புனர்நிர்மாணம் செய்யப்பட்டு வரும் காயல்பட்டினம் மகுதூம் பள்ளிவாசலில் கட்டி முடிக்கப்பட்டுள்ள தரைதளத்தில் 17.04.2011 ஞாயிற்றுக்கிழமையன்று முறைப்படி தொழுகை துவக்கப்பட்டுள்ளது.
இதற்காக நடத்தப்பட்ட எளிய நிகழ்ச்சி குறித்து பள்ளி நிர்வாகத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
வல்ல அல்லாஹ்வின் பேரருளால் நமது மகுதூம் பள்ளிவாசல் புனரமைப்புப் பணிகள் செவ்வனே நடந்தேறி வருகிறது. கட்டி முடிக்கப்பட்டுள்ள தரைதளத்தில், ஹிஜ்ரீ 1432, ஜமாதியுல் அவ்வல் மாதம் 12ஆம் நாளன்று (17.04.2011) முறைப்படி தொழுகை துவங்கியது.
இதற்காக பள்ளி வளாகத்தில் எளிய நிகழ்ச்சியொன்று நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு கண்ணியத்திற்குரிய கலீஃபத்துஷ் ஷாதுலீ மவ்லவீ எஸ்.எம்.முத்துவாப்பா ஃபாஸீ தலைமை தாங்கினார். ஹாஜி எம்.எம்.உவைஸ், ஹாஜி எஸ்.எம்.மிஸ்கீன் ஸாஹிப் ஃபாஸீ, ஹாஜி ஏ.ஆர்.லுக்மான், நகர்மன்றத் தலைவர் ஹாஜி வாவு செய்யித் அப்துர்ரஹ்மான், பள்ளி கட்டிடக்குழு தலைவர் ஹாஜி ஏ.ஆர்.இக்பால், ஹாஜி கத்தீப் ஸலீம், ஹாஜி எஸ்.டி.லபீப் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நாவலர் ஹாஜி எல்.எஸ்.இப்றாஹீம் நிகழ்ச்சிகளைத் தொகுத்தளித்தார். ஹாஃபிழ் எஸ்.ஆஷிக் கிராஅத் ஓதி நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார்.
தமிழக அமைச்சர் டி.பி.எம்.மைதீன்கான் இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். காயல்பட்டினம் ஜாவியா அரபிக்கல்லூரியின் துணை முதல்வர் மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.கே.எம்.காஜா முஹ்யித்தீன் காஷிஃபீ சிறப்பு சொற்பொழிவாற்றினார்.
லேண்ட்மார்க் ஹாஜி ராவன்னா அபுல்ஹஸன் நன்றி கூற, பள்ளி இமாம் மவ்லவீ ஹாஃபிழ் அப்துல்லாஹ் ஃபாஸீ துஆவுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.
பின்னர் கண்ணியத்திற்குரிய கலீஃபத்துஷ் ஷாதுலீ மவ்லவீ எஸ்.எம்.முத்துவாப்பா ஆலிம் ஃபாஸீ அவர்கள் குளிரூட்டப்பட்ட உட்பள்ளி நுழைவாயிலைத் திறக்க, அவர்களது தலைமையில் அனைவரும் கட்டி முடிக்கப்பட்டுள்ள புதிய தரைதளத்தில் தொழுகைக்காக உட்சென்று, தஹிய்யத்துல் மஸ்ஜித் எனும் பள்ளி காணிக்கைத் தொழுகை இரண்டு ரக்அத் தொழுதனர்.
பின்னர் மஃரிப் தொழுகைக்கான அதானை பள்ளி கட்டிடக் குழு உறுப்பினர் எம்.ஏ.முஹம்மத் இப்றாஹீம் கூற, பள்ளியின் இமாம் மவ்லவீ ஹாஃபிழ் அப்துல்லாஹ் ஃபாஸீ தொழுகையை வழிநடத்தினார்.
இந்நிகழ்ச்சியில் பள்ளியின் மஹல்லாவாசிகளும், நகர பொதுமக்களும் திரளாகக் கலந்துகொண்டனர்.
அன்று இஷா தொழுகைக்குப் பின் புதிய கட்டிடத்பை பார்வையிடுவதற்காக பெண்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டது. சுமார் 500 பெண்கள் பள்ளிக்குள் வந்து இரண்டு ரக்அத் தஹிய்யத்துல் மஸ்ஜித் தொழுது, துஆ செய்தனர்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை பள்ளி கட்டிடக் குழுவினரான ஹாஜி ஏ.ஆர்.இக்பால், ஹாஜி எல்.எம்.இ.கைலானீ, ஹாஜி எஸ்.டி.லபீப் மற்றும் பலர் செய்திருந்தனர்.
பள்ளி கட்டிடப்பணிகளை முன்னிட்டு தற்காலிகமாக பள்ளியையொட்டிய ஃபாயிஸீன் சங்க வளாகத்தில் ஐவேளைத் தொழுகை நடைபெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
M.A.முஹம்மத் இப்றாஹீம் (48)
படங்கள்:
M.M.ஷாஹுல் ஹமீத் (மரைக்கார் பள்ளித் தெரு),
ஹம்ஸா இஸ்மாஈல்
மற்றும்
M.A.முஹம்மத் இப்றாஹீம் (48). |