காயல்பட்டினத்தில் ஆண்டுதோறும் புதிய கல்வியாண்டில், நகரிலுள்ள ஏழை-எளிய மாணவ-மாணவியருக்காக சமுதாயத்தின் பல்வேறு பொதுநல மற்றும் அரசியலமைப்புகள் சார்பில் இலவச பள்ளிச் சீருடைகள், பாடக் குறிப்பேடுகள் வழங்கப்பட்டு வருகிறது.
வெவ்வேறு அமைப்புகள் தனித்தனியே வழங்கினாலும், பெறுவது காயல்பட்டினம் மக்கள் மட்டுமே என்பதால், ஒரு மாணவருக்கே பல அமைப்பினரும் பாடக் குறிப்பேடுகள், பள்ளிச் சீருடைகளை வினியோகிப்பதும், இதன் காரணமாக தகுதியுள்ள சில மாணவ-மாணவியருக்கு இந்த இலவச பொருட்கள் கிடைக்காமற்போவதும் தொடராக நிகழ்ந்து வருகிறது.
இக்குறையைப் போக்கிடும் வகையில், மேற்படி பொருட்களை வினியோகிக்கும் அமைப்பினர் மற்றும் தனி நபர்களை ஒருங்கிணைத்து, விண்ணப்பங்களை மட்டும், உலக காயல் நல மன்றங்களின் கல்வித்துறைக் கூட்டமைப்பான காயல்பட்டினம் இக்ராஃ கல்விச் சங்கத்தின் தலைமையில், ஓரிடத்திலிருந்து வினியோகிக்கச் செய்வதென முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நடைபெற்ற முதல் கூட்டத்தில், நகரில் இலவச வினியோகத்தை தனித்தனியே செய்துவந்த அமைப்பின் பிரதிநிதிகள் ஒன்றுகூட்டப்பட்டு, இக்ராஃ தலைமையிலான ஒருங்கிணைந்த இலவச வினியோகத் திட்டத்தின் கீழ் அவர்கள் இணைந்து செயல்படுவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
இரண்டாவதாக நடைபெற்ற கூட்டத்தில், இத்திட்டத்தின் கீழ் இணைந்து செயல்படுவதற்கான அதிகாரப்பூர்வ ஒப்புதலை அவ்வமைப்புகளின் பிரதிநிதிகள் வழங்கினர். அதனைத் தொடர்ந்து, பெறப்பட்ட விண்ணப்பங்களை இத்திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த அமைப்புகள் தமக்குள் பிரித்துக்கொண்டு, பயனாளிகளுக்கு இலவச பாடக்குறிப்பேடுகள் மற்றும் பள்ளிச் சீருடைகளை வழங்குவது குறித்து விவாதித்து முடிவெடுக்கும் பொருட்டு மூன்றாவது கூட்டம், 24.04.2011 ஞாயிற்றுக்கிழமை இரவு 07.15 மணிக்கு இக்ராஃ கூட்டரங்கில், ஹாஜி வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர் தலைமையில் நடைபெற்றது. ஹாஃபிழ் எம்.எம்.முஹம்மத் சுல்தான் கிராஅத் ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார்.
கூட்டத்தில் கலந்துகொண்டோர்:
இக்கூட்டத்தில் காயல்பட்டினம் காயிதேமில்லத் இளைஞர் சமூக அமைப்பின் சார்பில் கே.எம்.என்.மஹ்மூத் லெப்பை, கே.ஜே.ஷாஹுல் ஹமீத் ஆகியோரும்,
அல்அமீன் இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் ஆசிரியர் இசட்.ஏ.ஷெய்க் அப்துல் காதிர், ஹாஃபிழ் எம்.எம்.முஹம்மத் சுல்தான் ஆகியோரும்,
காயல்பட்டினம் பைத்துல்மால் அறக்கட்டளை சார்பில் ஹாஜி வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர்,
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் (தமுமுக) சார்பில் ஹாஜி வாவு கே.எஸ்.எம்.புகாரீ, ஏ.எஸ்.முஹம்மத் நூர் ஃபிர்தவ்ஸ் ஆகியோரும்,
அமீரக காயல் நல மன்றம் சார்பில் அதன் உள்ளூர் பிரதிநிதி ஹாஜி எஸ்.ஏ.கே.பாவாநவாஸ்,
ரியாத் காஹிர் பைத்துல்மால் சார்பில் சோனா ஷாஹுல் ஹமீத்,
பஹ்ரைன் காயல் நல மன்றம் (பக்வா) சார்பில் ஆசிரியர் எஸ்.எம்.அஹ்மத் சுலைமான்,
கடற்கரை முஹ்யித்தீன் பள்ளி சார்பில் கே.அப்துர்ரஹ்மான், கேமான் மீரான் ஆகியோரும்,
மரைக்கார் பள்ளி - அப்பாபள்ளி ஜமாஅத் நற்பணி மன்றம் (மஜ்வா) சார்பில் எஸ்.அப்துல் வாஹித், எம்.எஸ்.முஹம்மத் ஸாலிஹ், எம்.அப்துர்ரவூஃப், எம்.ஏ.செய்யித் முஹம்மத் ஜியா ஆகியோரும்,
இக்ராஃ கல்விச் சங்கத்தின் சார்பில் அதன் செயலர் (பொறுப்பு) கே.எம்.டி.சுலைமான், துணைச் செயலர் எஸ்.கே.ஸாலிஹ், நிர்வாகி ஹாஜி ஏ.தர்வேஷ் முஹம்மத் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் கலந்தாலோசித்து முடிவெடுக்கப்பட்டவை:
இத்திட்டம் குறித்து நடத்தப்பட்ட கடந்த கூட்டங்களின் விபரங்கள், மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து இக்ராஃ நிர்வாகி ஏ.தர்வேஷ் முஹம்மத் விளக்கிப் பேசினார்.
பெறப்பட்ட விண்ணப்பங்கள்:
இத்திட்டத்தின் கீழ் இக்ராஃ அலுவலகத்திலிருந்து 1750 விண்ணப்பங்கள் வினியோகிக்கப்பட்டதாகவும், அவற்றுள் பூர்த்தி செய்யப்பட்ட 1212 விண்ணப்பங்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த அவர், அவ்விண்ணப்பங்களில்
சீருடைகள் மட்டும் கேட்டு 516 பேரும்,
பாடக்குறிப்பேடுகள் மட்டும் கேட்டு 640 பேரும்,
இரண்டையும் சேர்த்துக் கேட்டு 31 மாணவ-மாணவியரும் விண்ணப்பித்துள்ளதாகத் தெரிவித்தார். 200 மாணவ-மாணவியர் காலதாமதமாக விண்ணப்பித்துள்ளதாகத் தெரிவித்த அவர், அவர்களது விண்ணப்பங்கள் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
பின்னர், இத்திட்டத்தின் கீழ் எந்தெந்த அமைப்புகள் எத்தனை சீருடைகள், பாடக்குறிப்பேடுகள் வழங்கவுள்ளன என்பன பற்றியும்,
மாணவ-மாணவியர் படிக்கும் பள்ளிகள் வாரியாகவும், பகுதி வாரியாக, முஸ்லிம் - முஸ்லிமல்லாதோர் சதவிகித வாரியாக என எந்தெந்த அடிப்படையில் அமைப்புகள் பயனாளிகளைத் தேர்ந்தெடுக்கின்றனர் என்பன குறித்தும் வினவினார்.
இதுகுறித்த நீண்ட கலந்தாலோசனைக்குப் பின், தமதமைப்பின் சார்பில் தேர்ந்தெடுக்கவுள்ள விண்ணப்பங்களின் எண்ணிக்கை மற்றும் தமது வினியோகத் திட்டங்கள் குறித்து அப்போது அமைப்புகளின் பிரதிநிதிகள் கூட்டத்தில் தெரிவித்தனர். பின்னர், இக்கூட்டத்தில் கலந்துகொள்ளவியலாத நிலையிலுள்ள அமைப்புகள் செய்திட முடிவு செய்துள்ள விபரங்கள் குறித்து இக்ராஃ நிர்வாகி தெரிவித்தார்.
அனுசரணையாளர்கள் தேவை:
இத்திட்டத்தின் கீழுள்ள அமைப்புகள் மூலம் கிடைக்கப்பெற்ற அனுசரணைகள் தவிர்த்து பள்ளிச் சீருடைகள் 200 மாணவ-மாணவியருக்கும், பாடக்குறிப்பேடுகள் 100 மாணவ-மாணவியருக்கும் வழங்கப்பட வேண்டுமென்றும், அவற்றுக்கான அனுசரணையாளர்கள் வரவேற்கப்படுவதாகவும், இதுகுறித்து வலைதள ஊடக செய்தி மூலம் உலக காயலர்களுக்கும், காயல் நல மன்றங்களுக்குத் தனியாகவும் தகவல் தெரிவித்து அனுசரணைகளைக் கோருவதென முடிவு செய்யப்பட்டது.
அமைப்புகளின் பொறுப்புகள்:
இப்பணிகளை விரைந்து செய்து முடிப்பதென்றும்,
பள்ளிச் சீருடை / பாடக்குறிப்பேடுகள் இலவச வினியோகத்திற்கான அட்டையை இக்ராஃ ஒருங்கிணைப்பில் பொதுவாக அச்சிடுவதென்றும்,
அந்த வினியோக அட்டையில் தமது அலுவலக முத்திரையிட்டு, வீடு வீடாகச் சென்று நேரடியாக விசாரித்த பின் அந்தந்த அமைப்புகளின் சார்பில் பயனாளிகளுக்கு வினியோக அட்டைகளை வழங்குவதென்றும் முடிவு செய்யப்பட்டது.
ஜூன் முதல் வாரத்திற்குள் பள்ளிச் சீருடை - பாடக்குறிப்பேடுகளை பயனாளிகளுக்கு வழங்க அமைப்பினர் கேட்டுக்கொள்ளப்பட்டனர்.
மே 01இல் அடுத்த கூட்டம்:
இதுகுறித்த அடுத்த கூட்டத்தை 01.05.2011 அன்று காலை 10.00 மணிக்கு இக்ராஃ அலுவலகத்திலேயே கூட்டுவதென்றும்,
தமது பொறுப்பில் எந்தெந்த மாணவ-மாணவியருக்கு என்னென்ன பொருட்களை வழங்குகிறது என்பது குறித்து இறுதி முடிவெடுத்து அமைப்பினர் அக்கூட்டத்தில் தெரிவிக்குமாறும் கேட்டுக்கெளாள்ப்பட்டனர்.
பள்ளிகள் மற்றும் வகுப்புகள் வாரியாக தேவைப்படும் பாடக்குறிப்பேடுகளின் சரியான அளவு குறித்து நகரின் அனைத்துப் பள்ளிகளிடமும் இக்ராஃ கேட்டறிந்து கூட்டத்தில் தெரிவிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
அமைப்புகளின் வினியோகப் பொருட்கள்:
இத்திட்டத்தின் கீழ்,
காயிதேமில்லத் இளைஞர் சமூக அமைப்பின் சார்பில் பாடக்குறிப்பேடுகளும்,
அல்அமீன் இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் பாடக்குறிப்பேடுகளும்,
காயல்பட்டினம் பைத்துல்மால் அறக்கட்டளை சார்பில் பாடக்குறிப்பேடுகள் மற்றும் பள்ளிச் சீருடைகளும்,
த.மு.மு.க. சார்பில் பாடக்குறிப்பேடுகளும்,
அன்னை கதீஜா மத்ரஸா சார்பில் பாடக்குறிப்பேடுகளும்,
அமீரக காயல் நல மன்றம் சார்பில் பாடக்குறிப்பேடுகளும்,
ரியாத் காஹிர் பைத்துல்மால் சார்பில் பாடக்குறிப்பேடுகள் மற்றும் பள்ளிச் சீருடைகளும்,
கத்தர் காயல் நல மன்றம் சார்பில் பள்ளிச் சீருடைகளும்,
குவைத் காயல் நல மன்றம் சார்பில் பள்ளிச் சீருடைகளும்,
ஜெய்ப்பூர் காயல் நல மன்றம் (ஜக்வா) சார்பில் பாடக்குறிப்பேடுகள் மற்றும் பள்ளிச் சீருடைகளும்,
கடற்கரை முஹ்யித்தீன் பள்ளி சார்பில் பாடக்குறிப்பேடுகள் மற்றும் பள்ளிச் சீருடைகளும் வழங்கவுள்ளதாக கூட்டத்தில் இக்ராஃ நிர்வாகி அறிவித்தார்.
புதிதாக இணைந்துள்ள அமைப்புகள்:
இத்திட்டத்தின் கீழ் இணைந்திட காயல்பட்டினம் மரைக்கார் பள்ளி - அப்பாபள்ளி ஜமாஅத் நற்பணி மன்றம் (மஜ்வா) சார்பில் விருப்பம் தெரிவித்தது. அதனை கூட்டம் ஒருமனதாக அங்கீகரித்ததன் அடிப்படையில் அவ்வமைப்பும் இத்திட்டத்தின் கீழ் தமது பகுதி மாணவ-மாணவியருக்கு பள்ளிச் சீருடைகள் மற்றும் பாடக் குறிப்பேடுகளை வழங்கும் என அவ்வமைப்பின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து, பஹ்ரைன் காயல் நல மன்றம் (பக்வா) அமைப்பும் இத்திட்டத்தின் கீழ் இணைந்து பள்ளிச் சீருடைகள் வழங்க விரும்புவதாக அவ்வமைப்பின் முன்னாள் செயலர் ஆசிரியர் எஸ்.எம்.அஹ்மத் சுலைமான் தெரிவித்ததையும் கூட்டம் ஒருமனதாக ஏற்றுக்கொண்டது.
இறுதியாக ஹாஃபிழ் எம்.எம்.முஹம்மத் சுல்தான் துஆவுடன் இரவு 10.00 மணியளவில் கூட்டம் நிறைவுற்றது.
இக்கூட்டத்தைத் தொடர்ந்து, இது குறித்து இக்ராஃ நிர்வாகி தொடர்புகொண்டதையடுத்து தம்மாம் காயல் நற்பணி மன்றமும், RIDA CHARITABLE TRUST அமைப்பும் இத்திட்டத்தின் கீழ் இணைந்து பள்ளிச் சீருடைகள் - பாடக் குறிப்பேடுகள் வழங்க ஒப்புதல் தெரிவித்துள்ளதாகவும், இத்தனை அனுசரணைகளும் போக இன்னும் தேவைப்படும் அனுசரணைகளுக்காக முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்த இக்ராஃ நிர்வாகி ஏ.தர்வேஷ் முஹம்மத், இத்திட்டத்தின் கீழ் அமைப்புகள் வழங்கிடும் பாடக் குறிப்பேடுகள் - பள்ளிச் சீருடைகளின் சரியான எண்ணிக்கை விபரம் இறுதிப்படுத்தப்பட்ட பின்னர் செய்தியாக வெளியிடப்படும் என்றும் தெரிவித்தார்.
தகவல்:
K.M.T.சுலைமான்,
செயலாளர் (பொறுப்பு),
இக்ராஃ கல்விச் சங்கம், காயல்பட்டினம். |