தமிழகத்தின் இரண்டாம் மாநில தேர்தல்கள் - அப்போதைய மெட்ராஸ் மாநிலத்தில், 1957 ஆம் ஆண்டு மார்ச் மாதம் - 5 நாட்களாக நடந்தது. மார்ச் 1, மார்ச் 4, மார்ச் 6, மார்ச் 8, மற்றும் மார்ச் 11 ஆகிய தேதிகளில் நடந்த தேர்தலில், 167 தொகுதிகளில், 205 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
தொகுதிகளை விட உறுப்பினர்கள் எண்ணிக்கை அதிகம் இருந்ததற்கான காரணம் - 167 தொகுதிகளில், 38 தொகுதிகள் இரு உறுப்பினர்களை தேர்வு செய்தது. அத்தொகுதிகளின் வாக்காளர்கள் எண்ணிக்கை அதிகமாக இருந்ததே இதற்கு முக்கிய காரணம். 1952 ஆம் ஆண்டு தேர்தலில் இரு உறுப்பினர்களை தேர்வு செய்த திருச்செந்தூர், இம்முறை ஒரு உறுப்பினரையே தேர்வு செய்தது.
887 வேட்பாளர்கள் போட்டியிட்ட இத்தேர்தலில், மொத்த சுமார் 1 கோடியே, 74 லட்ச வாக்காளர்களில் - 46.56 சதவீத வாக்காளர்கள், தங்கள் வாக்கினை அளித்தனர்.
திருசெந்தூர் தொகுதியில் 4 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். தொகுதியின் மொத்த வாக்காளர்கள் 99,432. இதில் 47,340 வாக்காளர்கள் (47.61 சதவீதம்) தங்கள் வாக்கினை அளித்தனர்.
காங்கிரஸ் வேட்பாளர் எம்.எஸ்.செல்வராஜன் 30,106 வாக்குகள் பெற்று வெற்றிப்பெற்றார்.
சுயேச்சை வேட்பாளர்கள்
- எம்.ஆர்.மேகநாதன் 15,229 வாக்குகளும்,
- ஒ.பொன் சுவாமி 955 வாக்குகளும்,
- சிகாமணி 750 வாக்குகளும்
பெற்றனர்.
மாநிலத்தின் 205 இடங்களில் காங்கிரஸ் 151 இடங்கள் வென்று மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது. மீண்டும் காமராஜர் முதல்வரானார்.
திராவிட முன்னேற்ற கழகம் (தி.மு.க.) 13 இடங்களை வென்றது. இது தான் தி.மு.க. பங்கேற்ற முதல் தேர்தலாகும். இத்தேர்தலின் போது தி.மு.க. விற்கு தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் கிடையாது. தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் அடுத்த தேர்தலில் தான் (1962) தி.மு.க. விற்குகிடைத்தது.
தேர்தலில் போட்டியிடும் முடிவினை தி.மு.க. 1956 ஆம் ஆண்டு திருச்சியில் நடந்த மாநாட்டில் எடுத்திருந்தது. தி.மு.க. 117 சட்டசபை தொகுதிகளிலும், 8 பாராளுமன்ற தொகுதிகளிலும் போட்டியிட்டது. தி.மு.க. தலைவர்கள் அண்ணாதுரை (காஞ்சீபுரம்), கருணாநிதி (குளித்தலை), அன்பழகன் (எழும்பூர்) ஆகியோர் முதல் முறையாக சட்டசபைக்குள் இத்தேர்தல் மூலம் தான் உறுப்பினர்களாக நுழைந்தனர்.
பெரியார் தலைமையிலான திராவிடர் கழகம் - காமராஜர் தலைமையிலான காங்கிரஸ் கட்சிக்கு தனது ஆதரவை தெரிவித்திருந்தது. சொந்த விருப்பில் தரப்படும் ஆதரவை வேண்டாம் என சொல்லமாட்டேன் என கூறிய காமராஜர், தி.க.வின் கொள்கைகளை ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்தார். காமராஜர் - பெரியாரின் ஆதரவினை ஏற்றுக்கொண்டதை விரும்பாத சில காங்கிரஸ் அங்கத்தினர், இறுதி நேரத்தில் காங்கிரஸ் சீர்திருத்தக் கட்சி (Congress Reform Party) என புதிய கட்சிய துவக்கி, தேர்தலில் (55 சட்டசபை தொகுதிகளிலும், 12 பாராளுமன்ற தொகுதிகளிலும்) போட்டியிட்டனர்.
காங்கிரஸ் சீர்திருத்தக் கட்சி (Congress Reform Party) 9 இடங்களும், சி.பி.ஐ. கட்சி 4 இடங்களும், பார்வர்ட் பிளாக் 3 இடங்களும், பிரஜா சோசியலிஸ்ட் கட்சி 2 இடங்களும், சோசியலிஸ்ட் கட்சி 1 இடமும், சுயேட்சைகள் 22 இடமும் இத்தேர்தலில் வென்றனர்.
[பாகம் 1] [பாகம் 2] [பாகம் 3]
[பாகம் 4] [பாகம் 5] [பாகம்
6]
[தொடரும்]
|