இந்திய அரசியல் சாசனத்தின் பல சட்டங்களில் ஒன்றே The Conduct of Election Rules, 1961. இதில் 49-O என்ற பிரிவு ஒரு வாக்காளர், தனது வாக்கினை, எந்த வேட்பாளருக்கும் வழங்க விருப்பம் இல்லை என்பதனை தெரிவிக்க வாய்ப்பளிக்கிறது. இப்பிரிவு பல ஆண்டுகளாக சட்ட புத்தகத்தில் இருந்தாலும், கடந்த சில தேர்தல்களிலேயே பரவாலாக இது பயன்படுத்தப்பட்டு வருகிறது.
தற்போது நடைமுறையில் இருக்கும் மின்னணு வாக்கு இயந்தரங்களுக்கு முன் பயன்படுத்தப்பட்ட வாக்குச்சீட்டு காலங்களில், அதிருப்தி வாக்காளர்கள், வாக்குச்சீட்டுகளை செல்லாதவைகளாக்கி - அரசியல் கட்சிகளுக்கு எதிரான - தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியது உண்டு. இதற்க்கான வாய்ப்பு மின்னணு வாக்கு இயந்திரங்களின் அறிமுகத்தால் இல்லாமல் போனது. இக்குறையினை 49-O ஓரளவு நிவர்த்தி செய்வதாக பலர் எண்ணுகின்றனர். இருப்பினும் - இம்முறையில் - வாக்களர்களின் தேர்வு ரகசியமாக இல்லாமல், வெளிப்படையாவது - இம்முறையை பயன்படுத்த விரும்பும் பலரை இருமுறை யோசிக்க வைப்பது நிஜமே.
கடந்த தேர்தல்களில் 49-O குறித்த விளக்கம், தேர்தல் அதிகாரிகளுக்கே தெரியாதிருந்த நிலை, இத்தேர்தலில் பெரும் அளவு நிவர்த்தி ஆகியிருந்தது. 49-O குறித்த உயர்நீதி மன்ற உத்தரவு, அதனை தொடர்ந்த தேர்தல் ஆணைய விளம்பரங்கள், தேர்தல் ஆணையம் வழங்கிய பயிற்சி ஆகியவற்றை இதற்க்கு காரணம் என கூறலாம்.
நடப்பு தேர்தலில் தமிழகத்தின் பல இடங்களில் 49-O பயன்படுத்தப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. பல வாக்குச்சாவடிகளில் எவ்வித பிரச்சனையும் இன்றி பயன்படுத்தப்பட்டிருந்தாலும், சில இடங்களில் 49-O பிரிவை பயன்படுத்த பழைய பிரச்சனைகள் (மிரட்டல்கள், செயல்முறை தெரியாத தேர்தல் அதிகாரிகள் போன்றவை) தொடர்ந்திருக்கின்றன.
மாநிலத்தில் அதிகப்பட்சமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள மசனகுடி பகுதியில் 1000 க்கும் மேற்பட்டோர் 49-O பிரிவினை பயன்படுத்தி உள்ளனர். இதில் சுமார் 700 பேர் கூடலூர் தொகுதியிலும், பொக்கபுரம் கிராமத்தை சார்ந்த சுமார் 385 பேர் உதகமண்டல தொகுதியுலும் இம்முறையை பயன்படுத்தி உள்ளனர். Tamil Nadu Private Forest Protection Act சட்டத்தின் கீழ் வளர்ச்சி பணிகளுக்கு - இப்பகுதிகளில் - அரசாங்க விதிகள் தடையாக இருப்பதே இதற்க்கு காரணம்.
தூத்துக்குடி மாவட்டத்திலும், சுமார் 825 வாக்காளர்கள் 49-O விதியை பயன்படுத்தியதாக் மாவட்ட ஆட்சியர் சி.என்.மகேஸ்வரன் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார். திருச்செந்தூர் தொகுதியில் மட்டும் 131 பேர் 49-O விதியை பயன்படுத்தி உள்ளனர் என்றும் மேலும் அவர் தெரிவித்தார்.
தேர்தல் நாளுக்கு சில தினங்களுக்கு முன் சமூக ஆர்வலர்கள் சிலர் - நகரில் 49-O குறித்த பிரச்சாரத்தினை, சில நகர பிரச்சனைகளை முன் வைத்து, மேற்க்கொண்டனர். இது பகுதி அரசியல்வாதிகளின் கவனத்தை ஈர்த்தது.
நகரில் எத்தனை பேர் 49-O பிரிவினை பயன்படுத்தினர் என்பது அதிகாரப்பூர்வமாக இதுவரை வெளியிடப்படவில்லை. இருப்பினும் ஒரு தகவல்படி, 49-O பிரிவினை நகரில் 63 பேர் பயன்படுத்தியதாகவும், நகரின் 29 வாக்குச்சாவடிகளில், 20 வாக்குச்சாவடிகளில் குறைந்தது ஒருத்தர் 49-O பிரிவை பயன்படுத்தி உள்ளதாகவும் தெரிகிறது. மற்றொரு தகவல்படி சுமார் 110 வாக்காளர்கள், நகரில் 49-O பிரிவினை பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.
|