கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில், காயல்பட்டினம் நகர மக்களை ஒன்றிணைத்து நகர்நலப் பணிகளாற்றிடும் பொருட்டு செயல்பட்டு வரும் அமைப்பு திருவனந்தபுரம் காயல் நல மன்றம். இம்மன்றத்தின் 3ஆவது பொதுக்குழுக் கூட்டம் புற்றுநோய் விழிப்புணர்வு முகாமாகவே நடைபெற்று முடிந்துள்ளது.
கூட்ட நிகழ்வுகள் குறித்து அம்மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
நிகழ்முறை:
வல்ல அல்லாஹ்வின் பேரருளால் எமது திருவனந்தபுரம் காயல் நல மன்றத்தின் மூன்றாவது பொதுக்குழுக் கூட்டம் 17.04.2011 ஞாயிற்றுக்கிழமையன்று காலை 10.30 மணிக்கு, திருவனந்தபுரம் அட்டக்குளங்கரை காவல் நிலையம் எதிரிலுள்ள இக்பால் நூலக அரங்கில் நடைபெற்றது.
ஜனாப் எஸ்.எம்.ஷாஹுல் ஹமீத் கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். ஹாஜி சுலைமான் (48), ஹாஜி எஸ்.ஒய்.நூஹ் ஸாஹிப் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மவ்லவீ ஹாஃபிழ் ஜே.ஏ.தாவூத் மாஹின் மஹ்ழரீ கிராஅத் ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார். மன்றத் தலைவர் எம்.முஹம்மத் அப்துல் காதிர் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
பின்னர் கூட்டத் தலைவர் எஸ்.எம்.ஷாஹுல் ஹமீது தலைமையுரையாற்றினார். மன்ற உறுப்பினர்கள் மன்றச் செயல்பாடுகளில் மிகுந்த ஆர்வத்துடன் செயல்பட வேண்டுமென்றும், அதன் முதற்கட்டமாக உறுப்பினர் சந்தா தொகையை நிலுவையின்றி, தாமதமின்றி உடனுக்குடன் கொடுத்து ஒத்துழைக்க வேண்டுமென்றும் உறுப்பினர்களை அவர் கேட்டுக்கொண்டார்.
திருவனந்தபுரத்தில் முத்துச்சாவடி:
காயல்பட்டினம் மக்களுக்கு மிகுந்த பயனளித்திடும் பொருட்டு திருவனந்தபுரத்தில் முத்துச்சாவடி ஒன்றை அமைத்திட வேண்டுமென மன்றத்தின் துவக்கக் கூட்டத்தின்போது அறிவிக்கப்பட்ட பின்னர், அதற்காக பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறபோதிலும், இதுவரையிலும் குறிப்பிடத்தக்க அளவில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்பதை வருத்தத்துடன் சுட்டிக்காட்டிய அவர், இப்பொறுப்புகள் யாரோ சில தனிப்பட்ட உறுப்பினர்களைச் சார்ந்தது என்று அலட்சியமாக இருந்துவிடாமல் நம் நகருக்கு பயன்தரும் இந்த விஷயத்தில் நம் யாவரின் ஒருமித்த ஒத்துழைப்பு அவசியம் இருக்க வேண்டும் என்ற உறுதியுடன் அனைத்து உறுப்பினர்களும் திறம்பட செயல்பட்டால் மட்டுமே இத்திட்டம் சாத்தியமாகும் என்று அவர் குறிப்பிட்டார்.
தலைவர் முன்னுரையைத் தொடர்ந்து, மன்றத்தின் கடந்த ஓராண்டு செயல்பாடுகள் குறித்தும், சிறப்பு விருந்தினரை அறிமுகப்படுத்தியும் மன்றத்தின் துணைச் செயலாளர் ஹாஃபிழ் ஜே.ஏ.செய்யித் ஸதக்கத்துல்லாஹ் விளக்கிப் பேசினார்.
உறுப்பினர்கள் பொறுப்புகளைப் பகிர்ந்து எடுக்க வேண்டும்:
மன்றத்தின் சார்பில் சந்தா வசூலிப்பு, கூட்ட ஏற்பாடு, அதற்கான இடம், சிறப்பு விருந்தினர், உறுப்பினர்களுக்கு அழைப்பு, மதிய உணவு, சிற்றுண்டி உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளையும் குறிப்பிட்ட ஓர் உறுப்பினர் மட்டுமே செய்து வருவதாகவும், அனைத்து உறுப்பினர்களும் இந்த ஏற்பாட்டுப் பணிகளைப் பகிர்ந்துகொண்டால் மட்டுமே இறையருளால் இம்மன்றம் நகர்நலப் பணிகளில் நீடித்திருக்கும் என்றும் அவர் அப்போது தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்ட தாருத்திப்யான் நெட்வர்க் நிறுவனர் ஹாஃபிழ் எஸ்.கே.ஸாலிஹ் சிறப்புரையாற்றினார். அவர் தனதுரையில் தெரிவித்ததாவது:-
மன்றத்திற்கு பாராட்டு:
உலகின் எத்தனையோ பகுதிகளில் காயலர்கள் பல்கிப் பெருகி வாழ்ந்துவந்தாலும், சில குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே காயல் நல மன்றங்கள் துவக்கப்பட்டு நகர்நலப் பணிகளாற்றப்பட்டு வருகிறது.
திருவனந்தபுரத்தை விடவும் கூடுதலான காயலர்கள் வசிக்கும் கல்கத்தா நகரில் இன்று வரை காயல் நல மன்றம் துவக்கப்படுவதற்காகன முயற்சிகள் வெறும் முயற்சிகளாகவே உள்ளன. மும்பை நகரில் ஏராளமான காயலர்கள் இருந்தும் அங்கும் முறைப்படியான நகர்நல அமைப்பொன்றை நிறுவும் முயற்சி நடைபெற்றுக் கொண்டே இருக்கும் இத்தருணத்தில், மிகுந்த சிரமங்களுக்கிடையில் உதித்து, தனது மூன்றாம் வயதில் அடியெடுத்து வைத்திருக்கும் திருவனந்தபுரம் காயல் நல மன்றம் உண்மையில் பாராட்டுக்குரியதாகும்.
உறுப்பினர்கள் தமது சந்தா தொகைகளை ஆர்வத்துடன் தந்து ஒத்துழைக்க வேண்டுமெனவும், பணிகளில் ஆர்வத்துடன் பங்கேற்க வேண்டுமெனவும் இக்கூட்டத்தில் பலரும் தெரிவித்தனர். பொதுவாக எந்தவோர் அமைப்பானாலும் அதில் நேர்ந்துவிட்டாற்போல் ஒரு சிலர் மட்டுமே அனைத்துப் பொறுப்புகளையும் சுமக்க வேண்டிய நிலைதான் இன்று வரை நடைமுறையில் இருந்து வருகிறது. இந்த எண்ணத்தில் மாற்றம் ஏற்பட்டு, அனைவரும் ஆர்வத்துடன் செயலாற்றினால் அமைப்பை நிர்வகிக்க நிர்வாகிகளுக்கும், அங்கம் வகிக்க உறுப்பினர்களுக்கும் மிகுந்த ஆர்வம் ஏற்படும்.
தனிநபர் உதவிகளைத் தவிர்த்தல்:
திருவனந்தபுரம் காயல் நல மன்றத்தைப் பொருத்த வரை, கல்வி, மருத்துவம், சிறுதொழில் உள்ளிட்டவற்றுக்காக தனிநபர்களுக்கு உதவி வழங்கும் திட்டத்தை மன்றத்திற்கு நிலையான வருமானத்தை ஏற்படுத்தும் வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கலாம்... அதற்குப் பகரமாக, கூட்டத் தலைவர் தெரிவித்ததைப் போல திருவனந்தபுரத்தில் முத்துச்சாவடி அமைப்பதற்கான முயற்சிகளில் அனைத்து உறுப்பினர்களும் முழு முனைப்புடன் ஈடுபட்டால் அதுதான் சிறந்த ஒரு செயலாக இருக்கும்.
உலக கா.ந.மன்றங்களின் செயல்பாடுகளில் ஒருங்கிணைதல்:
அதுவரை, அனைத்துலக காயல் நல மன்றங்களால் காயல்பட்டினம் நகரில் செயல்படுத்தப்பட்டு வரும் கல்வி - மருத்துவ விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், செயல்திட்டங்கள் உள்ளிட்டவற்றில் திருவனந்தபுரம் காயல் நல மன்றமும் தனது குறிப்பிடத்தக்க பங்களிப்பின் மூலம் நகர்நலப் பணிகளில் இணைந்து செயலாற்றலாம்.
அமைப்பிற்கு விளம்பரம் அவசியம்:
இன்று அனைத்துலக காயல் நல மன்றங்களின் நடவடிக்கைகள் அனைத்துலக காயலர்களாலும் ஊடகம் வாயிலாக பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. எனவே, எங்களுக்கு விளம்பரம் தேவையில்லை என்று கருதி அமைப்பின் முக்கிய அமர்வுகளை பதிவு செய்யாமல் விட்டு விட வேண்டாம். தனி நபருக்கு விளம்பரம் தேவையில்லை என்பது அவரது பெருந்தன்மையைக் காட்டும். அதே நேரத்தில் ஓர் அமைப்பிற்கு விளம்பரம் அவசியம் தேவை. அது தேவையில்லை என்று கருதினால், நம்மையும் அறியாமல் நாம் ஒரு மிகப்பெருங்குறையை செய்துகொண்டிருக்கிறோம் என்றே கருத வேண்டும்.
இம்மன்றத்தின் துவக்கக் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக என்னைக் கலந்துகொள்ளச் செய்த நீங்கள், இரண்டாவது பொதுக்குழுவிலும், மீண்டும் அந்த வாய்ப்பை இந்த மூன்றாவது கூட்டத்திலும் வழங்கியிருக்கிறீர்கள். இதற்கு நான் மிகுந்த கடமைப்பட்டுள்ளேன். இந்த அமைப்பின் நகர்நலப் பணிகளில், ஊரிலிருந்தவாறு என்னாலியன்ற அனைத்து ஒத்துழைப்புகளையும் நிறைவாகத் தந்திட நான் ஆயத்தமாக உள்ளேன்.
புற்றுநோய் விழிப்புணர்வு:
இன்று நகரில் புற்றுநோய் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு வருவது மிகவும் வருத்தத்திற்குரியது. எனினும், காலத்திற்கேற்ற விழிப்புணர்வும் இன்று மக்களுக்கு நிறைவாகக் கிடைத்துக் கொண்டிருக்கிறது என்றால் அதற்கு உங்களைப் போன்ற காயல் நல மன்றங்கள்தான் முழுக் காரணம் என்பதை இந்நேரத்தில் நான் நன்றியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
CFFCயின் செயல்பாடு:
இப்புற்றுநோய்க்கான காரணிகளைக் கண்டறிவதற்காக Cancer Fact Finding Committee - CFFC என்ற பெயரில் தற்காலிக அமைப்பொன்று நிறுவப்பட்டு, உலக காயல் நல மன்றங்களின் பூரண ஒத்துழைப்போடு, நகரில் புற்றுநோய் பரவலுக்கான காரணிகளைக் கண்டறியும் முயற்சியை குறிப்பிடத்தக்க அளவில் செய்து முடித்துள்ளது. இன்னும் எஞ்சியிருக்கும் சில பணிகளையும் செய்யக் காத்திருக்கிறது இவ்வமைப்பு.
நகரில் புற்றுநோய் பரவலுக்கு நம் மக்களின் உடற்பயிற்சியின்மை, உணவுப் பழக்கவழக்கம், கைபேசிக் கோபுரங்கள், அருகிலுள்ள தொழிற்சாலைகள் என பலவும் காரணிகளாகக் கருதப்படுகிறது. ஆனால், முறையான - அதிகாரப்பூர்வமான ஆய்வறிக்கைகள் எதுவுமின்றி நமக்கு நாமே இதுதான் காரணம்; இவர்தான் காரணம் என வாய்க்கு வந்தபடி சொல்லிக் கொண்டிருப்பது நமது ஆக்கப்பூர்வமான பணிகளுக்கு பின்னடைவையே ஏற்படுத்தும்.
எனவே, இது விஷயத்தில் உலக காயல் நல மன்றங்கள்தான் நகர மக்களுக்கு பொறுப்பான வழிகாட்டிகளாகத் திகழ்ந்திட வேண்டும்.
இக்ராஃவுக்கு ஒத்துழைப்பு:
காயல்பட்டினம் நகரில் கல்வியறிவு பெற்ற தலைமுறையை உருவாக்கி, காயலில் கல்லாமை இல்லாமை என்ற நிலையை உருவாக்க உலக காயல் நல மன்றங்களின் ஒருங்கிணைந்த நிர்வாகத்தின் கீழ் செயலாற்றி வரும் காயல்பட்டினம் இக்ராஃ கல்விச் சங்கத்திற்கு திருவனந்தபுரம் காயல் நல மன்றமும் தனது ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பை வழங்கிட வேண்டும். அதன் முதற்கட்டமாக, இக்ராஃவின் வருடாந்திர நிர்வாகச் செலவினங்களில் குறிப்பிடத்தக்க அளவில் தனது பங்களிப்பையும் இம்மன்றம் அறிவித்து, நகரில் கல்வி வளர்ச்சி காண உறுதுணை புரிந்திட வேண்டும்.
இவ்வாறு தாருத்திப்யான் நெட்வர்க் நிறுவனர் எஸ்.கே.ஸாலிஹ் உரையாற்றினார்.
பின்னர், இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் ரேடியோதெரபி சிகிச்சைப் பிரிவு விரிவுரையாளர் டாக்டர் மகாதேவன் அசைபட விரிதிரை உதவியுடன் சிறப்புரையாற்றினார்.
புற்றுநோய்க்கான காரணி:
புற்றுநோய்க்கு பல அம்சங்கள் காரணமாக இருக்கலாம். எந்த ஒரு மனிதனுக்கும் ஏற்பட்டுள்ள புற்றுநோய்க்கு இதுதான் காரணம் என்று நாமாகச் சொல்லிவிட முடியாது. அவர் வாழ்ந்துகொண்டிருக்கும் இடம், உண்ணும் உணவு, வாழ்க்கை முறை, சுற்றுச்சூழல் என பலவற்றையும் இது விஷயத்தில் நாம் அவதானிக்க வேண்டும்.
மனித உடலில் புற்றுநோயை உருவாக்கும் செல்கள் வளர்வது இயற்கையான அமைப்புதான் என்றாலும், அந்த செல்கள் மனித உயிரையே பாதிக்குமளவுக்கு வளர்ந்திடும் வகையில் நமது உணவுப்பழக்கவழக்கங்கள் அமைந்திடக் கூடாது. முறையான சமச்சீர் உணவுப் பழக்கவழக்கத்தைக் கையாண்டால் மட்டுமே மனித உடலில் தேவையான அளவுக்கு எதிர்ப்பு சக்திகள் உருவாகும்... அந்த எதிர்ப்பு சக்திகள்தான் இதுபோன்று வளரும் புற்றுநோய் உள்ளிட்ட அனைத்து நோய்களின் செல்களையும் அழிக்கும்.
தண்ணீரின் மகத்துவம்:
நாம் அருந்தும் தண்ணீரிலேயே எண்ணற்ற மருத்துவ குணங்கள், நோய் எதிர்ப்புத் தன்மைகள் உள்ளன. பெரும்பாலும் செலவின்றி கிடைக்கும் இத்தண்ணீரை நாம் நம்மால் இயன்றளவுக்கு தினமும் அதிகமாகப் பருகி வரவேண்டும்.
புற்றுநோய் குறித்த எந்த ஒத்துழைப்பானாலும் இந்த அமைப்பினர் என்னை அணுகும்பட்சத்தில் நான் ஆர்வத்துடன் வழங்கக் காத்திருக்கிறேன்.
இவ்வாறு டாக்டர் மகாதேவன் உரையாற்றினார். பின்னர், புற்றுநோய் குறித்த மன்ற உறுப்பினர்களின் சந்தேகங்களுக்கு விளக்கமளித்தார். அவருக்கு மன்றத்தின் சார்பில் நினைவுப்பரிசு வழங்கப்பட்டது.
காயல்பட்டினம் உடல்நலன் ஆய்வு:
அதனைத் தொடர்ந்து, வட அமெரிக்க காயல் நல மன்றம் (நக்வா), தம்மாம் காயல் நற்பணி மன்றம், தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் அமைப்புகள் இணைந்து நடத்தி வரும் காயல்பட்டினம் உடல் நலன் ஆய்வு (Kayalpatnam Health Survey) குறித்து எஸ்.கே.ஸாலிஹ் விளக்கிப் பேசினார். இச்செயல்திட்டத்தின் அவசியம், நோக்கம், இதனால் விளையப்போகும் நன்மைகள் குறித்து விவரித்த பின்னர், உறுப்பினர்கள் அனைவரிடமும் கணக்கெடுப்புப் படிவத்தை அளித்து, அதில் தமது கருத்துக்களைப் பதிவு செய்யும் முறைகள் குறித்து விளக்கிக் கூறி, கருத்து சேகரிப்பை வழிநடத்தினார். அனைத்து உறுப்பினர்களும் இக்கருத்து சேகரிப்பில் மிகுந்த உற்சாகத்துடன் கலந்துகொண்டனர்.
அவ்வப்போது பல முக்கிய சந்தேகங்கள் குறித்து விளக்கம் கேட்டுப் பெற்றது, உறுப்பினர்களுக்கு இந்த கருத்து சேகரிப்பின் மீதுள்ள ஆர்வத்தையும், ஈடுபாட்டையும் வெளிப்படுத்துவதாக அமைந்திருந்தது.
பின்னர் மன்றத்தின் ஓராண்டு வரவு - செலவு கணக்கறிக்கையை மன்றப் பொருளாளர் ஹாஜி எம்.ஐ.சதக்கு தம்பி சமர்ப்பிக்க கூட்டம் அதை ஒருமனதாக அங்கீகரித்தது.
கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன:-
தீர்மானம் 1 - காயல்பட்டினத்தில் புற்றுநோய் தடுப்பு முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு:
காயல்பட்டினம் நகர பொதுமக்களுக்கு புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு செயல்திட்டங்கள் உலக காயல் நல மன்றங்களால் செய்யப்பட்டு வருகிறது. அவையனைத்திற்கும் மன்றம் தனது உளப்பூர்வமான ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறது. இச்செயல்திட்டங்களில் மன்றம் தனது சக்திக்குட்பட்டு இனி வருங்காலங்களில் இணைந்து செயலாற்றும்.
தீர்மானம் 2 - திருவனந்தபுரத்தில் முத்துச்சாவடி அமைத்தல்:
திருவனந்தபுரத்தில் முத்துச்சாவடி ஒன்றை நிறுவுவதற்கான முதற்கட்டப் பணிகளை விரைந்து தொடங்குவதென்றும், அதற்கான நன்கொடைகளைத் திரட்டும் பொருட்டு மன்றத்தின் அடுத்த செயற்குழுவில் குழு நியமிக்கப்படும் என்றும் இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
தீர்மானம் 3 - முத்துச்சாவடி அமைக்க உலக கா.ந.மன்றங்கள் ஒத்துழைக்க கோரிக்கை:
திருவனந்தபுரம் நகரில் முத்துச்சாவடி அமைத்திட உலக காயல் நல மன்றங்கள் தமது ஆக்கப்பூர்வமான பொருளாதார ஒத்துழைப்புகளைத் தந்துதவுமாறு இக்கூட்டம் வேண்டிக் கொள்கிறது. இதுகுறித்த முறையான வேண்டுகோள்களை அனைத்து மன்றங்களின் நிர்வாகங்களுக்கும் விரைவில் அனுப்பி வைப்பதென தீர்மானிக்கப்படுகிறது.
தீர்மானம் 4 - இக்ராஃ நிர்வாகச் செலவில் பங்களிப்பு:
உலக காயல் நல மன்றங்களின் கல்வித்துறைக் கூட்டமைப்பான காயல்பட்டினம் இக்ராஃ கல்விச் சங்கத்தின் வருடாந்திர நிர்வாகச் செலவில் மன்றத்தின் பங்களிப்பு குறித்து வரும் செயற்குழுவில் விவாதித்து முடிவெடுப்பதென தீர்மானிக்கப்படுகிறது.
தீர்மானம் 5 - சிறப்பு விருந்தினர், சிறப்பு அழைப்பாளருக்கு நன்றி:
இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரியின் விரிவுரையாளர் டாக்டர் மகாதேவன், சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்ட தாருத்திப்யான் நெட்வர்க் நிறுவனர் ஹாஃபிழ் எஸ்.கே.ஸாலிஹ் ஆகியோருக்கு இக்கூட்டம் தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்து மகிழ்கிறது.
தீர்மானம் 6 - சிங்கை கா.ந.மன்ற புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்து:
சிங்கப்பூர் காயல் நல மன்றத்திற்கு அண்மையில் தெரிவுசெய்யப்பட்டுள்ள ஜனாப் ரஷீத் ஜமான் தலைமையிலான புதிய நிர்வாகக் குழுவிற்கு மன்றம் தனது மனப்பூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதோடு, இதுகாலம் வரை அம்மன்றத்தை தனது தன்னிகரற்ற தலைமையால் வழிநடத்தி, தற்போதும் வழிகாட்டியாக செயல்பட்டு வரும் அம்மன்றத்தின் முன்னாள் தலைவர் ஹாஜி பாளையம் முஹம்மத் ஹஸன் அவர்களையும் மன்றம் மனதாரப் பாராட்டுகிறது.
தீர்மானம் 7 - CFFC செயல்பாடுகளுக்கு ஆதரவு:
நகரில் புற்றுநோய் காரணிகளைக் கண்டறிவதற்காக உருவாக்கப்பட்டுள்ள CFFC குழுமத்திற்கு மன்றம் தனது மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறது.
தீர்மானம் 8 - காயல்பட்டினம் உடல் நலன் ஆய்வு நடத்துவோருக்கு பாராட்டு:
காயல்பட்டினத்தில் பொதுமக்களின் ஒட்டுமொத்தமான உடல் நலன் குறித்த ஆய்வுப்பணிகளை இணைந்து மேற்கொண்டு வரும் வட அமெரிக்க காயல் நல மன்றம் (நக்வா), தம்மாம் காயல் நற்பணி மன்றம், தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் அமைப்புகளுக்கு மன்றம் தனது உளப்பூர்வமான பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்வதோடு, இச்செயல்பாடுகள் திருப்திகரமாக நிறைவுற்று, நகரில் பல நல்ல விளைவுகளுக்கு அது காரணமாக அமைந்திட வாழ்த்துகிறது.
தீர்மானம் 9 - மன்றங்களின் பொதுக்குழுக் கூட்டங்கள் சிறக்க வாழ்த்து:
கடந்த 15ஆம் தேதியன்று தமது மன்றங்களின் பொதுக்குழுவை நடத்தி முடித்துள்ள அமீரக காயல் நல மன்றம், கத்தர் காயல் நல மன்றம் மற்றும், வரும் 08.05.2011 அன்று பொதுக்குழுக் கூட்டம் நடத்தவுள்ள பெங்களூரு காயல் நல மன்றத்திற்கும் மன்றம் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதோடு, இம்மன்றங்கள் உள்ளிட்ட அனைத்துலக காயல் நல மன்றங்களின் நகர்நலப் பணிகள் சிறக்க மனதார வாழ்த்துகிறது.
மேற்கண்டவாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இறுதியாக மன்றச் செயலாளர் எஸ்.ஏ.கே.அபூபக்கர் சித்தீக் நன்றி கூற, துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது.
கூட்டத்தின் இறுதியில், ஜித்தா காயல் நற்பணி மன்றத்தால் அண்மையில் வெளியிடப்பட்ட “புற்றுக்கு வைப்போம் முற்று!” ஆவணப்படம் விரிதிரையில் காண்பிக்கப்பட்டது.
அனைவருக்கும் சுவையான அசைவ உணவு பொட்டலமாக வழங்கப்பட்டது. அரங்கிலேயே மதிய உணவை முடித்துக் கொண்ட மன்ற உறுப்பினர்கள் உற்சாகத்துடன் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டு, மகிழ்வுற திரும்பிச் சென்றனர். எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே!
இவ்வாறு திருவனந்தபுரம் காயல் நல மன்ற நிர்வாகத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயல்பட்டினத்திலிருந்து புற்றுநோய் சிகிச்சைக்காக திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரியை நாடி வரும் பொதுமக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தருவதற்கான பேச்சுவார்த்தைகள் மன்றத்தால் செய்யப்பட்டு வருவதாகவும், விரைவில் அதற்கு முழுப்பலன் கிடைக்கலாம் என்றும் மன்ற நிர்வாகிகள் தெரிவித்தனர்.
செய்தி திருத்தப்பட்டுள்ளது. |