காயல்பட்டினத்தில் வரும் ஜூலை மாதம் 08, 09, 10 தேதிகளில் இஸ்லாமிய தமிழிலக்கிய மாநாடு நடைபெறவிருக்கிறது. இதுகுறித்து, இஸ்லாமிய தமிழ் இலக்கியக் கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
இதுவரை நடத்தப்பட்ட மாநாடுகள்:
இஸ்லாமியத் தமிழ் இலக்கியக் கழகம் இதுவரை பதினான்கு மாநாடுகளை நாகூர், நீடூர், காரைக்கால், சென்னை, திருச்சி, கோட்டக்குப்பம், முத்துப்பேட்டை, ராஜகிரி, புதுச்சேரி, மயிலாடுதுறை, பள்ளபட்டி, பரமக்குடி, தஞ்சாவூர், அதிராம்பட்டினம் ஆகிய நகரங்களில் சிறப்போடு நடத்தி இருக்கிறது.
நூற்று எண்பது நூல்கள் பல்வேறு துறைகளிலும் வெளியிடப்பட்டுள்ளது. சாதனை படைத்த சான்றோர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், பத்திரிகையாளர்கள், சமுதாய புரவலர்கள் இம் மாநாடுகளில் விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளனர். இம்மாநாடுகளில் அனைத்து சமுதாய கல்லூரி மாணவ - மாணவிகளும் பங்கேற்ற கட்டுரைப் போட்டிகள் இளைய தலைமுறையினரிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி இருக்கின்றது.
இஸ்லாமியத் தமிழ் இலக்கியக் கழகத்தின் சார்பாக வெளியிடப்பட்டுள்ள `இஸ்லாமியத் தமிழ் இலக்கிய ஆய்வுக் கோவை’, `மானுடம் போற்று வோம்’, `இஸ்லாமியத் தமிழ் எழுத்தாளர்கள்’, `இலக்கிய உலகம்’, இஸ்லாம் வளர்த்த தமிழ்’, `தற்கால இஸ்லாமியத் தமிழ் இலக்கியம்’, `இலக்கி யச் செல்வர்கள்’, `ஆய்வுச் சோலை’, `ஆய்வுப் பேழை’ ஆகிய ஒன்பது நூல்கள் தமிழ் உலகில் நன்மதிப்பை பெற்றிருக்கின்றது.
இஸ்லாமிய தமிழ் இலக்கியக் கழகத்தின் நிறுவனர் மற்றும் நிர்வாகிகள்:
இஸ்லாமியத் தமிழ் இலக்கியக் கழகம் சிந்தனைச் செலவர் சிராஜுல் மில்லத் ஆ.கா.அ.அப்துஸ் ஸமத் சாஹிபின் வழிகாட்டுதலில் ஆரம்பிக்கப்பட்டு, நீடூர் வழக்கறிஞர் ஸயீத் சாஹிப் முதல் தலைவராகவும் செயலாற்றியிருக்கின்றனர்.
கழகத்தின் உலக ஒருங்கிணைப்பாளராக பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன், தலைவராக கவிஞர் வடக்கு கோட்டையார் வ.மு.செய்யது அஹமது, பொதுச்செயலாளராகக காரைக்கால் அண்ணா கலைக் கல்லூரி தமிழ்த்துறை தலைவர் பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர், பொருளாளராக சென்னை புதுக்கல்லூரி பேராசிரியர் ஹ.மு.நத்தர்சா ஆகியோர் நிர்வாகிகளாகவும், தமிழகம், சிங்கப்பூர், இலங்கை உள்ளிட்ட நாடுகளில் வாழும் தமிழறிஞர்கள் அதன் அங்கத்தினராகவும் இருக்கின்றனர்.
காயல்பட்டினத்தில் மாநாடு:
இஸ்லாமியத் தமிழ் இலக்கிய பதினைந்தாம் மாநாடு எதிர்வரும் 2011 ஜூலை 8, 9, 10 ஆகிய மூன்று தினங்கள் வரலாற்றுச் சிறப்பும், இஸ்லாமிய தமிழ் இலக்கியங்களும் நிறைந்திருக்கும் காயல்பட்டினத்தில் நடைபெற இருக்கின்றது.
இம்மாநாட்டில் உலகெங்கிலும் இருந்து இலக்கிய ஆர்வலர்கள், மார்க்க அறிஞர்கள், சமுதாய புரவலர்கள், மத்திய - மாநில அமைச்சர்கள், பாராளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள், கல்லூரிகளின் பேராசிரியர்கள் என இஸ்லாமியத் தமிழ் இலக்கியத் தனிச்சிறப்பை விளக்கிட சான்றோர்கள் பங்கேற்கின்றனர். காயல்பட்டினத்தில் பிறந்த புலவர்கள், மார்க்க அறிஞர்கள், கவிஞர்கள், இஸ்லாமிய தமிழ் இலக்கியம் மற்றும் அரபு தமிழிலும் பல நூல்களை பல்லாண்டுகளுக்கு முன்பாகவே யாத்தளித்துள்ளனர்.
இலக்கிய ஆர்வலர் கையேடு வெளியீடு:
இவ்விலக்கியங்களையும் காயல்பட்டினம் இலக்கிய மாநாட்டில் புதுப்பித்து வெளியிட முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இம்மாநாட்டில் `இலக்கிய இணையம்’ என்ற இலக்கிய ஆர்வலர்களின் வாழ்க்கை குறிப்பு மற்றும் புதிய முகவரி உள்ளடக்கிய நூல் வெளியிடப்படுகிறது. இந்நூலில் இடம்பெற விரும்புவோர் இலக்கியக் கழக பொதுச் செயலாளரை தொடர்பு கொள்ளலாம்.
மாநாட்டு நிகழ்வுகள்:
மூன்று தினங்கள் நடைபெறும் காயல்பட்டின மாநாட்டில் இஸ்லாமிய தமிழ் இலக்கியம் குறித்து பட்டிமன்றம், கருத்தரங்கம், சன்மார்க்க அரங்கம், இசையரங்கம், மகளிர் அரங்கம், ஆய்வரங்கம் என பல்வேறு நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன.
தொடர்பாளர்கள்:
இம்மாநாடு சம்பந்தமாக இலக்கியக் கழக பொதுச் செயலாளர்
பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர்
8,தம்பி சாயபு மரைக்காயர் வீதி,
காரைக்கால் - 609 602,
அலைபேசி - 98424 88047
காயல் எஸ்.இ.அமானுல்லாஹ்,
484, நெய்னார் தெரு,
காயல்பட்டினம் - 628204,
அலைபேசி – 9443342222
Email: kayalaman@gmail.com
ஆகியோரை தொடர்பு கொள்ளலாம்.
ஜலாலிய்யாவில் ஆலோசனைக் கூட்டம்:
இம்மாநாடு சம்பந்தமான ஆலோசனை கூட்டம் 07-05-2011 சனிக்கிழமை மாலை 04.00 மணிக்கு காயல்பட்டினம், சதுக்கைத் தெரு, ஜலாலிய்யா நிகாஹ் மஜ்லிஸில் வைத்து நடைபெறுகின்றது.
இக்கூட்டத்தில் இலக்கியக் கழகத்தின் பொதுச் செயலாளர் பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர் பங்கேற்கிறார். நகரின் அனைத்து ஜமாஅத் நிர்வாகிகள், கல்வியாளர்கள், இலக்கிய ஆர்வலர்கள், நற்பணி மன்றங்களின் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட அனைவரும் இக்கூட்டத்தில் பங்கேற்று மாநாடு வெற்றிக்கான ஆலோசனை வழங்குகின்றனர்.
இஸ்லாமிய தமிழ் இலக்கிய பதினைந்தாம் மாநாடு பணிகளை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கர், மணிச்சுடர் நாளிதழ் செய்தி ஆசிரியர் காயல் மகபூப் உள்ளிட் டோர் முனைப்போடு செய்து வருகின்றனர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
இஸ்லாமிய தமிழ் இலக்கியக் கழகம் சார்பாக,
உஸ்மான்,
36, மரைக்கார் லெப்பைத் தெரு,
மண்ணடி, சென்னை - 01.
முன்னதாக இம்மாநாடு வரும் மே மாதம் 27, 28, 29 தேதிகளில் நடைபெறுமென அறிவிக்கப்பட்டிருந்தது மாற்றப்பட்டு, புதிய தேதி அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. |