தமிழகத்தின் நான்காம் மாநில தேர்தல்கள் - அப்போதைய மெட்ராஸ் மாநிலத்தில், 1967 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் - 3 நாட்களாக நடந்தது.
பிப்ரவரி 5, பிப்ரவரி 18 மற்றும் பிப்ரவரி 21 ஆகிய தேதிகளில் நடந்த தேர்தலில், 234 தொகுதிகளின் உறுப்பினர்கள் தேர்வு
செய்யப்பட்டனர்.
1962 ஆம் ஆண்டு ஆட்சியை மீண்டும் கைப்பற்றிய காங்கிரஸ் துவக்கம் முதலே பிரச்சனைகளை எதிர்க்கொள்ள நேர்ந்தது. முதல்வர் காமராஜர் -
மத்தியில் காங்கிரஸ் கட்சியின் தலைமையை ஏற்க, 1963 ஆம் ஆண்டு முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். அவருக்கு பதிலாக, காங்கிரஸ்
கட்சி - எம்.பக்தவச்சலத்தை, முதல்வராக தேர்வு செய்தது. பக்தவத்சலம் - காமராஜர் போல் மக்களை கவரும் திறன் இல்லாதவர் என்று பலராலும்
பேசப்பட்டது. மேலும் - அவரின் ஆட்சிக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டுகளும் எடுத்து வைக்கப்பட்டன.
விலைவாசி உயர்வு, அரிசி தட்டுப்பாடு ஆகியவை பிரதான பிரச்சனைகளாக மாநிலம் முழுவதும் நிலவியது. 1965 ஆம் ஆண்டு, மத்திய அரசு -
ஹிந்தி மொழியை - ஆங்கிலத்திற்கு பதிலாக, ஆட்சி மொழியாக அறிவித்தது. ஜனவரி 26, 1965 இல் அமலுக்கு வந்த இச்சட்டத்தினை எதிர்த்து
தி.மு.க. மாநிலம் முழுவதும், ஆர்ப்பாட்டங்கள் நடத்தியது. அதனை தொடர்ந்த கலவரங்களில் பலர் உயிர் இழந்தனர்.
1967 தேர்தல்கள் - இப்பிரச்சனைகளின் பின்னணியில் நடைபெற்றது.
தேர்தல் வாக்குறுதியாக தி.மு.க. - ஒரு ரூபாய்க்கு, ஒரு படி (சுமார் 4.5 கிலோ) அரிசி வழங்கப்படும் என்று அறிவித்தது. வாக்கு சேகரிப்பின் போது - காமராஜர் அண்ணாச்சி, கடலைபருப்பு விலை என்னாச்சி, பக்தவத்சலம் அண்ணாச்சி, அரிசி விலை என்னாச்சி போன்ற கோசங்களை, காங்கிரஸ்க்கு எதிராக தி.மு.க. பயன்படுத்தியது.
நடிகர் எம்.ஆர்.ராதா - எம்.ஜி.ஆர்.யை துப்பாக்கியால் சுட்டதும் இத்தேர்தலுக்கு முன்னர் தான். இத்தேர்தலின் போது காயப்பட்ட எம்.ஜி.ஆர். புகைப்படம், தி.மு.க.விற்கு வாக்கு சேகரிக்க பயன்படுத்தப்பட்டது.
இத்தேர்தலில் காங்கிரஸ் தனித்து போட்டியிட்டது. முந்தைய தேர்தல்களை போல் இத்தேர்தலிலும், பெரியார் - காங்கிரஸ் கட்சிக்கு தன் ஆதரவினை வழங்கினார்.
தி.மு.க. கூட்டணியில் பல கட்சிகள் இடம் பெற்றனர். அவை சுதந்தரா கட்சி, சி.பி.எம்., பிரஜா சோசியலிஸ்ட் கட்சி, சம்யுக்தா சோசியலிஸ்ட் கட்சி, Tamil Nadu Toilers கட்சி, குடியரசு கட்சி, இந்தியன் யூனியன் முஸ்லிம் கட்சி ஆகும். தமிழ் அரசு கழகம் மற்றும் நாம் தமிழர் கட்சி - ஆகியவை தி.மு.க. சின்னம் - உதய சூரியனில் - போட்டியிட்டன. இக்கூட்டணியை உருவாக்கியதில் முக்கிய பங்கு ராஜாஜியினை சாரும்.
காங்கிரஸ் மற்றும் தி.மு.க. - இத்தேர்தலில் சினிமா உலகினை முழுவதுமாக பயன்படுத்தின. காங்கிரஸ் கட்சி - வாழ்க நம் தாயகம் என்ற பெயரில், சிவாஜி கணேசன் மற்றும் பத்மினி நடித்த படத்தினை பயன்படுத்தியது. சிவாஜியும், பத்மினியும் காங்கிரஸ்க்காக பிரச்சாரம் செய்தனர்.
இருப்பினும் - தமிழக சினிமா துறையில் தி.மு.க. வின் ஆழமான அனுபவம்முன் காங்கிரஸ் பிரச்சாரம் எடுப்படவில்லை. தேர்தலுக்கு முந்தைய ஆண்டுகளிலேயே காஞ்சி தலைவன், ஆயிரத்தில் ஒருவன், எங்க வீட்டு பிள்ளை, அன்பே வா, நான் ஆணையிட்டால், விவசாயி, அரசக்கட்டளை போன்ற படங்களின் வசனங்கள் மூலம் அரசியல் பிரச்சாரம் தி.மு.க.வினால் மேற்கொள்ளப்பட்டது. எம்.ஜி.ஆர். படங்களை தவிர - ஜெய்ஷங்கர், ரவிச்சந்திரன் போன்ற சிறு நடிகர்களின் படங்களிலும் தி.மு.க. சார்பு செய்திகள் சொல்லப்பட்டன.
778 வேட்பாளர்கள் போட்டியிட்ட இத்தேர்தலில், மொத்த சுமார் 2 கோடியே, 7 லட்ச வாக்காளர்களில் – 76.57 சதவீத வாக்காளர்கள், தங்கள்
வாக்கினை அளித்தனர்.
திருசெந்தூர் தொகுதியில் 4 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். தொகுதியின் மொத்த வாக்காளர்கள் 105,055. இதில் 73,021 வாக்காளர்கள் (69.51
சதவீதம்) தங்கள் வாக்கினை அளித்தனர்.
தி.மு.க. வேட்பாளர் ஈ.பெர்னாண்டோ 39,619 வாக்குகள் பெற்று வெற்றிப்பெற்றார். காங்கிரஸ் கட்சியை சார்ந்த எஸ்.நாடார் 28,971
வாக்குகள் பெற்று இரண்டாம் இடம் பெற்றார்.
சுயேச்சை வேட்பாளர்கள்
- சுந்தரம் 1390 வாக்குகளும்,
- ஏ.ஏ.எம்.எஸ்.ஹமீத் 691 வாக்குகளும்,
பெற்றனர்.
மாநிலத்தின் 234 இடங்களில் தி.மு.க. கூட்டணி 179 இடங்கள் வென்று ஆட்சியை கைப்பற்றியது. சி.என். அண்ணாதுரை முதல்வரானார். இதன் பிறகு தமிழகத்தில் மீண்டும் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வரவில்லை.
திராவிட முன்னேற்ற கழகம் (தி.மு.க.) 137 இடங்களை வென்றது. சுதந்தரா கட்சி 20 இடங்களும், சி.பி.எம். 11 இடங்களும், பிரஜா சோசியலிஸ்ட் கட்சி 4 இடங்களும், இந்தியன் யூனியன் முஸ்லிம் கட்சி 3 இடமும், சம்யுக்தா சோசியலிஸ்ட் கட்சி 2 இடமும், தி.மு.க. ஆதரவு சுயேட்சைகள் 2 இடமும் இத்தேர்தலில் வென்றனர்.
காங்கிரஸ் கட்சி 51 இடங்கள் வென்றது. காங்கிரஸ் மந்திரி சபையில் இருந்த அமைச்சர்கள் அனைவரும் - ஜி.பூவராகன் தவிர - தேர்தலில் தோல்வியுற்றனர். முதல்வர் பக்தவச்சலமும் தோல்வியுற்றார்.
தேர்தலுக்கு சில நாட்கள் முன்னர் காமராஜர் விபத்து ஒன்றினால் படுக்கையானார். விருதுநகர் தொகுதியில் போட்டியிட்ட அவர், படுத்துக்கொண்டே ஜெய்ப்பேன் என்று அறிவித்தது அக்காலங்களில் பெரிதும் பேசப்பட்டது. இருப்பினும் தி.மு.க. வேட்பாளர் பீ.ஸ்ரீனிவாசனிடம் 1285 வாக்குகள் வித்தியாசத்தில் அவர் தோல்வியுற்றார்.
சி.பி.ஐ. 2 இடமும், பார்வர்ட் பிளாக் 1 இடமும் இத்தேர்தலில் வென்றனர்.
[பாகம் 1] [பாகம் 2] [பாகம் 3]
[பாகம் 4] [பாகம் 5] [பாகம்
6]
[தொடரும்]
|