு சாதகமாக இருந்தாலோ எப்படியும் உள்ளாட்சி தேர்தலை கண்டிப்பாக நடத்தியாக வேண்டிய நிலை உள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளில் பதவி காலம் வரும் அக்டோபர் மாதம் 25ஆம் தேதியுடன் முடிகிறது. அதற்கு முன்பாக இந்த தேர்தலை நடத்தியாக வேண்டும். உள்ளாட்சி தேர்தலை குறிப்பிட்ட காலத்திற்குள் கண்டிப்பாக நடத்தி முடிக்க வேண்டும்... அதில் எந்தவித காலதாமதமும் செய்யக்கூடாது என்று பஞ்சாயத்துராஜ் சட்டத்தில் கண்டிப்பான உத்தரவு இருப்பதால் எந்தக் காரணம் கொண்டும் எந்த அரசு வந்தாலும் உள்ளாட்சி தேர்தலை கண்டிப்பாக நடத்தியாக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கு வேண்டிய முன்னேற்பாடுகளை மாநில தேர்தல் ஆணையம் துவக்கியுள்ளது. மாநில தேர்தல் ஆணையர் முனீர்கோடா ஆலோசனையின் பேரில் தேர்தல் ஆணைய செயலாளர் சேவியர் கிறிஸ்டோபர் நாயகம் மற்றும் சென்னையில் உள்ள மாநில தேர்தல் ஆணைய அதிகாரிகள் இதற்கான முன்னேற்பாடு பணிகளை துவக்கி உள்ளனர். முதற்கட்டமாக தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டத்திற்கு சென்னையில் உள்ள மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தில் உள்ள 7 பேர் கொண்ட குழுவை அனுப்பி வைத்து அந்தந்த மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கு தேவையான நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்துவர உத்தரவிட்டுள்ளது.
துவக்கமாக இந்த குழுவினர் தமிழகத்தில் பத்து மாவட்டத்தில் ஆய்வு பணியை மேற்கொள்ள உள்ளனர். வரும் 3ஆம் தேதி துவங்கி 11ஆம் தேதி வரை இந்த ஆய்வு நடக்கிறது. 9ஆம் தேதி மதுரை, திருநெல்வேலி இரண்டு மாவட்டங்களிலும், 10ஆம் தேதி திண்டுக்கல், தூத்துக்குடி ஆகிய இரண்டு மாவட்டங்களிலும், 11ஆம் தேதி சிவகங்கை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களிலும் ஆய்வு பணியினை மேற்கொள்கின்றனர்.
மாநில தேர்தல் ஆணைய மக்கள் தொடர்பு அலுவலர் அம்பலவாணன், கண்காணிப்பாளர்கள் நாராயணன், சம்பத், நிதி ஆலோசகர் தாமோதரன், சட்ட ஆலோசகர் மனோகரன், உதவியாளர்கள் சிகாமணி, தேன்மொழி ஆகிய ஏழு பேர் கொண்ட குழுவினர் மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் குறித்து ஆலோசனை மேற்கொள்கின்றனர்.
உள்ளாட்சித் தேர்தலைப் பொருத்தமட்டில் மாநகராட்சி, நகராட்சிகளில் கடந்த 2006ஆம் ஆண்டு தேர்தலில் இ.வி.எம் மூலம் தேர்தல் நடந்தது. டவுன் பஞ்சாயத்து, ஊராட்சி ஒன்றியம் வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி உறுப்பினர்கள், ஊராட்சி தலைவர் ஆகியோருக்கு ஓட்டு சீட்டு முறையில் ஓட்டுப்பதிவு நடத்தப்பட்டது.
இம்முறை மாநகராட்சி, நகராட்சிகளோடு டவுன் பஞ்சாயத்துக்களுக்கும் எலக்டிரானிக் ஓட்டுப்பதிவு இயந்திரத்தை (இ.வி.எம்)) பயன்படுத்த மாநில தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. இதற்காக வருவாய் துறையில் இ.வி.எம் பெறுவதற்கு முயற்சி மேற்கொள்ளவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
கடந்த 2006இல் உள்ளாட்சி தேர்தலில் பயன்படுத்தப்பட்ட இ.வி.எம் மாவட்ட கருவூலங்களில் (டிஸ்டிரிக்ட் டிரஷரி) பாதுகாப்பான முறையில் வைக்கப்பட்டுள்ளது. அந்த மிஷின்கள் எவ்வளவு உள்ளது. கூடுதலாக எவ்வளவு இ.வி.எம் தேவைபோன்ற விபரங்களை ஏழு பேர் கொண்ட குழுவினர் மாவட்டங்களில் ஆய்வு செய்கின்றர்.
ஒரே கட்டமாக உள்ளாட்சி தேர்தலை தமிழகத்தில் நடத்த வேண்டும். தூத்துக்குடி மாவட்டத்திற்கு மாநில தேர்தல் ஆணைய குழுவினர் வரும் 10ஆம் தேதி வருவதை ஒட்டி அதற்கு தேவையான நடவடிக்கைகளில் மாவட்ட கலெக்டர் மகேஷ்வரன் ஆலோசனையின் பேரில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பஞ்சாயத்து வளர்ச்சி) லோகநாதன் தலைமையில் சிரஸ்தார் பழனி, தேர்தல் பிரிவு மாசணம் மற்றும் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையில் உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தி வரும் நிலையில் இதனை அமல்படுத்துவது என்பது மாநில அரசின் முடிவுதான். புதியதாக பதவி ஏற்க உள்ள அரசு இதில் என்ன முடிவு எடுக்கப் போகிறதோ தெரியவில்லை. புதிய முடிவு எடுத்தால் மாநிலம் முழுவதும் தற்போது உள்ள இட ஒதுக்கீடு முறையில் மாற்றம் வரும் என்றும் தேர்தல் வட்டாரங்கள் தெரிவித்தன.
நன்றி:
தினமலர் நாளிதழ் (நெல்லை பதிப்பு - 30.04.2011) |