DCW தொழிற்சாலையில் VCM தயாரிப்பு மையத்தில் தீ விபத்து ஏற்பட்டால் அவசர கால நடவடிக்கைகள் குறித்து மாதிரி ஒத்திகை நிகழ்ச்சி நடத்தி காண்பிக்கப்பட்டது.
தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் தீயணைப்பு தொண்டு வார விழா கடை பிடிக்கப்படுகிறது. இதனையொட்டி விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை மற்றும் DCW தொழிற்சாலை இணைந்து தீ விபத்து ஏற்பட்டால் அதனை தடுப்பது குறித்த அவரச கால நடவடிக்கைகள் மாதிரி ஒத்திகை (Mock Drill) மூலம் செயல் விளக்கமாக செய்து காண்பிக்கப்பட்டது.
இத்தொழிற்சாலையில் வினைல் குளோரைடு மோனோமர் (VCM) டேங்கில் ஏற்றும் பகுதியில் மாதிரி ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. நேற்று மதியம் 3.18 மணிக்கு பிளாண்டில் தீ பிடித்ததற்கான ஹாரன் ஒலிக்கப்பட்டது. இதனையடுத்து அவசர கால நடவடிக்கைகள் தொடங்கியது. உடனடியாக விசிஎம் மையத்தை சுற்றியுள்ள பகுதியிலிருந்து தண்ணீர் பாய்ச்சி அடிக்கப்பட்டது. மேலும் நாலாபுறமும் இருந்து தண்ணீர் பாய்ச்சி அடிக்கப்பட்டது. தொடர்ந்து சாகுபுரம் தீயணைப்பு வண்டி, திருச்செந்தூர் தீயணைப்பு வண்டிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து அவசர கால நடவடிக்கைள் செய்தனர். சம்பவ இடத்தில் மயங்கி விழுந்த இருவரை துரித கதியில் காப்பாற்றுவது போல ஒத்திகை நடந்தது.
இதுகுறித்து தூத்துக்குடி கோட்ட தீயணைப்பு மீட்பு பணிகள் துணை அலுவலர் மனோகரன் நிருபர்களிடம் கூறியதாவது:
1944ம் ஆண்டு ஏப்ரல் 14ம் தேதி மும்பையில் உள்ள விக்டோரியா துறைமுகத்தில் கப்பல் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தால் 100 மீட்டர் சுற்றுளவுக்கு பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இதில் 231 பேர் பலியானார்கள். 66 பேர் தீயணைப்பு துறையை சேர்ந்தவர்கள். ஆண்டுதோறும் இதனை நினைவு கூறும் வகையில் ஏபரல் 14ம் தேதி முதல் 20ம் தேதி வரை தீயணைப்பு தொண்டு வாரமாக கடைபிடிக்கப்படுகிறது.
இந்த நாட்களில் கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், தொழிற்சாலைகள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தீயணைப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் 8 பெரிய தொழிற்சாலைகள் உள்ளன. இந்த தொழிற்சாலைகளில் போலி மாதிரி ஒத்திகை நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது உண்டு.
இந்த ஆண்டு டிசிடபிள்யூ., தொழிற்சாலையில் எளிதில் தீப்பற்ற கூடிய பகுதியை தேர்வு செய்து அதில் போலி மாதிரி ஒத்திகை நடத்தி காண்பிக்கப்பட்டது. அனைவரும் ஒருமித்து இந்தியநாட்டில் தீ பாதுகாப்பிற்காக பாடுபடுவோம் என்ற தலைப்பில் இந்த ஆண்டு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து DCW உதவி தலைவர் ஜெயகுமார் நிருபர்களிடம் கூறுகையில்,
இந்த தொழிற்சாலையில் 2 மாதத்திற்கு ஒரு முறை இதே போன்று மாதிரி ஒத்திகை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆலையில் போதிய அளவில் முழுமையான பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆலையிலிருந்து 4 கி.மீ., தூரத்திற்கு வெளியே பொதுமக்கள் வசிக்கும் பகுதிகள் உள்ளன. இந்த முறை தீயணைப்பு துறையினருடன் இணைந்து இந்நிகழ்ச்சியை நடத்தியுள்ளோம். இது போன்ற தொடர் நிகழ்ச்சிகள் நடத்தப்படும். இந்த ஆலை முற்றுலும் பாதுகாப்பு கொண்டு ஆலையாக செயல்படுகிறது
இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சிக்கு DCW தொழிற்சாலை மூத்த உதவி தலைவர் சீனிவாசன் தலைமை வகித்தார். பாதுகாப்பு மேலாளர் ராஜாசங்கர் முன்னிலை வகித்தனர். துணை பாதுகாப்பு மேலாளர் ராஜராம் வரவேற்றார். தூத்துக்குடி கோட்ட தீணைப்பு துணை அலுவலர் லோகிதாஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தகவல்:
www.tutyonline.net
|