தூத்துக்குடி மாவட்டத்தில் 6 முதல் 14 வயதுவரை உள்ள மாற்று திறனாளிகள் மொத்தம் 4 ஆயிரத்து 451 பேர் இருப்பதாக கணக்கெடுப்பில் கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த ஆண்டை விட 386 பேர் அதிகரித்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் பள்ளி செல்லாக் குழந்தைகள், மாற்று திறனாளி குழந்தைகள் கணக்கெடுப்பு பணி மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்டத்திலும் அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம் மேற்கொள்ளப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டத்தில் அனைவருக்கும் கல்வி இயக்க முதன்மை கல்வி அதிகாரி பகவதி ஆலோசனையின் பேரில் மாற்று திறனாளிகள் திட்ட ஒருங்கிணைப்பாளர் கண்ணம்மா மற்றும் 168 ஆசிரியர் பயிற்றுநர்கள், 54 சிறப்பாசிரியர்கள் சேர்த்து மொத்தம் 222 பேர் இம்மாவட்டத்தில் மாற்றுத்திறனாளி குழந்தைகள் எவ்வளவு பேர் இருக்கின்றனர் என்று வீடு, வீடாகச் சென்று சோதனை நடத்தினர்.
ஏப்ரல் மாதம் இறுதியில் சுமார் பத்து நாட்கள் மேற்கொள்ளப்பட்ட இந்த கணக்கெடுப்பின் படி 6 முதல் 14 வயதுடைய கை, கால் உடல் ஊனமுற்ற, மனநலம் குன்றிய, செவித்திறன் குறைந்த, கண்பார்வை அற்ற உள்ளிட்ட உடல் ஊனமுற்ற குழந்தைகள் அனைவரும் முழுமையாக கணக்கெடுக்கப்பட்டனர்.
இதில் ஆழ்வார்திருநகரி வட்டாரத்தில் 416 உடல் ஊனமுற்றோரும்,
கருங்குளம் வட்டாரத்தில் 330 பேரும்,
கயத்தாறு வட்டாரத்தில் 271 பேரும்,
கோவில்பட்டி வட்டாரத்தில் 406 பேரும்,
ஓட்டப்பிடாரம் வட்டாரத்தில் 399 பேரும்,
புதூர் வட்டாரத்தில் 338 பேரும்,
சாத்தான்குளம் வட்டாரத்தில் 380 பேரும்,
ஸ்ரீவைகுண்டம் வட்டாரத்தில் 396 பேரும்,
திருச்செந்தூர் வட்டாரத்தில் 386 பேரும்,
தூத்துக்குடி ரூரல் பகுதியில் 418 பேரும்,
உடன்குடி வட்டாரத்தில் 269 பேரும்,
விளாத்திகுளம் வட்டாரத்தில் 312 பேரும்,
தூத்துக்குடி நகர்புற பகுதியில் 516 ஊனமுற்றோரும் உள்ளனர்.
மொத்தம் இம் மாவட்டத்தில் 4 ஆயிரத்து 837 மாற்றுதிறனாளிகள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இதேபோன்று கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டபோது 4 ஆயிரத்து 451 பேர் இருந்தது கண்டறியப்பட்டது. தற்போது 386 மாற்றுதிறனாளிகள் அதிகரித்திருப்பது தற்போதைய கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் தற்போது கண்டறியப்பட்டுள்ள 4 ஆயிரத்து 837 மாற்றுதிறனாளிகளுக்கு வேண்டிய அனைத்து அரசு உதவிகள், சலுகைகள் உள்ளிட்டவற்றை வழங்குவதற்கு வேண்டிய ஏற்பாடுகள் செய்யப்படும் என்று எஸ்.எஸ்.ஏ திட்ட அதிகாரி பகவதி தெரிவித்தார். மேலும் அவர் இது குறித்து கூறியதாவது:-
தூத்துக்குடி மாவட்டத்தில் மாற்றுதிறனாளிகள் நலனுக்காக அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது கண்டறியப்பட்டுள்ள அனைத்து மாற்று திறனாளிகளுக்கும் அரசின் அனைத்து சலுகைகளும் கிடைப்பதற்கு வேண்டிய நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.
தூத்துக்குடி மாவட்டத்திற்கு மாற்று திறனாளிகள் குழந்தைகளுக்கு கல்வி அளித்தல், பாதுகாத்தல் உள்ளிடவற்றிற்கு 13 பகல் நேர பாதுகாப்பு மையம் செயல்படுகிறது.
இது தவிர அவர்களுக்கு தேவையான உபகரணங்கள் வழங்குதல், மருத்துவ முகாம் நடத்துதல் போன்ற அனைத்து உதவிகளும் அவர்களுக்கு வழங்கப்பட்டு நல்ல முறையில் அவர்களுக்கு அரசு சார்பில் பாதுகாப்பு அளிக்கப்படுகிறது.
இன்னும் கணக்கெடுப்பில் மாற்றுதிறனாளிகள் குழந்தைகள் விடுபட்டிருந்தாலும் அவர்கள் உடனடியாக அனைவருக்கும் கல்வி இயக்க அலுவலகத்தை அணுகி அந்த குழந்தையின் பெயரை தெரிவிக்கலாம்.
இவ்வாறு பகவதி தெரிவித்தார்.
நன்றி:
தினமலர் (05.05.2011) |