காயல்பட்டினம் சதுக்கைத் தெரு, அலியார் தெரு, கீழசித்தன் தெரு உள்ளிட்ட பகுதிகளில் புதிய சிமெண்ட் சாலை அமைப்பதற்காக நகர்மன்றக் கூட்டத்தில் டெண்டர் விடப்பட்டு பணியும் துவக்கப்பட்ட நிலையில், 31.03.2011 தேதியுடன் முடிக்கப்பட்டிருக்க வேண்டிய சாலை அமைப்புப் பணிகள் இன்றைய தேதி வரை துவக்க நிலையிலேயே நிற்கும் காட்சிகள்தான் இவை!
தேர்தல் அறிவிப்பால் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டதாக ஒருபுறமும், ஏற்கனவே விடப்பட்ட டெண்டர் வேலைகளுக்கு தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறுக்கே வராது என்று மறுபுறமும் தெரிவிக்கப்படுகிறது.
நடப்பு தமிழக அரசின் பதவிக்காலம் முடிவடைவதையொட்டி 2011 மார்ச், ஏப்ரல் அல்லது மே மாதத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் என்பதை அறிந்திருந்தும் இதுபோன்று டெண்டர் விட்டு, இருந்த சாலையை குண்டும் குழியுமாக்கிவிட்டதால் எங்கள் பகுதியில் அவசரத்திற்கு ஒரு வாகனத்தையும் கொண்டு செல்ல இயலுவதில்லை... இதனால் ஏற்படும் இடர்பாடுகள், தீய பின்விளைவுகள் அனைத்திற்கான புண்ணியமும் நகர்மன்ற அங்கத்தினருக்கே கிடைக்கட்டும் என்று பொறுமுகின்றனர் அப்பகுதிகளைச் சார்ந்த பொதுமக்கள்.
இது ஒருபுறமிருக்க, காயல்பட்டினம் நகர்மன்றத்தால் நிறைவேற்றப்படும் புதிய சாலைத்திட்டங்கள் அனைத்தும் தற்காலங்களில் சிமெண்ட் சாலைகளாகவே உள்ளன. தார் சாலைகள் மட்டுமே இதுகாலம் வரை அமைக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர், தர்கா போன்ற நகரின் முக்கியத்தலங்கள் அமைந்துள்ள பகுதிகளில் மட்டும் சிமெண்ட் சாலை போடப்படுவதாக அன்றைய நகர்மன்ற உறுப்பினர்கள் பொதுமக்களிடம் தெரிவித்தனர். அதனடிப்படையிலேயே காயல்பட்டினம் லெப்பப்பா தர்காவையொட்டிய சாலை, புகாரிஷ் ஷரீஃப் வளாகத்தையொட்டிய சாலை, ஸாஹிப் அப்பா தைக்காவையொட்டிய தைக்கா தெருவின் ஒரு பகுதி என நகரின் சில பகுதிகளில் சிமெண்ட் சாலைகள் அமைக்கப்பட்டன.
தற்காலத்தில் அனைத்துப் பகுதிகளுக்கும் தார் சாலைகளைத் தவிர்த்து சிமெண்ட் சாலை அமைக்கப்படுவதற்கான “ரகசியம்“ குறித்து தெரிவித்த நகர்மன்ற அங்கத்தினருள் ஒருவர், “ஒரு குறிப்பிட்ட அளவில் தார் சாலை அமைப்பதற்கு இரண்டு லட்சம் ரூபாய் செலவு மதிப்பிடப்படுகிறதெனில், அதே அளவில் சிமெண்ட் சாலை அமைக்க நான்கரை லட்சம் ரூபாய் வரை செலவு மதிப்பிடப்படும்... இவ்வாறிருக்கையில், “கைமடக்கு” எதில் அதிகம் கிடைக்கிறதோ அதை நிறைவேற்றினால்தானே இவர்களுக்கு லாபம்...?” என்றார்.
மொத்தத்தில், அடைமழை பெய்தாலும் தார் சாலையில் தேங்கிய தண்ணீர் அடுத்த நாளே வற்றிக் கொண்டிருந்த நிலையில், இன்றைய சிமெண்ட் சாலைகள் காரணமாக சிறுமழை பெய்தாலும் பல நாட்களுக்கு தண்ணீர் தேங்கி, கொசுக்களை உற்பத்தி செய்து, நோய்களைப் பரப்பிக்கொண்டிருப்பது வழமையான காட்சியாகிவிட்டது.
தகவல்:
M.A.K.முஹம்மத் இப்றாஹீம் ஸூஃபீ,
கொச்சியார் தெரு, காயல்பட்டினம்.
|