உலக காயல் நல மன்றங்களின் கல்வித்துறைக் கூட்டமைப்பான காயல்பட்டினம் இக்ராஃ கல்விச் சங்கத்தின், பள்ளிச்சீருடை - பாடக்குறிப்பேடு ஒருங்கிணைந்த இலவச வினியோகத் திட்டத்திற்கு ரூபாய் என்பதாயிரம் தொகை ஒதுக்கீடு செய்து கத்தர் காயல் நல மன்ற பொதுக்குழு தீர்மானித்துள்ளது.
கூட்ட நிகழ்வுகள் குறித்து அம்மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
கத்தர் காயல் நல மன்றத்தின் 11ஆவது பொதுக்குழுக் கூட்டம், 15.4.2011 வெள்ளிக்கிழமையன்று ஜும்ஆ தொழுகைக்குப் பின், கத்தர் - அல்முன்தஸா பகுதியிலுள்ள ஆலிஷான் ஹோட்டல் கேளரங்கில் நடைபெற்றது.
மன்றத்தின் மூத்த உறுப்பினர் ஏ.எஸ்.முஹம்மத் இஸ்மாஈல் கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். மன்றத் தலைவர் எஸ்.ஏ.ஃபாஸுல் கரீம், மன்றத்தின் மூத்த உறுப்பினர் ஹாஜி கே.வி.ஏ.டி.கபீர் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் துபையில் பணிபுரியும் திப்பு சுல்தான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஹாஃபிழ் ஏ.எச்.எஸ்.நஸ்ருத்தீன் இறைமறை வசனங்களுடன் கூட்டத்தைத் துவக்கி வைத்தார். இனிகுரலோன் பாடகர் ஏ.எச்.ஃபாயிஸ் இஸ்லாமிய கீதம் பாடினார்.
தொடர்ந்து ஹாஜி கே.வி.ஏ.டி.கபீர் வாழ்த்துரை வழங்கினார்.
பல்வேறு தேவைகள் நிமிர்த்தம் நமதூரின் பல பகுதிகளிலிருந்தும் பெறப்படும் விண்ணப்பங்களுக்கு, மன்றத்திற்கு உறுப்பினர்கள் செலுத்தி வரும் சந்தா தொகைகள் மூலமாகவே உதவிகள் செய்யப்பட்டு வருவதாகவும், அதனைக் கருத்தில் கொண்டு மன்ற உறுப்பினர்கள் தமது சந்தா தொகைகளை தொய்வின்றி ஆர்வமுடன் செலுத்தி நகர்நலப் பணிகளுக்கு முழு ஒத்துழைப்பளித்திட வேண்டுமென்றும் அவர் தனதுரையில் உறுப்பினர்களைக் கேட்டுக் கொண்டார்.
புதிய உறுப்பினர்கள் அறிமுகம்:
அதனைத் தொடர்ந்து கத்தரில் புதிதாக பணியாற்ற வந்துள்ள காயலர்கள் மன்றத்தின் புதிய உறுப்பினர்களாக்கப்பட்டு, அனைத்து உறுப்பினர்களுக்கும் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர்.
பின்னர் ஹாஜி கே.வி.ஏ.டி.ஹபீப் முஹம்மத் வாழ்த்துரை வழங்கினார்.
இப்பொதுக்குழுவில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களை உலக காயல் நல மன்றங்கள் ஆர்வத்துடன் எதிர்பார்க்கின்றனர் என்றும், மன்றத்திற்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள செயற்குழு உறுப்பினர்கள் சிறப்புற செயல்பட்டு வருவதாகவும், யாவரும் இன்னும் சிறப்புடன் செயலாற்றிட அனைத்து உறுப்பினர்களும் நிறைவான ஆதரவை மனமுவந்து அளித்திட வேண்டுமென்றும் அவர் தனதுரையில் கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்து “மவ்லவீ ஹாஃபிழ் முத்துச்சுடர் எஸ்.எம்.எஸ்.முஹம்மத் லெப்பை பாக்கவீ உரையாற்றினார். “ஸதக்கத்துன் ஜாரியா“ எனும் நிலையான நற்கூலிகளைப் பெற்றுத் தரும் தர்மம் குறித்து விளக்கிப் பேசிய அவர், தான தர்மங்கள் செய்வது அல்லாஹ்வின் கோபத்தைத் தனிக்கும் என்றும், தீய மரணத்திலிருந்து அது நம்மைப் பாதுகாக்கும் என்றும் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தெரிவித்துள்ள செய்தியை மேற்கோள் காட்டிப் பேசினார்.
அந்த அடிப்படையிலேயே கத்தர் காயல் நல மன்றம் அனைத்து உறுப்பினர்கள் சார்பாகவும் உதவித் திட்டங்களை செய்து வருவதாகவும், அவை நன்முறையில் நிகழ்ந்திட உறுப்பினர்கள் ஒற்றுமையுடன் அவற்றுக்கு உதவிடுமாறும் அவர் உறுப்பினர்களைக் கேட்டுக் கொண்டார்.
விடைபெறும் மூத்த உறுப்பினருக்கு நினைவுப் பரிசு:
கடந்த 34 வருடங்களாக கத்தர் நாட்டில் பணியாற்றி, இன்னும் சில தினங்களில் ஓய்வுபெற்று தாயகம் திரும்பக் காத்திருக்கும் கத்தர் காயல் நல மன்றத்தின் ஆலோசனைக் குழுவின மூத்த உறுப்பினரான ஏ.எஸ்.முஹம்மத் இஸ்மாஈல் அவர்களுக்கு, முன்னிலை வகித்த சிறப்பு விருந்தினர் துபை திப்பு சுல்தான் அவர்கள் மன்றத்தின் சார்பில் நினைவுப் பரிசு வழங்கி கவுரவித்தார்.
பின்னர் உரையாற்றிய திப்பு சுல்தான், வெளிநாட்டு வாழ்வில் காயலர்களோடு தாம் பழகிய நினைவுகளை கூட்டத்தில் கலந்துகொண்டவர்களுடன் பகிர்ந்துகொண்டார். தொடர்ந்து அவருக்கும் மன்றத்தின் சார்பில் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.
அப்பரிசை மன்றத்தின் சார்பில், தாயகம் திரும்பவிருக்கும் ஏ.எஸ்.முஹம்மத் இஸ்மாஈல் வழங்கினார்.
நிதிநிலையறிக்கை:
தொடர்ந்து மன்றத்தின் நிதிநிலையறிக்கையை மன்றப் பொருளாளர் எம்.ஆர்.ஷாஹுல் ஹமீத் சமர்ப்பித்து உரையாற்றினார். உறுப்பினர்கள் தமது சந்தாக்களை குறித்த காலத்தில் நிலுவையின்றி செலுத்திட வேண்டுமென்றும், தமக்கறிமுகமானவர்களிடமும் மன்றத்தின் நற்பணிகள் குறித்து எடுத்துக் கூறி, வெளியிலிருந்தும் அதிகளவில் நிதியாதாரத்தைப் பெற்றுத் தருமாறும் உறுப்பினர்களிடம் கேட்டுக்கொண்டார்.
தலைவர் உரை:
பின்னர் மன்றத் தலைவர் எஸ்.ஏ.ஃபாஸுல் கரீம் உரையாற்றினார்.
மன்றத்திற்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள செயற்குழுவின் கடந்த நான்கு மாத செயல்பாடுகள் குறித்து தனதுரையில் விவரித்த அவர், புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள செயற்குழு உறுப்பினர்களுக்கு மன்றத்தின் பணிகள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளமை குறித்து விளக்கினார்.
புற்றுநோய்க்கு வாரம் ஓருயிர்:
காயல்பட்டினத்தில் புற்றுநோய்க்கு வாரம் ஓருயிர் பலியாகி வருவதாகவும், காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை – ஹாங்காங் மன்றத்துடன் இணைந்து நம் மன்றம் செயல்படுத்தி வரும் புற்றுநோய் பரிசோதனை இலவச முகாமின் பலனாக இன்ஷாஅல்லாஹ் வருங்காலங்களில் இந்த எண்ணிக்கை நிச்சயம் கட்டுப்படுத்தப்படும் என்றும் தெரிவித்த மன்றத் தலைவர்,
கடந்த பிப்ரவரி மாதத்தில் காயல்பட்டினம் கே.எம்.டி. மருத்துவமனையில் நடத்தப்பட்ட புற்றுநோய் பரிசோதனை இலவச முகாமில் 300க்கும் மேற்பட்ட காயலர்கள் கலந்துகொண்டனர் என்றும், அவர்களது மருத்துவ பரிசோதனை அறிக்கைகள் வெகுவிரைவில் உரியவர்களிடம் சமர்ப்பிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
வருமுன் காப்போம் முறை:
கத்தர் காயல் நல மன்றத்தைப் பொருத்த வரை நோய் வரும் முன் காப்போம் என்ற வகையில் நோய்களைக் கண்டறியும் முகாம்களை நடத்திடவே அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டு வருவதாகவும், நோய் வந்த பின் உதவி செய்வதை விட, வருமுன்பே கண்டறிந்தால் அந்நோயை அதன் துவக்க நிலையிலேயே இறையருட்கொண்டு சரிசெய்திட இயலும் என்றும் தெரிவித்தார்.
CFFC:
நகரில் புற்றுநோய் பரவலுக்கான காரணிகளைக் கண்டறிவதற்காக உருவாக்கப்பட்டுள்ள தற்காலிக அமைப்பான Cancer Fact Finding Committee - CFFC குழுமத்தின் செயல்பாடுகள் குறித்து திருப்தி தெரிவித்த அவர், அதன் செயல்பாடுகளால் நகர மக்களுக்கு முழுமையான நற்பலன்கள் விளைந்திட வேண்டுமென வாழ்த்துவதாகத் தெரிவித்தார்.
காயல்பட்டினம் உடல்நலன் ஆய்வு:
காயல்பட்டினத்தில் பொதுவாக மக்களின் உடல்நலன் எவ்வாறுள்ளதென்பதை ஆய்ந்தறிவதற்காக வட அமெரிக்க காயல் நல மன்றம் (நக்வா), தம்மாம் காயல் நற்பணி மன்றம், தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் ஆகிய அமைப்புகள் இணைந்து செயல்படுத்தி வரும் “Kayalpatnam Health Survey - KHS – காயல்பட்டினம் உடல்நலன் ஆய்வு” குறித்து மன்ற உறுப்பினர்களுக்கு விளக்கிய மன்றத் தலைவர், பின்னர் உறுப்பினர்களிடம் கருத்தாய்வுப் படிவங்களை வழங்கி, அவற்றைப் பூர்த்தி செய்து சமர்ப்பிக்கும்படி கேட்டுக்கொண்டார்.
ஊடகத்திற்கு நன்றி:
ஊடகங்கள் வாயிலாக காயல்பட்டினத்திற்கும், கத்தர் காயல் நல மன்றம் உள்ளிட்ட உலக காயல் நல மன்றங்களுக்கும் முழு ஒத்துழைப்பு வழங்கிக் கொண்டிருக்கின்ற காயல்பட்டணம்.காம் வலைதளத்திற்கு மன்றத் தலைவர் என்ற அடிப்படையில் நன்றியையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்வதாக மன்றத் தலைவர் எஸ்.ஏ.ஃபாஸுல் கரீம் தனதுரையில் தெரிவித்தார்.
அவரது உரையைத் தொடர்ந்து, பின்வரும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன:-
தீர்மானம் 01 - புதிய செயற்குழு உறுப்பினர்களுக்கு ஒப்புதல்:
2011 - 2012 பருவத்திற்கான மன்றத்தின் புதிய செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் நியமனத்தை இக்கூட்டம் முழுமனதுடன் ஏற்றுக்கொள்கிறது.
தீர்மானம் 02 - வரவு-செலவு கணக்கறிக்கைக்கு ஒப்புதல்:
மன்றப் பொருளாளரால் சமர்ப்பிக்கப்பட்ட மன்றத்தின் வரவு-செலவு கணக்கறிக்கையை இக்கூட்டம் ஏகமனதாக அங்கீகரிக்கிறது.
தீர்மானம் 03 - ஊடகத்திற்கு பாராட்டு:
சமூக நலனில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டு, ஊடகங்கள் வாயிலாக நமதூருக்கும், மன்றத்திற்கும் முழு ஒத்துழைப்புகளை வழங்கிக்கொண்டிருக்கும் காயல்பட்டணம்.காம் வலைதளத்திற்கு மன்றம் தனது மனமார்ந்த வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறது.
தீர்மானம் 04 - வலுவான கூட்டமைப்பாக ஐக்கியப் பேரவை அமையப் பெற வலியுறுத்தல்:
நமதூரின் ஒற்றுமை, கலாச்சாரம், சமூக நல்லிணக்கம் உள்ளிட்டவை முறைப்படி பேணப்படுவதற்காக துவக்கப்பட்ட காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை, பல்வேறு சமூக சேவைகளில் ஒருங்கிணைந்து செயல்டுத்தப்படும் பொருட்டு நகரின் அனைத்து ஜமாஅத்துகளது நிர்வாக அங்கத்தினர் நேரடியாக பங்குபெறும் ஒரு வலுவான அமைப்பாக உருவாக்கப்பட வேண்டுமென இக்கூட்டம் வலியுறுத்துகிறது.
தீர்மானம் 05 - நான்கு மாத மன்ற செயல்பாடுகளுக்கு ஒப்புதல்:
மன்றத்தால் கடந்த நான்கு மாதங்களாக செயல்படுத்தப்பட்டுள்ள திட்டங்களை இக்கூட்டம் முழுமனதோறு ஏற்றுக்கொள்கிறது.
தீர்மானம் 06 - வினாடி-வினா போட்டி மற்றும் புற்றுநோய் பரிசோதனை முகாம்:
வரும் ஜூன், ஜூலை மாதங்களில் மன்றத்தின் சார்பில் இரண்டாமாண்டாக காயல்பட்டினம் நகர பள்ளிகளுக்கிடையேயான வினாடி-வினா போட்டியை நடத்துவதெனவும், காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்புடன் இணைந்து புற்றுநோய் பரிசோதனை இலவச முகாம் நடத்துவதெனவும் இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
தீர்மானம் 07 - பள்ளிச்சீருடை, பாடக்குறிப்பேடு இலவச வினியோகத்திற்கு நிதியொதுக்கீடு:
உலக காயல் நல மன்றங்களின் கல்வித்துறைக் கூட்டமைப்பான காயல்பட்டினம் இக்ராஃ கல்விச் சங்கத்தின் தலைமையில், வரும் கல்வியாண்டு முதல் செயல்படுத்தப்படவுள்ள பள்ளிச்சீருடை - பாடக் குறிப்பேடுகள் ஒருங்கிணைந்த இலவச வினியோகத் திட்டத்திற்கு கத்தர் காயல் நல மன்றத்தின் பங்களிப்பாக ரூபாய் என்பதாயிரம் தொகை ஒதுக்க இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
தீர்மானம் 08 - கருத்து சேகரிப்பு நடத்திய மன்றங்களுக்கு பாராட்டு:
நமதூர் காயல்பட்டினத்தில் மருத்துவ சர்வே மேற்கொண்ட ரியாத், தம்மாம், ஜித்தா காயல் நல மன்றங்கள் மற்றும் வட அமெரிக்க காயல் நல மன்றத்தை இக்கூட்டம் மனதாரப் பாராட்டுகிறது.
தீர்மானம் 09 - CFFCக்கு நன்றி:
நமதூர் காயல்பட்டினத்தில் புற்றுநோய் பரவலுக்கான காரணிகளைக் கண்டறிவதற்காக உருவாக்கப்பட்டுள்ள CFFC குழுமத்தின் நோக்கங்கள் வெற்றிபெற்றிடவும், அதன் மூலம் நம் நகர் மக்கள் முழுப்பயன் பெற்றிடவும் வாழ்த்துவதோடு, இவ்வரிய பணியை மிகுந்த சிரமங்களுக்கிடையிலும் மேற்கொண்டு வரும் அக்குழுமத்திற்கு இக்கூட்டம் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.
தீர்மானம் 10 - இக்ராஃ நிர்வாகச் செலவினங்களுக்கு நிதியொதுக்கீடு:
உலக காயல் நல மன்றங்களின் கல்வித்துறைக் கூட்டமைப்பான காயல்பட்டினம் இக்ராஃ கல்விச் சங்கத்தின் வருடாந்திர நிர்வாகச் செலவினங்களுக்காக மன்றத்தின் சார்பில் ஆண்டுக்கு ரூபாய் பதினைந்தாயிரம் வழங்குவதென இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
தீர்மானம் 11 – இக்ராஃ கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் 3 மாணவர்களுக்கு அனுசரணை:
உலக காயல் நல மன்றங்களின் கல்வித்துறைக் கூட்டமைப்பான காயல்பட்டினம் இக்ராஃ கல்விச் சங்கத்தின் ஏழை மாணவர் பட்டப்படிப்புக்கான கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் மன்றத்தின் சார்பில் இவ்வாண்டு புதிதாக மூன்று மாணவர்களுக்கு அனுசரணை வழங்கிட இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
மேற்கண்டவாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இறுதியாக மன்றச் செயலாளர் ஏ.ஏ.செய்யித் முஹ்யித்தீன் நன்றி கூற, உறுப்பினர் முஹம்மத் லெப்பை துஆவுடன் கூட்டம் இறையருளால் இனிதாக நிறைவுற்றது. நிகழ்ச்சிகளனைத்தையும் மன்றத்தின் மூத்த உறுப்பினர் ஹாஜி செய்யித் முஹம்மத் ஸாஹிப் என்ற சேம்ஸா தொகுத்து வழங்கினார்.
கூட்ட ஏற்பாடுகளை மன்றத்தின் மூத்த உறுப்பினர் செய்யித் முஹம்மத் ஸாஹிப் என்ற சேம்ஸா, மன்ற செயற்குழு உறுப்பினர் முஹம்மத் முஹ்யித்தீன், ஆப்தீன் உள்ளிட்ட மன்ற உறுப்பினர்கள் சிறப்புற செய்திருந்தனர்.
கூட்டத்தில் மன்றத்தின் பொதுக்குழு உறுப்பினர்கள் ஆர்வத்துடன் திரளாகக் கலந்துகாண்டனர். அனைவருக்கும் பஃபே முறையில் மதிய உணவு விருந்துபசரிப்பு நடைபெற்றது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
ஹாஃபிழ் ஏ.எச்.நஸ்ருத்தீன் மூலமாக,
கே.எம்.காதர் மீரான் ஸாஹிப்,
செய்தித் தொடர்பாளர்,
காயல் நல மன்றம், கத்தர்.
|