"ஒசாமா பின்லாடன் பின்பற்றிய பயங்கரவாதத்திற்கு, "இஸ்லாமிய பயங்கரவாதம்' என்று லேபிள் ஒட்ட எத்தனிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது' என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
இதுகுறித்து, முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கை:
உலக நாடுகளில் அதிர்வையும், அச்சத்தையும் ஏற்படுத்தி, உலக வல்லரசுகளில் ஒன்றான அமெரிக்காவுக்கே பெரும் சவாலாக இருந்து வந்த ஒசாமா பின்லாடன் எனும் உசாமா பின் முகமது பின் அவாத் பின் லாடினின் கதையை, 40 நிமிடங்களில் அமெரிக்கப் படை முடித்துவிட்டது.
ஆப்கானிஸ்தானில், சோவியத் படைகளுக்கு எதிராக கலகம் செய்ய வேண்டும் என்பதற்காகவே, தலிபான்களை அமெரிக்கா ஊக்குவித்தது. இன்றைக்கு அதே தலிபான்களை ஒடுக்குவதற்காக, ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைகள் குவிக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவால் ஊக்குவிக்கப்பட்ட தலிபான்களுக்கு உதவுவதற்காகவே, பின்லாடன் ஆப்கானிஸ்தான் வந்தான் என்று சுட்டிக் காட்டுகின்றனர்.
தேசிய பயங்கரவாதம், மத பயங்கரவாதம், இடதுசாரி தீவிரவாதம், வலதுசாரி பயங்கரவாதம், அரசையே அழிக்கும் பயங்கரவாதம், அணு பயங்கரவாதம், ரசாயன பயங்கரவாதம், நுண்ணுயிரியல் பயங்கரவாதம், போதை பயங்கரவாதம் என்று பயங்கரவாதம் எந்த உருவெடுக்க முனைந்தாலும் அதை கிள்ளியெறிய வேண்டும்.
ஒசாமாவின் ஆசிரியர் சொன்ன, "வரலாறு தனது வரிகளை ரத்தத்தால் தவிர வேறு எதனாலும் எழுதுவதில்லை. புகழ் எனும் உயர்ந்த மாளிகை, மண்டை ஓடுகளால் தவிர வேறு எதனாலும் கட்டப்படுவதில்லை. கவுரவத்துக்கும், மதிப்பிற்கும், உடைந்த எலும்புகளாலும், பிணங்களாலும் தவிர வேறு எதைக்கொண்டும் அடித்தளம் இடப்படுவதில்லை' என்ற போதனையை அப்படியே உணர்ச்சிப்பூர்வமாக ஏற்றுக்கொண்டு, அதை நிலைநிறுத்துவதற்கு வாழ்நாள் முழுவதும் முயற்சி செய்த ஒசாமா பின்லாடன் எடுத்த கருவிதான் பயங்கரவாதம்.
ஒசாமா பின்பற்றிய பயங்கரவாதத்திற்கு, "இஸ்லாமிய பயங்கரவாதம்' என்ற லேபிளை ஒட்ட எத்தனையோ பேர் எத்தனிக்கின்றனர். அதை ஏற்றுக்கொள்ள முடியாது. இஸ்லாம் என்ற சொல்லுக்கு மற்றொரு பொருளே சமாதானம்.
எல்லா மதங்களிலிருந்தும் பயங்கரவாதிகள் உருவாவதை, சரித்திரம் சான்றுகளோடு காட்டுகிறது. தனிநபர்களையும், அப்பாவிகளையும் கொல்லும் பயங்கரவாதம் கண்டிக்கப்பட வேண்டும்; தண்டிக்கப்பட வேண்டும். இதில், யாருக்கும் கருத்து வேறுபாடு இருக்க முடியாது.
எந்தவித நியாயமான குறைகள் அல்லது கோபம் யார் மீது இருந்தபோதிலும், பயங்கரவாதத்தை நியாயப்படுத்துவதற்கு அடிப்படை அறவே இல்லை."கத்தியை கையில் எடுத்தவன்; கத்தியாலேயே அழிவான்' என்பது பழமொழி. அந்த பழமொழிக்கான பாடம் தான் ஒசாமா பின்லாடனின் வாழ்க்கை.
இவ்வாறு தமிழக முதல்வர் கருணாநிதி தனதறிக்கையில் தெரிவித்துள்ளார்.
நன்றி:
தினமலர் (04.05.2011)
|