பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள், மே 09ம் தேதி காலை வெளியிடப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு 29.04.2011 அன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு ஐந்து நாட்கள் முன்னதாக தேர்வு முடிவு வெளியாகிறது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில், மார்ச் 02ம் தேதி துவங்கிய பிளஸ் 2 பொதுத்தேர்வு, 25ஆம் தேதி வரை நடந்தது. 1,890 மையங்களில் நடந்த தேர்வில், ஏழு லட்சத்து, 23 ஆயிரத்து, 545 மாணவர்கள் கலந்துகொண்டனர். இவர்களில், மூன்று லட்சத்து, 36 ஆயிரத்து, 443 பேர் மாணவர்கள்; மூன்று லட்சத்து, 87 ஆயிரத்து, 102 பேர் மாணவியர்.
கடந்தாண்டுகளுடன் ஒப்பிடும்போது, இந்தாண்டு தேர்வுகள், பெரிய அளவில் எவ்வித குளறுபடிகளும் இல்லாமல் தேர்வுகள் நடந்து முடிந்தன. கணிதத் தேர்வில் மட்டும், சில மாவட்டங்களில் வினியோகிக்கப்பட்ட வினாத்தாளில், அச்சுப்பிழை இருந்ததால், மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டது. ஆனால், சம்பந்தபட்ட மாணவர்களுக்கு, உரிய மதிப்பெண்களை வழங்கி, தேர்வுத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
மற்றபடி, வேறு தேர்வுகளில் தவறான கேள்விகளோ, பாடப்பகுதிகளுக்கு சம்பந்தமில்லாத கேள்விகளோ இடம்பெறவில்லை. அனைத்து தேர்வுகளுமே எளிதாக இருந்ததாக, மாணவர்கள் தெரிவித்தனர். பொறியியல் மற்றும் மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான விண்ணப்பங்கள், மே 16ஆம் தேதியில் இருந்து வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டதால், தேர்வு முடிவு குறித்த எதிர்பார்ப்பு மாணவர்களிடம் அதிகமாக இருந்து வந்தது.கடந்த ஆண்டு மே 14ஆம் தேதி, பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானதால், இந்த ஆண்டும் அதே தேதியில் வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பு முதலில் ஏற்பட்டது. ஆனால், சட்டசபை தேர்தல் முடிவுகள், மே 13ஆம் தேதி வெளியாவதால், பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியாகும் தேதி மாறும் என மாணவர்கள் எதிர்பார்த்தனர்.
இதற்கிடையே, கடந்த 23ஆம் தேதி, சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற பள்ளிக் கல்வித்துறை செயலர் சபீதா, பிளஸ் 2 தேர்வு முடிவுகள், மே 14ஆம் தேதியும், 10ஆம் வகுப்பு தேர்வுகள், மே 25ஆம் தேதியும் வெளியிடப்படும்' என அறிவித்தார். இவரின் அறிவிப்பிற்கு, மறுநாளே, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு எதிர்ப்பு தெரிவித்தார். "அமைச்சரையும், அரசையும் கலந்து ஆலோசிக்காமல், தன்னிச்சையாக செயலர் அறிவித்துள்ளார்' என்றார். இதனால், செயலர் அறிவித்த தேதியில் மாற்றம் வரும் என எதிர்பார்க்கப்பட்டது. அதைப்போலவே, பிளஸ் 2 தேர்வு முடிவு தேதியை மாற்றம் செய்து, அமைச்சர் நேற்று அறிவித்தார்.
அவரது அறிவிப்பு பின்வருமாறு:-
கடந்த மார்ச்சில் நடந்த பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள், மே 09ஆம் தேதி காலை வெளியிடப்படும். மாணவர்கள், தங்களது பள்ளிகள் மூலமாகவும், அரசு தேர்வுத்துறையால் அறிவிக்கப்படும் இணையதளங்களிலும் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணி நடந்து வருவதால், அப்பணி முடிந்ததும், தேர்வு முடிவு தேதி அறிவிக்கப்படும்.
இவ்வாறு அமைச்சர் கூறியுள்ளார்.
அமைச்சரின் அறிவிப்பையடுத்து, கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு ஐந்து நாட்கள் முன்னதாகவே தேர்வு முடிவு வெளியாகிறது. இதுகுறித்து துறை வட்டாரத்தில் விசாரித்தபோது, "அமைச்சர் அறிவித்த தேதியில், தேர்வு முடிவை வெளியிடுவதில் எவ்வித சிக்கலும் இருக்காது. பெரும்பாலான பணிகள் முடிந்துவிட்டன” என்று தெரிவித்தன.
பிளஸ் 2 தேர்ச்சி சதவீதம் சரியுமா; கூடுமா? பிளஸ் 2 தேர்வில், கடந்த ஆண்டை விட தேர்ச்சி சதவீதம் சரியுமா, குறையுமா என்ற எதிர்பார்ப்பு, தேர்வுத்துறையில் ஏற்பட்டுள்ளது. அனைத்து தேர்வுகளும் எளிதாக இருந்ததுடன், குளறுபடிகள் எதுவும் இல்லாததால், கடந்த ஆண்டை விட, தேர்ச்சி சதவீதம் அதிகரிப்பதற்கு வாய்ப்புகள் இருப்பதாக துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஆண்டு "ரிசல்ட்' ஒரு பார்வை:
தேர்வெழுதிய மொத்த மாணவர்கள்.........6,82,607
மாணவர்கள்........................................3,18,931
மாணவியர்.........................................3,27,471
தேர்ச்சி பெற்றோர்................................5,81,251
ஒட்டுமொத்த தேர்ச்சி சதவீதம்................85.15
நன்றி:
தினமலர் |