காயல்பட்டினம் கொச்சியார் தெரு தென்கோடியில் அமைந்துள்ள தண்ணீர் வினியோக திறப்புக் குழாய் தொட்டியின் இன்றைய காட்சிதான் இது!
எப்போதும் நிறைந்த குப்பை சகிதமாகக் காட்சியளிக்கும் இத்தொட்டி, நகராட்சியின் தண்ணீர் வினியோகத்தின்போது மட்டும் நிறைந்து வழிந்து, சாலையிலும் தண்ணீர் வழிந்த நிலையில் காணப்படும்.
அவ்வாறு நிறையும் தண்ணீர், சூழ்ந்துள்ள குப்பை கூளங்களின் ரசத்தை (ஜூஸ்) உறிஞ்சியெடுத்து, தண்ணீர் வினியோக நிறைவு நேரத்தின்போது இத்தொட்டியில் வழிந்த நீர் வினியோகத் திறப்புக் குழாய் வழியே உட்சென்று “புதிய ஊட்டச்சத்தை“ உருவாக்கும்.
மறுமுறை தண்ணீர் வினியோகிக்கப்படும்போது, உள்வாங்கப்பட்ட இந்த “ஊட்டச்சத்து பானம்”தான் துவக்கமாக அனைத்தில்லங்களையும் சென்றடையும்.
இத்தொட்டியைச் சூழ்ந்திருக்கும் குப்பை கூளங்களில் வீடு துப்புரவு செய்யப்பட்ட கழிவுகள், பச்சிளங்குழந்தைகளின் அடித்துணி (நாப்பீஸ்), மாதவிடாய் பெண்களின் கழிவுத்துணிகள் என பல “விசேஷ” பொருட்கள் உள்ளடக்கம்.
இக்குறையை சரிசெய்யக் கோரி அப்பகுதி நகர்மன்ற உறுப்பினரிடம் பலமுறை முறையிட்டதாகவும், ஆனால் இதுவரையிலும் கண்டுகொள்ளப்படவில்லை என்றும் அப்பகுதியைச் சார்ந்த சிக்கந்தர் என்பவர் தெரிவித்தார்.
மாதிரிக்கு கொச்சியார் தெருவின் இத்தொட்டி படமெடுக்கப்பட்டுள்ளபோதிலும், நகரின் பெரும்பாலான குடிநீர் வினியோகத் திறப்புக் குழாய் தொட்டிகளின் நிலையும் இதுவாகத்தான் உள்ளது.
பார்க்க:- (1) (2) (3)
|