காயல்பட்டினம் கறுப்புடையார் பள்ளி வட்டம் (சிங்கித்துறை) பகுதியில் - சுனாமி குடியிருப்புகள் திட்டத்தின் கீழ் - 169 வீடுகள், அக்டோபர் 2010 முதல் கட்டப்பட்டு வந்தன. இவ்வாண்டு பிப்ரவரி மாதம் நீதிமன்றம் வழங்கிய இடைக்கால தடை மூலம் தற்போது கட்டுமானங்கள் நிறுத்தப்பட்டுள்ளது.
இத்திட்டம் குறித்து மேலும் சில தகவல்களை காயல்பட்டணம்.காம் இணையதளம் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் பெற்றுள்ளது. அவைகளின் சாராம்சம் வருமாறு:-
169 வீடுகள் கட்டுவதற்காக தேவைப்படும் இடத்தினை, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் - மார்ச் 23, 2010 தேதியிட்ட கடிதம் மூலம் (கடிதம் எண் 27640) ஒதுக்கியுள்ளார். சர்வே எண்கள் 358/2B மற்றும் 358/2C மூலம் 1.375 ஹெக்டேர் (141 வீடுகளுக்கு) இடமும், சர்வே எண் 360/2B மூலம் 0.085 ஹெக்டேர் (28 வீடுகளுக்கு) இடமும் ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்விடங்களை மார்ச் 25, 2010 அன்று தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் (Tamil Nadu Slum Clearance Board) பெற்றுக்கொண்டது.
சுனாமி குடியிருப்பு திட்டங்களை நகர்புறங்களில் நிறைவேற்ற தமிழக அரசு தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தினை (Tamil Nadu slum Clearance Board) நியமித்திருந்தது. கிராம புறங்களில் இத்திட்டம் தமிழக ஊரக வளர்ச்சி துறையால் (Rural Development and Panchayat Raj Department) நிறைவேற்றப்பட்டு வருகிறது.
இக்குடியிருப்புகளை கட்டுவதற்கான ஒப்புதலை தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் - ஏப்ரல் 12, 2010 அன்று நிறைவேற்றப்பட்ட வாரிய தீர்மானம் (எண் 7/34) மூலம் வழங்கியது. இத்திட்டதிற்க்கான டெண்டர் ஜூலை 19, 2010 முதல் ஆகஸ்ட் 12, 2010 வரை பெறப்பட்டது.
தமிழ் நாடு குடிசை மாற்று வாரியம் - அக்டோபர் 20, 2010 தேதியிட்ட கடிதம் மூலம் - இக்குடியிருப்புகள் சம்பந்தமான Layoutக்கான ஒப்புதலை DTCP இடம் பெறும்படி மாவட்ட ஆட்சியரை கேட்டுக்கொண்டுள்ளது. பார்க்கவும் கடிதம் கீழே:-
இருப்பினும் - அத்தருணத்தில் மாவட்ட ஆட்சியரால் DTCP ஒப்புதல் பெறப்பட்டதாக தெரியவில்லை. அம்மாதத்திலேயே கட்டுமானப்பணிகள் காயல்பட்டினத்தில் துவங்கின. ஜனவரி துவக்கத்தில் இத்திட்டத்தினை எதிர்த்து காயல்பட்டினத்தில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
ஜனவரி 12, 2011 தேதியிட்ட கடிதம், மாவட்ட ஆட்சியரால் நகர் ஊரமைப்பு துறைக்கு (DTCP) அனுப்பப்பட்டுள்ளது. அக்கடிதத்தினை மேற்கோள்காட்டி நகர் ஊரமைப்பு துறை (DTCP) - பிப்ரவரி 2, 2011 தேதியிட்ட கடிதங்கள் மூலம் ஒப்புதல் (218/11/Tiruneveli LPA) வழங்கியது. மேலும் CRZ ஒப்புதலை DCZMA அமைப்பிடம் பெறும்படி ஊரமைப்பு துறை அறிவுறுத்தியது. பார்க்கவும் கடிதம் கீழே:-
அதனை தொடர்ந்து தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் - பிப்ரவரி 8 தேதியிட்ட கடிதம் மூலம் தமிழ் நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் CRZ ஒப்புதல் கோரியது. இவ்விண்ணப்பத்தில் சில தவறான தகவல்கள் வழங்கியிருப்பதாக தெரிகிறது.
கட்டுமானங்கள் உச்ச கடல் அலை (High Tide Line) எல்லையிலிருந்து 200 - 500 மீட்டர் தூரத்தில் நடப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உண்மையில் கட்டுமானங்கள் 142 மீட்டர் தூரத்தில் இருந்து துவங்குவதாக சமூக ஆர்வலர்கள் அளவிட்டுள்ளனர்.
மேலும் கட்டுமானங்கள் CRZ 1 பகுதியில் அமைந்திருப்பதாக விண்ணப்பம் தெரிவிக்கின்றது. இருப்பினும் காயல்பட்டணம்.காம் வசம் உள்ள ஆவணங்கள் இப்பகுதி CRZ 3 பகுதி என தெரிவிக்கின்றன.
சர்ச்சையில் உள்ள சர்வே எண்கள் CRZ 1 பகுதியில் அமைந்திருக்கின்றன என எடுத்துக்கொண்டாலும், CRZ 1 பகுதிக்கான கட்டுப்பாடுகள், CRZ 3 பகுதிகளுக்கான கட்டுப்பாடுகளை விட கடுமையானது. CRZ 3 பகுதிகளில் உச்ச கடல் அலை எல்லையில் இருந்து 200 மீட்டர் வரை எந்த கட்டுமானத்திற்கும் அனுமதி கிடையாது. ஆனால் CRZ 1 பகுதிகளில் 500 மீட்டர் வரை கட்டுமானங்களுக்கு அனுமதி கிடையாது.
|