இத்தொடரின் பாகம் 1 இல் 1977 ஆண்டில் நடைபெற்ற தமிழக சட்டசபைக்கான தேர்தல் குறித்த தகவலை
கண்டோம். 1980 மற்றும் அதற்கு பிறகு நடந்த தேர்தல்கள் குறித்த தகவல்களை காணும் முன் - இந்திய சுதந்திரத்திற்கு பின், 1952, 1957, 1962,
1969, 1971 ஆகிய ஆண்டுகளில் நடந்த தேர்தல்கள் பற்றி காண்போம்.
சுதந்திர இந்தியாவின் முதல் மாநில தேர்தல்கள் - அப்போதைய மெட்ராஸ் மாநிலத்தில், 1952 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் - 9 நாட்களாக நடந்தது.
ஜனவரி 2, ஜனவரி 5, ஜனவரி 8, ஜனவரி 9, ஜனவரி 11, ஜனவரி 12, ஜனவரி 16, ஜனவரி 21 மற்றும் ஜனவரி 25 ஆகிய தேதிகளில்
நடந்த தேர்தலில், 309 தொகுதிகளில் 375 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
தொகுதிகளை விட உறுப்பினர்கள் எண்ணிக்கை அதிகம் இருந்ததற்கான காரணம் - 309 தொகுதிகளில், 66 தொகுதிகள் இரு உறுப்பினர்களை தேர்வு
செய்தது. அத்தொகுதிகளின் வாக்காளர்கள் எண்ணிக்கை அதிகமாக இருந்ததே இதற்கு முக்கிய காரணம். திருச்செந்தூர் தொகுதியும் இரு
உறுப்பினர்களை தேர்வு செய்தது குறிப்பிடத்தக்கது.
1674 வேட்பாளர்கள் போட்டியிட்ட இத்தேர்தலில், மொத்த சுமார் 2 கோடியே, 69 லட்ச வாக்காளர்களில் - 54.75 சதவீத வாக்காளர்கள், தங்கள்
வாக்கினை அளித்தனர்.
திருசெந்தூர் தொகுதியில் 13 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். தொகுதியின் மொத்த வாக்காளர்கள் 154,748. இதில் 106,475 வாக்காளர்கள் (68.81
சதவீதம்) தங்கள் வாக்கினை அளித்தனர்.
கிசான் மஜ்தூர் பிரஜா கட்சியின் ஆதித்தன் 25,030 வாக்குகள் பெற்று முதலாவதாக வந்தார்.
காங்கிரஸ் வேட்பாளர் வீ.ஆறுமுகம் 22,341 வாக்குகள் பெற்று இரண்டாவதாக வந்தார். இருவரும் சட்டசபைக்கு தேர்வு செய்யப்பட்டனர்.
மற்றொரு காங்கிரஸ் வேட்பாளர் சுப்ரமணிய ஆதித்தன் 21,224 வாக்குகளும்,
சோசியலிஸ்ட் கட்சி வேட்பாளர் பிச்சு 9,177 வாக்குகளும்,
சுயேச்சை வேட்பாளர்கள்
- சண்முகம் 4,850 வாக்குகளும்,
- முத்து 4,791 வாக்குகளும்,
- முத்தையா 4,691 வாக்குகளும்,
- அண்ணல் ஜாபியத் 3,886 வாக்குகளும்,
- வீ.அழகப்பன் 3,127 வாக்குகளும்,
- சீனி குடும்பன் 2,696 வாக்குகளும்,
- என்.வேலுநாரயணன் 1,834 வாக்குகளும்,
- தங்கவேலு 1,458 வாக்குகளும்,
- எபர் குலசேகர ராஜ் 1,370 வாக்குகளும்
பெற்றனர்.
மாநிலத்தில் 375 இடங்களில் காங்கிரஸ் 152 இடங்கள் வென்றது. சி.பி.ஐ. கட்சி 62 இடங்களை பெற்றது. கிசான் மஜ்தூர் பிரஜா கட்சி 35 இடமும், Tamil Nadu Toilers கட்சி 19 இடமும், சோசியலிஸ்ட் கட்சி 13 இடமும், க்ரிஷிகர் லோக் கட்சி 15 இடமும், Commonweal கட்சி 16 இடமும், மெட்ராஸ் மாநில முஸ்லிம் லீக் 5 இடமும், பார்வர்ட் பிளாக் (மார்சிஸ்ட்) 3 இடமும், அகில இந்திய தாழ்த்தப்பட்டோர் கூட்டமைப்பு 2 இடமும், நீதிக்கட்சி 1 இடமும், சுயேட்சைகள் 62 இடமும் வென்றனர்.
எந்த ஒரு கட்சிக்கும் தனிப்பட்ட மெஜாரிட்டி கிடைக்காத சூழலில், ராஜாஜி தலைமையில் காங்கிரஸ் கட்சி - பிற கட்சிகளின் ஆதரவோடு, ஏப்ரல் 1,
1952 அன்று ஆட்சிக்கு வந்தது.
அப்போதைய மெட்ராஸ் மாநிலம் தெலுங்கு மற்றும் கன்னட மொழிகள் பேசும் பல பகுதிகளை கொண்டிருந்தது. 1953 ஆம் ஆண்டு நடந்த
ஆர்ப்பாட்டங்களின் விளைவாக அப்பகுதிகள் ஆந்திரா மற்றும் மைசூர் மாநிலங்களுக்கு மாற்றப்பட்டது. அதனை தொடர்ந்து மெட்ராஸ் சட்டசபையின்
140 உறுப்பினர்கள் ஆந்திர மாநிலத்திற்கும், 5 உறுப்பினர்கள் மைசூர் மாநிலத்திற்கும் சென்றனர். மெட்ராஸ் சட்டசபையின் உறுப்பினர்
எண்ணிக்கை 230 ஆக குறைந்தது.
இத்தருணத்தில் காங்கிரஸ் அரசாங்கம் அறிமுகப்படுத்த முயற்சி செய்த குலக் கல்வித் திட்டத்தினை எதிர்த்து மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன.
இவைகளின் பின்னணியில் மார்ச் 31, 1954 அன்று - காங்கிரஸ் கட்சியின் மாநில தலைமை பொறுப்பில் இருந்து ராஜாஜி நீக்கப்பட்டு,
அப்பொறுப்புக்கு காமராஜர் தேர்வு செய்யப்பட்டார். அதனை தொடர்ந்து ஏப்ரல் 13 அன்று காமராஜர் மெட்ராஸ் மாநில முதல்வராக தேர்வு
செய்யப்பட்டார்.
1917 ஆம் ஆண்டு நீதிக்கட்சி மெட்ராஸ் மாநிலத்தில் உருவாகியிருந்தது. 1920 - 1937 காலகட்டத்தில் நீதிக்கட்சி மெட்ராஸ் மாகாணத்தின் பிரதான கட்சியாக திகழந்தது. பெரியாரால் 1925 ஆம் ஆண்டு சுய மரியாதை இயக்கம் துவக்கப்பட்டிருந்தது. 1937 ஆம் ஆண்டு நடந்த தேர்தலுக்கு பிறகு நீதிக்கட்சியின்
செல்வாக்கு சரிய துவங்கியது. நீதிக்கட்சியில் பெரியாரின் சுய மரியாதை இயக்கம் இணைந்தப்பிறகு, 1944 ஆம் ஆண்டு திராவிடர் கழகம் என
நீதிக்கட்சி பெயர் மாற்றப்பட்டது. இதனை ஏற்றுக்கொள்ளாத சிலர் நீதிக்கட்சி என்ற பெயரில் கட்சியினை தொடர்ந்தனர்.
1949 ஆம் ஆண்டு பெரியாருடன் இருந்து விலகி, அறிஞர் அண்ணா - திராவிட முன்னேற்ற கழக கட்சியை துவக்கினர்.
1952 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் தி.மு.க. போட்டியிடவில்லை என்றாலும் அக்கட்சி வன்னியர்களின் கட்சிகளான - Tamil Nadu Toilers கட்சி, Commonweal கட்சி ஆகியவைகளையும், சில சுயேட்சைகளையும் ஆதரித்தது. திராவிட கழக கட்சியும் தேர்தலில் போட்டியிடவில்லை. திராவிட கழக கட்சி கம்யூனிஸ்டுகளை ஆதரித்தது. நீதிக்கட்சி ஒன்பது இடங்களில் போட்டியிட்டு ஒரு இடத்தில வெற்றிப்பெற்றது.
[பாகம் 1] [பாகம் 2] [பாகம் 3]
[பாகம் 4] [பாகம் 5] [பாகம்
6]
[தொடரும்]
|