தமிழகத்தில் மின் கட்டணம் செலுத்துவதில் குளறுபடி நிலவுவதால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
தமிழகம் முழுவதும் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மின் கட்டணம் செலுத்தும் முறை இருந்து வந்தது. முதல் மாதம் கணக்கெடுக்கப்பட்டால் அடுத்தமாதம் 15ஆம் தேதிக்குள் மின் கட்டணம் செலுத்த வேண்டும். இந்த முறையில் பொதுமக்கள் சிரமமின்றி மின்கட்டணம் செலுத்தி வந்தனர்.
15ஆம் தேதிக்குள் மின் கட்டணம் கட்டத் தவறியவர்களுக்கு மட்டும் மின் இணைப்பு துண்டிக்கப்படுவதோடு அபராதமும் விதிக்கப்பட்டு வந்தது.இந்நிலையில், 6 மாதங்களுக்கு முன்பு தமிழக அரசு புதிய மின் கட்டணம் செலுத்தும் முறையை அறிமுகப்படுத்தியது.
இதில் மாதம்தோறும் கணக்கீடு செய்யப்பட்டு, அந்த தேதியில் இருந்து 20 நாள்களுக்குள் மின் கட்டணம் செலுத்த வேண்டும் என்ற புதிய உத்தரவை அரசு பிறப்பித்தது.
2 மாதங்களுக்கு முன்பு இந்த புதிய திட்டம் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது. கணக்கெடுப்பவர்கள் எந்த நேரத்தில் வருவார்கள் என்பது தெரியாததால் பொதுமக்கள், வியாபாரிகள் கடும் அவதியடைந்துள்ளனர். மின் கட்டணம் செலுத்தாத மின் இணைப்பைத் துண்டித்து அபராதமும் விதிக்கிறார்கள். இதனால் மின்வாரிய ஊழியர்களுக்கும், பொதுமக்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்படுகிறது.
எனவே பழைய முறைப்படியே கணக்கெடுத்து மின் கட்டணம் செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நன்றி:
தினமணி நாளிதழ் (நெல்லை பதிப்பு - நாள்: 22.04.2011) |