காயல்பட்டினம் - வீரபாண்டியன்பட்டினம் இடையே உள்ள காட்டு மகுதூம் பள்ளியில் அடங்கப்பெற்றுள்ள மஹான் முத்து மகுதூம் வலிய்யுல்லாஹ் அவர்களின் நினைவு நாள் கந்தூரி வைபவம் 20.04.2011 (நேற்று) நடைபெற்றது.
முன்னதாக, 05.04.2011 செவ்வாய்க்கிழமை மாலை 06.30 மணிக்கு கொடியேற்றத்துடன் வைபவ நிகழ்ச்சிகள் துவங்கின. 06.04.2011 முதல் 19.04.2011 வரை தினமும் மாலை 04.30 மணிக்கு மஹான் அவர்கள் மீது மர்ஹூம் அல்லாமா நஹ்வீ முஹம்மத் இஸ்மாஈல் ஆலிம் முஃப்தீ அவர்களால் கோர்வை செய்யப்பட்ட மவ்லித் ஓதப்பட்டது.
19.04.2011 அன்று இரவு மஃரிப் தொழுகைக்குப் பின், ராத்திபத்துல் காதிரிய்யா திக்ர் மஜ்லிஸ் கலீஃபா மவ்லவீ ஓ.எம்.அப்துல் காதிர் தலைமையில் நடைபெற்றது.
20.04.2011 புதன்கிழமை காலை ஃபஜ்ர் தொழுகைக்குப் பின் மஹான் அவர்களின் பெயரில் கத்முல் குர்ஆன் ஓதி தமாம் செய்யப்பட்டது. அன்று காலை 10.00 மணிக்கு, காட்டு மகுதூம் பள்ளி இமாம் மவ்லவீ ஹாஃபிழ் கே.எஃப்.அஹ்மத் பஷீர் ஸிராஜீ தலைமையில் மவ்லித் மஜ்லிஸ் நடைபெற்றது.
மாலை 04.30 மணிக்கு கந்தூரி நிகழ்ச்சி துவங்கியது. மஹ்ழரா அரபிக்கல்லூரியின் தஜ்வீத் பிரிவு ஆசிரியர் ஹாஃபிழ் காரீ சொளுக்கு முஹ்யித்தீன் அப்துல் காதிர் தவ்ஹீத் கிராஅத் ஓதி நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார்.
தொடர்ந்து, தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் தூத்துக்குடி மாவட்டத் தலைவரும், காயல்பட்டினம் அல்ஜாமிஉஸ் ஸகீர் - சிறிய குத்பா பள்ளியின் கத்தீபும், ஜாவியா அரபிக்கல்லூரியின் முதல்வருமான மவ்லவீ எஸ்.எம்.முஹம்மத் ஃபாரூக் ஃபாஸீ “வலிய்யுல்லாக்களின் உயர்பண்புகள்” என்ற தலைப்பிலும்,
காயல்பட்டினம் அல்மத்ரஸத்துல் ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தின் பேராசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.எச்.பாதுல் அஸ்ஹப் ஃபாஸீ “மஹான் முத்து மகுதூம் வலிய்யுல்லாஹ் அவர்களின் வரலாற்றுச் சுருக்கம்” என்ற தலைப்பிலும் சிறப்புரையாற்றினர்.
இறுதியாக மவ்லவீ ஹாஃபிழ் மக்கீ எம்.எம்.ஹாமித் லெப்பை ஃபாஸீ துஆ ஓத நிகழ்ச்சிகள் நிறைவுற்றன. இவ்வைபவத்தில் காயல்பட்டினம் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளிலிருந்து திரளான ஆண்களும், பெண்களும் கலந்துகொண்டனர். அனைவருக்கும் தபர்ருக் எனும் நேர்ச்சை வினியோகம் செய்யப்பட்டது.
வைபவ ஏற்பாடுகளை காட்டு மகுதூம் பள்ளிவாசல் நிர்வாக அதிகாரியான நெல்லை வக்ஃப் கண்காணிப்பாளர் தலைமையில் ஹாஜி எஸ்.டி.வெள்ளைத்தம்பி, ஹாஜி வாவு செய்யித் அப்துர்ரஹ்மான், ஹாஜி சொளுக்கு முஹம்மத் இஸ்மாஈல் என்ற முத்து ஹாஜி, ஹாஜி பிரபு எம்.ஏ.சுல்தான், ஹாஜி கே.எஸ்.எச்.மஹ்மூத் நெய்னா ஆகிய பொறுப்புக்குழுவினரும்,
ஹாஜி ஏ.ஆர்.அஜ்மல் புகாரீ, ஹாஜி எம்.ஏ.செய்யித் முஹம்மத் அலீ, ம.கு.காதர், ஹாஜி எச்.எம்.முஹம்மத் முஹ்யித்தீன், ஹாஜி எம்.ஏ.எஸ்.ஜரூக், ஹாஜி எஸ்.இ.எம்.புகாரீ, ஹாஜி எஸ்.ஏ.மூஸா, ஹாஜி காஜா ஹைதர் அலீ, ஹாஜி எம்.கே.எம்.புகாரீ, ஹாஜி எல்.எம்.இ.கைலானீ, எம்.இ.எல்.முஹ்யித்தீன், எம்.கே.எஸ்.சுலைமான் லெப்பை, சொளுக்கு முஹ்யித்தீன் அப்துல் காதிர், எஸ்.ஏ.ஜெய்னுல் ஆபிதீன், எம்.என்.அஷ்ரஃப் ஆகியோர் செய்திருந்தனர்.
கந்தூரி வைபவத்தை முன்னிட்டு, காயல்பட்டினம் அல்ஜாமிஉல் கபீர் - பெரிய குத்பா பள்ளியில் 17,18,19 தேதிகளில் மஹான் அவர்களின் பெயரில் கத்முல் குர்ஆன் ஓதி தமாம் செய்யப்பட்டது. |