ஐக்கிய அரபு அமீரக காயல் நல மன்றத்தின் சார்பில் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வரும் “காயலர் தினம்” ஒன்றுகூடல் நிகழ்ச்சியின் இவ்வாண்டு ஒன்றுகூடல் 15.04.2011 அன்று நடைபெற்றது.
இந்நிகழ்ச்சி குறித்து அம்மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
அமீரக காயல் நல மன்றம் வருடந்தோறும் வெகு விமரிசையாகக் கொண்டாடிவரும் "காயலர் தினம்" இவ்வருடமும் அல்லாஹ்வின் பேருதவியால் கடந்த ஏப்ரல் 15ஆம் தேதி வெள்ளிக்கிழமையன்று துபை அல்-ஸத்வாவில் அமைந்திருக்கும் அல்-ஸஃபா பூங்காவில் வழமையான குதூகலத்துடன் நடைபெற்றது.
கூட்டத்திற்கான ஏற்பாடுகளைக் கவனிப்பதற்காக முன்னரே தனித்தனிக் குழு அமைக்கப்பட்டிருந்ததால் அவரவர் தத்தம் பணிகளை அதிகாலை முதலே நிறைவேற்றத் துவங்கிவிட்டனர்.
தேனீர் - சிற்றுண்டி:
காலை 09.00 மணி முதலே உறுப்பினர்கள் தங்கள் குடும்ப சகிதம் உற்சாகத்துடன் பூங்காவிற்குள் வரத்தொடங்கி விட்டனர். அவர்களனைவருக்கும் தேநீர், சமுசா பரிமாறப்பட்டது. அன்று பூங்காவில் தட்பவெப்ப நிலை மிகவும் இதமாக இருந்த காரணத்தால், சிறார்கள் காலை முதல் தங்கள் முதன்மைப் பணியான விளையாட்டுகள், ஓட்ட ஆட்டங்களில் மும்முரத்துடன் ஈடுபடத் தொடங்கிவிட்டனர்.
காயல்பட்டினம் உடல் நலன் ஆய்வு:
தனக்கென தனியாக ஒரு மேஜை ஏற்பாடு செய்து, வட அமெரிக்க காயல் நல மன்றம், தம்மாம் காயல் நற்பணி மன்றம் மற்றும் தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் இணைந்து மிகவும் சிறப்பான முறையில் தயாரித்து அனுப்பி வைத்திருந்த உடல் நல ஆய்வு (Kayalpatnam Health Survey - KHS) படிவத்தை ஆண் பெண் தன்னார்வலர்களுக்கு வழங்கிய சாளை ஷேக் ஸலீம், அதுகுறித்த செய்முறை விளக்கப் பயிற்சியை அளித்தார்.
CFFC குறித்து விளக்கம்:
தொடர்ந்து, காயல்பட்டினம் நகரில் புற்றுநோய் பரவலுக்கான காரணிகளைக் கண்டறிவதற்காக உருவாக்கப்பட்டுள்ள தற்காலிக அமைப்பான Cancer Fact Finding Committee - CFFC அமைப்பின் ஆய்வறிக்கைகள் குறித்து வந்திருந்தோருக்கு விளக்கிக் கூறி, மேல்நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் பொருட்டு, அதுகுறித்த உறுப்பினர்களின் முறைப்படியான அங்கீகாரத்தைப் பெற்றார்.
தொடர்ந்து, வருகை தந்திருந்த உறுப்பினர்கள் ஒருவருக்கொருவர் முகமன்கள் கூறி, தமக்கிடையில் மகிழ்ச்சியைப் பரிமாறி, நகர்நலன் குறித்த கருத்துப் பரிமாற்றங்களில் ஆர்வத்துடன் ஈடுபட்டனர். இவ்வாறாக ஜும்ஆ தொழுகைக்கான நேரம் வரை நிகழ்வுகள் நடைபெற்றன. ஜும்ஆ தொழுகை நிறைவுற்றதும், பஃபே முறையில் சுவைமிக்க மதிய உணவு விருந்துபசரிப்பு நடைபெற்றது.
காயலர் தினம்:
இது “காயலர் தினம்” ஒன்றுகூடல் நிகழ்ச்சி என்பதால் மதிய உணவிற்குப் பின் கலந்துரையாடல் நிகழ்ச்சி மேடை நிகழ்ச்சியாக முறைப்படி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு அமீரக காயல் நல மன்றத்தின் தலைவர் ஹாஜி ஜே.எஸ்.ஏ.புஹாரி தலைமை தாங்க, மன்றத்தின் துணைத்தலைவர் சாளை ஷேக் ஸலீம் முன்னிலை வகித்தார்.
தலைமையுரை:
உறுப்பினர் ஹாஜி கிராஅத்துடன் கூட்டத்தைத் துவக்கி வைத்தார். பின்னர் தலைவர் தனது தலைமையுரையில், நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்திருந்த அனைவரையும் மன்றத்தின் சார்பில் வரவேற்றுப் பேசியதோடு, காயலர்களுக்கிடையே இருக்க வேண்டிய ஒற்றுமையின் முக்கியத்துவம் குறித்து விளக்கிப் பேசினார்.
மருத்துவ சலுகை குறித்து இ.டி.ஏ. குழும நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை:
இ.டி.ஏ. நிறுவனங்களில் பணியாற்றாத அமீரக காயல் நல மன்ற உறுப்பினர்களுக்கும், அந்நிறுவனத்தின் பணியாளர்களுக்கு வழங்கப்படுவதைப் போல மருத்துவச் செலவினங்களில் சிறப்புச் சலுகைகளைப் பெறுவதற்காக இ.டி.ஏ. துணை நிறுவனமான ப்ரைம் மெடிக்கல் சென்டருடன் (PMC) பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதாக அப்போது அவர் தெரிவித்தார்.
கேன்சர் ஃபவுண்டேஷன்:
மன்றத்தின் பல்வேறு ஆக்கப்பூர்வமான செயல்திட்டங்கள் குறித்து விளக்கிப் பேசிய அவர், தாயகமாம் காயல்பட்டினத்தில் கேன்சர் பவுண்டேஷன் நிறுவுதல், மன்றத்தால் வெளியிடப்படவுள்ள சிறப்பு மலருக்காக விளம்பரங்கள் சேகரித்தல் குறித்து விவரித்தார்.
வலைதளம் மூலம் உறுப்பினர் தகவல் சேகரிப்பு:
உறுப்பினர்கள் தமது சந்தா தொகைகளை நிலுவையின்றி குறித்த காலத்தில் செலுத்த வேண்டியதன் அவசியம் குறித்துப் பேசிய அவர், காயல்பட்டினம்.காம் உறுதுணையுடன் வலைதளத்தில் மன்றத்தின் அனைத்து உறுப்பினர்களின் தகவல்களை சேகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
காயல்பட்டினம் உடல் நலன் ஆய்வு, CFFCயின் ஆய்வறிக்கைக்கு ஒப்புதலளிக்கும் வகையில் அனைத்து உறுப்பினர்களும் கையெழுத்திட வேண்டியதன் அவசியம் குறித்து கூட்டத்தில் பங்கேற்ற அனைவருக்கும் எடுத்துக்கூறி, CFFC மென்மேலும் ஆற்றி வரும் ஆய்வுகளையும், அதன் செயல்திட்டங்களையும் விளக்கிப் பேசினார்.
இலச்சினை உருவாக்கப் போட்டியில் பரிசு வென்றோர்:
பின்னர் மன்றத்தின் இலச்சினை போட்டியில் கலந்துகொண்டு, மன்றத்திற்காக அழகிய இலச்சினையை உருவாக்கித் தந்தமைக்காக முதல் பரிசைத் தட்டிச் சென்ற பி.எம்.ஹுசைன் நூருத்தீனுக்கு, மன்றத்தால் அறிவிக்கப்பட்ட படி 500 திர்ஹம் பரிசு வழங்கப்பட்டது. உருவாக்கப்பட்ட இலச்சினை மன்ற உறுப்பினர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது.
அத்துடன் இந்த இலச்சினைப் போட்டியில் கலந்துகொண்டு ஆர்வத்துடன் இலச்சினைகளை வடிவமைத்து வழங்கிய ஹாஃபிழ் எஃப்.ஷாஹுல் ஹமீத், பி.எம்.டி.அஹ்மத் நெய்னா, ஸதக்கத்துல்லாஹ் ஷாதுலீ ஆகியோருக்கு ஊக்கப்பரிசாக தலா நூறு திர்ஹம் வழங்கப்பட்டது.
இப்பரிசுகளை மன்றத் தலைவர், செயலர் ஹாஜி டி.எஸ்.ஏ.யஹ்யா முஹ்யித்தீன், மன்றத்தின் மூத்த உறுப்பினர்கள் ஹாஜி துணி உமர், ஹாஜி எம்.எஸ்.நூஹ் ஸாஹிப் ஆகியோர் வழங்கினர்.
தொடர்ந்து, மன்றத்தின் புதிய உறுப்பினர்கள் கூட்டத்தாருக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர். பின்னர் உறுப்பினர்களின் கலந்துரையாடல் அஸ்ர் வேளை வரை கலகலப்பாக நடைபெற்றது.
சிறுவர்-மழலையர் விளையாட்டுப் போட்டிகள்:
அஸ்ர் தொழுகைக்குப் பின் சிறுவர்கள் மற்றும் மழலையருக்கான விளையாட்டு போட்டிகள் துவங்கின. மழலைப் பட்டாளங்களின் கூத்து கும்மாளங்கள் அனைவரது கவனத்தையும் பெரிதும் கவர்ந்தது.
பெரியவர் பல்சுவைப் போட்டிகள்:
அதே நேரத்தில் பெரியவர்களுக்கான போட்டிகளும், பெண்கள் பகுதியில் அவர்களுக்கான சன்மார்க்க மற்றும் பொது அறிவுப் போட்டிகளும் உற்சாகமாக நடைபெற்றது.
மாலை தேநீர் விருந்திற்குப் பின்னர், போட்டிகளில் வெற்றி பெற்ற அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொண்ட அனைத்து மழலையர் மற்றும் சிறுவர்-சிறுமியருக்கும் ஊக்கப்பரிசுகள் வழங்கப்பட்டன.
இறுதியாக துஆவுடன் “காயலர் தினம்” ஒன்றுகூடல் நிகழ்ச்சி இறையருளால் இனிதே நிறைவுற்றது. மன்றத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பகுதிவாரியான வாகனங்களில் இனிய நினைவுகளுடன் உறுப்பினர்கள் தமதில்லங்களுக்குத் திரும்பிச் சென்றனர்.
இந்த ஒன்றுகூடல் நிகழ்ச்சியின் அத்துனை செலவினங்களையும் மன்ற உறுப்பினர்களே பகிர்ந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் மற்றும் செய்தியாக்கம்:
சாளை ஷேக் ஸலீம்,
துணைத்தலைவர்,
காயல் நல மன்றம், ஐக்கிய அரபு அமீரகம்.
படங்கள்:
நூருல்லாஹ், (ETA HRD),
துபை, ஐக்கிய அரபு அமீரகம்.
செய்தி, படம் திருத்தப்பட்டுள்ளது. |