தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு 13.04.2011 இன்று காலை 08.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை நடைபெற்றது.
இத்தேர்தலில் வாக்களிப்பதற்காக சென்னை, விழுப்புரம், திருச்சி, காரைக்கால், திருவனந்தபுரம், கோழிக்கோடு, சங்கனாச்சேரி, எர்ணாகுளம் உட்பட பல ஊர்களிலிருந்தும் ஏராளமான காயலர்கள் காயல்பட்டினம் வந்திருந்தனர்.
வாக்களித்துவிட்டு, அன்றிரவு 08.30 மணிக்கு காயல்பட்டினம் கடற்கரையிலிருந்து புறப்பட ஆயத்தமான அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொருட்டு அவசர நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
காயல்பட்டினம் கடற்கரை தொழுமிடம் அருகில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், தி.மு.க. மாநில பொதுக்குழு உறுப்பினர் எஸ்.ஐ.காதர், நகர தி.மு.க. செயலாளர் மு.த.ஜெய்னுத்தீன், காங்கிரஸ் ஷாஜஹான், காயல்பட்டினம் நகர்மன்ற உறுப்பினர் எம்.என்.சொளுக்கு, தைக்கா சாமு, சென்னை ஏ.கே.பீர் முஹம்மத், அப்துர்ரஷீத் என்ற அவ்லியா, “அறிவாளி” காதர் மற்றும் பலர் முன்னிலை வகித்தனர்.
திமுக கூட்டணி கட்சியான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில கொள்கை பரப்புச் செயலாளர் காயல் மகபூப் தொகுத்து வழங்கினார்.
துவக்கமாக, அனைத்துப் பகுதிகளைச் சார்ந்த வாக்காளர்களும் தி.மு.க. வேட்பாளர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணனுக்கு சால்வை அணிவித்தனர்.
பின்னர் உரையாற்றிய அனிதா தெரிவித்ததாவது:-
வாக்களிப்பது கடமையெனக் கருதி தமது பல்வேறு பணிகளுக்கிடையிலும் தாயகம் வந்து வாக்களித்த வாக்களாப் பெருமக்களாகிய உங்களை நான் என்றைக்கும் மறக்க மாட்டேன்...
முத்தமிழறிஞர் கலைஞர் தொடர்ந்து ஆறாவது முறையாகவும் தமிழக முதல்வர் பொறுப்பை ஏற்றிடுவதற்காக இந்நகர மக்கள் - குறிப்பாக இங்குள்ள பெண்கள் காட்டும் ஆர்வமும், அக்கறையும் எங்களை மிகவும் மகிழ்ச்சியிலாழ்த்தியுள்ளது.
இந்தளவுக்கு நீங்கள் கலைஞர் மீதும், என் மீதும் பாசம் வைத்து, மகிழ்ச்சியோடு ஊருக்கு வந்து வாக்களித்துவிட்டு தற்போது திரும்பிச் சென்றுகொண்டிருக்கிறீர்கள்... இத்தனை சிரமங்களை எடுத்துக்கொண்டு வாக்களித்த உங்கள் அனைவருக்கும் நான் என்னதான் கைமாறு செய்யப்போகிறேனோ தெரியவில்லை...
உங்கள் அனைவருக்கும் நான் மனமார்ந்த நன்றியை முத்தமிழறிஞர் கலைஞர் சார்பிலும், என் சார்பிலும் தெரிவித்துக்கொள்கிறேன்.
(முக்கியமான அமைச்சர் பொறுப்பில் அனிதா வரவேண்டும் என கூடியிருந்தோர் குரலெழுப்பினர். அதனைக் கேள்வியுற்ற அவர்,) நான் வெற்றிபெற்ற பின்னர் சாதாரண சட்டமன்ற உறுப்பினராக இருந்தாலும் இந்நகரத்திற்கும், நகர மக்களுக்கும் என்னாலான அனைத்து ஒத்துழைப்புகளையும் உங்கள் உற்ற சகோதரனாக இருந்து எப்போதும் போல நிறைவாகச் செய்து தருவேன்...
வாக்களிப்பதற்காக இந்தளவுக்கு சிரமம் எடுத்துக்கொண்ட உங்கள் யாவருக்கும் அந்த ஆண்டவன் நல்ல ஆரோக்கியத்தையும், உங்கள் வணிகத்தில் அபிவிருத்தியையும் தருவானாக என்று இந்த நேரத்தில் வேண்டிக் கொள்கிறேன்...
இவ்வாறு அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
கூட்டத்தில் திரளான பொதுமக்கள் கலந்துகொண்டனர். கூட்டம் நிறைவுற்றதும் அவர்கள் அனைவரும் பேருந்துகளில் தத்தம் பகுதிகளுக்கு புறப்பட்டுச் சென்றனர்.
|