தூத்துக்குடி மாவட்டத்தில் 6 பேரவைத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை 60 வெப் கேமிராக்கள் மூலம் முழுமையாக கண்காணிக்கப்படவுள்ளது.
மாவட்டத்தில் விளாத்திகுளம், தூத்துக்குடி, திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம், ஓட்டப்பிடாரம், கோவில்பட்டி ஆகிய 6 தொகுதிகளில் கடந்த 13ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் தூத்துக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன.
6 தொகுதிகளுக்கும் தனித்தனியாக அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறைகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டு, சீல் வைக்கப்பட்டுள்ளன. அந்த அறைகளுக்கு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. துணை ராணுவப் படையினர் உள்ளிட்ட 240 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனர். கேமிரா மூலம் 24 மணி நேரமும் அந்த அறைகள் கண்காணிக்கப்படுகின்றன.
வாக்கு எண்ணிக்கை மே 13 காலை 08.00 மணிக்குத் துவங்குகிறது. ஒவ்வொரு தொகுதிக்கும் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் வாக்குகள் எண்ணப்படும். ஒவ்வொரு தொகுதிக்கும் 10 மேஜைகள் போடப்பட்டுள்ளன. அனைத்து மேஜைகளிலும் ஒரு சுற்று வாக்கு எண்ணிக்கை முடிந்து முடிவு அறிவிக்கப்பட்ட பின்னரே அடுத்த சுற்று தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
10 மேஜைகளிலும் லேப்டாப் கணினியுடன் இணைக்கப்பட்ட வெப் கேமிரா பொருத்தப்படவுள்ளது. வாக்கு எண்ணிக்கை முழு விவரமும் வேப் கேமிராவில் பதிவு செய்யப்படும். அதன்படி தொகுதிக்கு 10 வெப் கேமிரா வீதம் 6 தொகுதிகளுக்கும் 60 கேமிராக்கள் பொருத்தப்படவுள்ளன.
வாக்கு எண்ணும் பணியில் சுமார் 250 பணியாளர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். ஒவ்வொரு மேஜைக்கும் ஒரு நுண்பார்வையாளர் நியமிக்கப்படுவார்.
மதுரையில் பயிற்சி:
வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆட்சியர் மற்றும் அனைத்துத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவித் தேர்தல் நடத்தும் அலுவலர்கள், பயிற்சியாளர்களுக்கு சிறப்புப் பயிற்சி மே 03ஆம் தேதி மதுரையில் நடைபெறுகிறது. இதில், தமிழக தலைமை தேர்தல் அலுவலர் பிரவீண் குமார் பங்கேற்கிறார்.
பயிற்சியில் கலந்துகொள்ளும் பயிற்சியாளர்கள் பின்னர் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் பணியாளர்களுக்கு தொகுதி வாரியாக பயிற்சியளிப்பர்.
விடியோ கான்பரன்ஸ் மூலம் ஆலோசனை:
இதற்கிடையே தபால் வாக்குகள் தொடர்பாக கூடுதல் தலைமைத் தேர்தல் அலுவலர்கள் அமுதா, ராஜேந்திரன் ஆகியோர் தபால் வாக்குகளை விநியோகித்த அலுவலர்களுடன் விடியோ கான்பரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்தினர்.
இம்மாவட்டத்தைப் பொருத்த வரை தேர்தல் பணியில் ஈடுபட்ட 6,700 அலுவலர்களுக்கு தபால் வாக்குப் படிவங்கள் வழங்கப்பட்டுள்ளன. அவர்கள் தங்கள் வாக்குகளை அந்தந்தத் தொகுதியில் வைக்கப்பட்டுள்ள தபால் வாக்குப் பெட்டிகளில் செலுத்தி வருகின்றனர். வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 13ஆம் தேதி காலை 08.00 மணிவரை தபால் வாக்குகளைச் செலுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தபால் வாக்குகளை குறிப்பிட்ட வேட்பாளர்களுக்கு அளிக்குமாறு அரசு ஊழியர்கள் நிர்பந்திக்கப்படுவதாக எழுந்துள்ள புகார்களைத் தொடர்ந்து இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. எத்தனை தபால் வாக்குப் படிவங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன; இதுவரை எத்தனை பேர் தபால் வாக்குகளைச் செலுத்தியுள்ளனர்; நிர்பந்தம் ஏதும் உள்ளதா என்பன குறித்து கூட்டத்தில் அதிகாரிகள் கேட்டறிந்தனர்.
நன்றி:
தினமணி நாளிதழ் (நெல்லை பதிப்பு - 28.04.2011) |