ஆறுமுகநேரி ஊருக்குள் வராமல் காயல்பட்டினம் புறவழிச்சாலை வழியே செல்லும் பேருந்துகளை தடுத்து நிறுத்த வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
ஆறுமுகநேரி வடபுற எல்லையில் காயல்பட்டினம் புறவழிச்சாலை அமைந்துள்ளது. இவ்வழியாக பயணியர் பேருந்து செல்ல அனுமதி கிடையாது. இருப்பினும் பல அரசுப் பேருந்துகளும், சில தனியார் பேருந்துகளும் ஆறுமுகநேரி ஊருக்குள் வராமல் காயல்பட்டினம் புறவழிச்சாலை வழியே சென்று விடுவதாகவும், இதனால் பேருந்துக்காக ஆறுமுகநேரியில் காத்திருக்கும் பயணியர் ஏமாற்றமடைவதோடு, குறித்த நேரத்தில் உரிய பயணங்களை மேற்கொள்ள முடியாமற்போவதாகவும், இதுகுறித்து பலமுறை துறை சார்ந்த அதிகாரிகளிடம் முறையிடப்பட்டும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் ஆறுமுகநேரியைச் சார்ந்த பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், புறவழிச்சாலை வழியாக சென்ற பேருந்தை பொதுமக்கள் தடுத்து நிறுத்தி ஆறுமுகநேரி வழியாக திருப்பிவிட்ட சம்பவம் நடந்துள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று திருச்சியிலிருந்து திருச்செந்தூர் சென்ற அரசுப்பேருந்து காயல்பட்டினம் புறவழிச்சாலைக்குள் நுழைந்தது. திருச்செந்தூர் வட்டார காங்கிரஸ் தலைவர் இரா.தங்கமணி தலைமையிலான இளைஞர்கள் அந்தப் பேருந்தை வழிமறித்து ஆறுமுகநேரி வழியாக அனுப்பினர்.
நன்றி:
தினமணி நாளிதழ் (நெல்லை பதிப்பு - 26.04.2011) |