இரத்தம் உறையாமை (ஹீமோஃபிலியா) நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் தமது பெயர்களை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடனே பதிவு செய்துகொள்ள வேண்டுமென ஹீமோஃபிலியா கூட்டமைப்பின் தென்பிராந்திய தலைவர் டாக்டர் அன்புராஜன் கேட்டுக்கொண்டுள்ளார்.
உலக ஹீமோஃபிலியா தினத்தையொட்டி பாளையங்கோட்டையில் 17.04.2011 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த அவர் மேலும் பேசியதாவது:-
திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஹீமோஃபிலியா நோயால் பாதிக்கப்பட்டோர் சுமார் மூவாயிரம் பேர் வரை இருக்கலாம். ஆனால் அந்நோய் தனக்கிருப்பதையறிந்து பதிவு செய்துள்ளோரின் எண்ணிக்கை வெறும் 184 மட்டுமே!
இந்த நோயானது பெண்ணின் உடலிலிருந்து மரபணு வழியாக வாரிசுகளுக்கு கடத்தப்படுகிறது. பெரும்பாலும் ஆண்களைப் பாதிக்கும் இந்த நோய் பெண்களை அரிதாகவே பாதிக்கும். இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு இரத்தம் வெளியேறும் சமயங்களில் உறையாமல் கசிந்துகொண்டே இருக்கும். பிறந்த குழந்தைகளின் தொப்புள் கொடியிலிருந்தும், தடுப்பூசி போடும்போதும், சுன்னத் பண்ணும்போதும், பல் பிடுங்கும்போதும், சிறு அறுவை சிகிச்சையின்போதும் இரத்தம் உறையாமல் கசிந்துகொண்டே இருக்கும்.
சிலருக்கு மூட்டில் தானாக வீக்கம் வருவதும், தோலுக்கு அடியில் இரத்தம் கசிந்து சிவப்பாக அல்லது கறுப்பு புள்ளிகளாகத் தோன்றுவதும் இந்நோய்க்கான அறிகுறிகளாகும்.
இந்த நோய் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது அவசியம். இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் இந்த அமைப்பில் சேர்ந்து முறையான சிகிச்சை பெற்று தமதுயிரைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
இந்த நோய்க்கான சிகிச்சைக்கு அதிக பணம் செலவாகும். எனவே இதற்கு “ராஜவியாதி” என்றும் பெயருண்டு.
இந்த சங்கத்தின் முயற்சியினால் தமிழக அரசின் மூலமாக இரத்த உறைபொருள் அரசு மருத்துவமனைகளில் இலவசமாகக் கிடைப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. எனவே பாதிக்கப்பட்டுள்ளவர்கள் உடனடியாக தமது பெயர்களை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் பதிவு செய்துகொள்ள வேண்டும்.
இந்நோயினால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் சுயமாக தொழில் செய்யத் தேவையான அனைத்து உதவிகளையும் அரசும், தொண்டு நிறுவனங்களும் செய்ய வேண்டும். இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களின் மூட்டுகளின் செயல்பாடு குறைந்து போவதால் பலர் நிரந்தர ஊனமுற்றோர் பட்டியலில் இணைக்கப்பட்டு சலுகைகள் பெறுவதற்கு மத்திய, மாநில அரசுகள் உதவ வேண்டும். மருத்துவ காப்பீட்டுத் திட்டங்களில் இந்நோயையும் இணைக்க வேண்டும்.
இவ்வாறு டாக்டர் அன்புராஜன் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களைச் சார்ந்த ஹீமோஃபிலியா நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் கலந்துகொண்டனர். இவர்களின் ஒற்றுமையைக் குறிக்கும் வகையில் நூறு பலூன்கள் பறக்க விடப்பட்டன.
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவக் கண்காணிப்பாளர் ராஜேந்திர ரத்தினம், இந்திய மருத்துவக் கழக மாவட்டச் செயலர் எஸ்.எம்.கண்ணன், மருத்துவர் ராஜன், லைஃப் லைன் இரத்த வங்கி நிர்வாகி ரமேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
நன்றி:
தினமணி நாளிதழ் (நெல்லை பதிப்பு - நாள் 18.04.2011)
தகவல்:
Y.M.முஹம்மத் தம்பி,
ஏ.கே.எம்.ஜுவல்லர்ஸ்,
எல்.கே.லெப்பைத்தம்பி சாலை, காயல்பட்டினம். |