உலக காயல் நல மன்றங்களின் கல்வித்துறைக் கூட்டமைப்பான காயல்பட்டினம் இக்ராஃ கல்விச் சங்கத்தின் 7ஆவது செயற்குழுக் கூட்டம் 30.04.2011 அன்று நடைபெற்றது.
கூட்ட நிகழ்வுகள் குறித்து இக்ராஃ செயலாளர் கே.எம்.டி.சுலைமான் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
இக்ராஃ கல்விச் சங்கத்தின் 7ஆவது செயற்குழுக் கூட்டம் 30.04.2011 சனிக்கிழமை இரவு 07.30 மணிக்கு ஹாஜி டி.ஏ.எஸ்.முஹம்மத் அபூபக்கர் முன்னிலையில், செயலாளர் கே.எம்.டி.சுலைமான் தலைமையில் நடைபெற்றது. இக்ராஃ துணைச் செயலாளர் ஹாஃபிழ் எஸ்.கே.ஸாலிஹ் கிராஅத் ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார்.
இலச்சினை அறிமுகம்:
இக்ராஃவிற்காக புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள இலச்சினையை அதன் செயலர் கே.எம்.டி.சுலைமான், நிர்வாகி ஹாஜி ஏ.தர்வேஷ் முஹம்மத் ஆகியோர் கூட்டத்தில் கலந்துகொண்டோருக்கு அறிமுகம் செய்தனர்.
மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு பள்ளி ஆசிரியர்களை அனுப்பல்:
மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணிகளுக்கு பள்ளி ஆசிரியர்களை ஈடுபடுத்துவது என்ற அரசின் முடிவு, தேர்வு நெருங்கும் இக்காலத்தில் மாணவர்களின் படிப்புக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும் என்பதைக் கருத்திற்கொண்டு, அதை மறுபரிசீலனை செய்யுமாறு, கடந்த கூட்டத்தில் தீர்மானித்த படி பள்ளிக்கல்வித் துறை அமைச்சர், தலைமை செயலர் மற்றும் கல்வி அதிகாரிகளுக்கு இக்ராஃ சார்பில் கோரிக்கைக் கடிதம் அனுப்பப்பட்டிருந்தது.
தமிழ்நாடு அரசின் இணைச்செயலாளரால் அதுகுறித்து அளிக்கப்பட்ட பதில் கடிதத்தில், இக்கோரிக்கைக் கடிதத்தின் அசல் பிரதிமக்கள் கணக்கெடுப்புத்துறை இயக்குனருக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்ட கடிதத்தை கூட்டத்தில் இக்ராஃ நிர்வாகி சமர்ப்பித்தார்.
சிறுபான்மை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை:
நகர பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் கூட்டம் இக்ராஃவில் கூட்டப்பட்டிருந்தபோது தெரிவிக்கப்பட்ட கருத்துக்களின்படியும், இக்ராஃவின் கடந்த செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டபடியும், சிறுபான்மை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுவதற்கான தகுதிகள் மற்றும் கல்வி உதவித்தொகை குறித்த மேலும் சில தகவல்களையும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் இக்ராஃ மூலம் கடிதம் அனுப்பப்பட்டதையும், அதற்கு சிறுபான்மை நலத்துறை அதிகாரிகள் அனுப்பிய பதில் கடிதத்தையும் இக்ராஃ நிர்வாகி ஏ.தர்வேஷ் முஹம்மத் கூட்டத்தில் சமர்ப்பித்தார்.
பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை விண்ணப்பத்திற்கான காலக்கெடு:
கடந்த பிப்ரவரி மாதம், சிறுபான்மை நலத்துறை கமிஷனர் பி.எம்.பஷீர் அஹ்மத் ஐ.ஏ.எஸ். அவர்கள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரகத்தில் முகாமிட்டிருந்தபோது இக்ராஃ பிரதிநிதிகள் அவரை நேரில் சந்தித்து, (சில பொறியியல் கல்லூரிகள் தாமதமாகத் திறப்பதால், ஏராளமான மாணவர்களுக்கு விண்ணப்பிக்க இயலாமற்போவதைக் கருத்திற்கொண்டு,) மாணவர்களுக்கு - குறிப்பாக பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை விண்ணப்பம் சமர்ப்பிக்கப்படும் தேதியை அக்டோபர் இறுதி வரை நீட்டிக்க வேண்டும் என்று இக்ராஃ மூலம் அவரிடம் கோரிக்கைக் கடிதம் சமர்ப்பிக்கப்பட்டது.
அதனைப் பெற்றுக்கொண்ட அவர், இச்சிரமங்களைக் களைந்திடும் வகையில் மாணவர்கள் முற்கூட்டியே ஆன்லைனில் தமது பதிவு எண்களைப் பதிவு செய்து உறுதி செய்துகொள்ளவும், தேவைப்படும் ஆவணங்களை கல்லூரிகளின் மூலம் (பதிவு செய்யும்போது தரப்படும் ஒப்புகைச் சீட்டுடன்) வழங்கிக்கொள்ளலாம் எனவும், இதற்கான முயற்சிகள் கூடிய விரைவில் நிறைவேற்றப்பட்டு, அதுகுறித்து முறைப்படி அறிவிப்பு வெளியிடப்படும் என்று அவர் தெரிவித்த தகவலை கூட்டத்தில் இக்ராஃ நிர்வாகி தெரிவித்தார்.
பள்ளிச்சீருடை / பாடக்குறிப்பேடுகள் ஒருங்கிணைந்த இலவச வினியோகம்:
நகரில் பள்ளிச்சீருடைகள், பாடக்குறிப்பேடுகள் இலவசமாக வினியோகிக்கும் திட்டத்தை, இக்ராஃ தலைமையில் ஒருங்கிணைந்த வினியோகத் திட்டமாக செயல்படுத்துவதற்காக இதுவரை நடத்தப்பட்டுள்ள கலந்தாலோசனைக் கூட்டங்கள், அவற்றில் எடுக்கப்பட்ட முடிவுகள், அவை நிறைவேற்றப்பட்டமை குறித்த அனைத்து தகவல்களும் கூட்டத்தில் விரிவாக விளக்கப்பட்டது.
இக்ராஃ கல்வி உதவித்தொகை:
கடந்த கல்வியாண்டில், இக்ராஃ கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் பெறப்பட்ட அனுசரணைத் தொகைகளைக் கொண்டு 55 மாணவ-மாணவியருக்கும், இக்ராஃவுக்கு கிடைக்கப்பெற்ற ஜகாத் நிதியைக் கொண்டு 5 மாணவ-மாணவியருக்கும் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டதாகவும், உதவித்தொகை பெற்றோரில் இருவர் தமது கல்லூரிப் படிப்பை இடைநிறுத்தம் செய்த்தையடுத்து அவர்களுக்களிக்கப்பட்ட தொகைகள் திரும்பப் பெறப்பட்டு வேறு இரண்டு மாணவியருக்கு வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு, கூட்டத்திலேயே அவ்விரு மாணவியரின் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டு, ஒப்புதல் பெறப்பட்டது.
வருடாந்திர நிர்வாகச் செலவினம்:
இக்ராஃவின் நிர்வாகச் செலவினங்களுக்காக ஆண்டொன்றுக்கு ரூபாய் 2,25,000 செலவு மதிப்பிடப்பட்டுள்ளதாகவும், அத்தேவையை முழுமையாகப் பூர்த்தி செய்திடும் பொருட்டு உலக காயல் நல மன்றங்கள் வருடத்திற்கு ரூ.25,000 வழங்குமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ள செய்தி கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
இக்ராஃ நடவடிக்கைகள் கோப்பு செய்யப்படுதல்:
அரசுப்பதிவு விதிமுறைகளின்படி இக்ராஃவின் அவ்வப்போதைய விபரங்கள் குறித்த காலத்தில் முறைப்படி கோப்பு (ஃபைலிங்) செய்யப்பட்டு வருவது கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
கேன்சர் சர்வே:
காயல்பட்டினம் நகரில் புற்றுநோய் பாதிப்பு குறித்த தகவல்களை சேகரிக்குமாறு கோரி, ரியாத், தம்மாம், ஜித்தா காயல் நல மன்றங்கள் இக்ராஃவிடம் முன்வைத்த வேண்டுகோள்...
சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு அதற்கு இக்ராஃ தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் அளித்த ஒப்புதல்...
சர்வே முன்னேற்பாடுகள்:
அதனடிப்படையில் இக்ராஃ மேற்கொண்ட முயற்சிகள் குறித்து கூட்டத்தில் விளக்கப்பட்டது.
கேபிள் டிவி ஒளிபரப்பு,
பள்ளிவாசல்களில் அறிவிப்பு,
மருத்துவர்கள், மார்க்க அறிஞர்களின் கருத்துக்களை உள்ளடக்கிய அசைபட விளம்பரம்,
நகரின் இரண்டு ஜும்ஆ உரைகளிலும் இதுகுறித்து அறிவிப்பு,
கேன்சர் சர்வே குறித்த முழு விபரங்களடங்கிய பிரசுரம் வெளியீடு,
பொதுநல ஆர்வத்துடன் வந்த பெண் தன்னார்வலர்கள் துணைகொண்டு இக்ரா நிர்வாகத்தினர் மேற்கொண்ட அயராத தொடர்முயற்சி,
இதற்கு மக்கள் அளித்த முழு ஒத்துழைப்பு,
இவ்வகைக்காக மேற்படி மூன்று காயல் நல மன்றங்களும் மொத்த செலவுத்தொகையான ரூ.66,000 தொகைக்கு பொறுப்பேற்றுக்கொண்டமை
உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் கூட்டத்தில் விரிவாக எடுத்துரைத்தார் இக்ராஃ நிர்வாகி ஏ.தர்வேஷ் முஹம்மத்.
தகவல்கள் ரகசிய பாதுகாப்பு:
நம்பிக்கையின் அடிப்படையில் புற்றுநோயாளிகளிடமிருந்து பெறப்பட்ட தகவல்கள் முற்றிலும் ரகசியமாக பாதுகாக்கப்பட்டு வருவதாகவும், இக்ராஃ நிர்வாகத்தில் கூட எந்த ஒருவருக்கும் யாரது தனிப்பட்ட தகவல்களும் தெரிவிக்கப்படவில்லை என்றும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
புற்றுநோய் பாதிப்பு - மொத்த அறிக்கை:
பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில், கடந்த 25 ஆண்டுகளில் நகரில் புற்றுநோய் பாதிப்பிற்குள்ளானவர்கள் மொத்தம் 426 பேர்...
அதில் மரணித்தவர்கள் 332 பேர்... (ஆண்கள் 152, பெண்கள் 180)
குணமடைந்தவர்கள் 49 பேர்... (ஆண்கள் 08, பெண்கள் 41)
பாதிப்பிற்காக சிகிச்சை மேற்கொண்டு வருவோர் 45 பேர்... (ஆண்கள் 18, பெண்கள் 27)
இது கடந்த 25 ஆண்டுகள் கால வரையறைக்குட்பட்டு எடுக்கப்பட்ட பட்டியலென்றாலும், இப்பட்டியலின்படி கடந்த சில வருடங்களில்தான் பாதிப்பிற்குள்ளானோர் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த சர்வே மேற்கொள்ளப்பட்டபோது உயிருடனிருந்த பலர் கடந்த இரு மாதங்களில் மரணித்துள்ளதாகவும், நகரின் புற்றுநோய் மொத்த பாதிப்பின் எண்ணிக்கை இதைவிடக் கூடுதலாக இருக்கலாம் என கணிக்கப்படுவதாகவும், துல்லியமான கணக்கெடுப்புக்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இக்ராஃ நிர்வாகி ஏ.தர்வேஷ் முஹம்மத் தெரிவித்தார்.
மருத்துவ நிபுணர் பாராட்டு:
கேன்சர் சர்வே பணிக்காக இக்ராஃ மூலம் வெளியிடப்பட்ட பிரசுரம், தகவல் சேகரிப்புப் படிவம் உள்ளிட்டவற்றைப் பார்வையிட்ட புற்றுநோய் மருத்துவ நிபுணர், படிவத்தில் கேட்கப்பட்டுள்ள விபரங்கள், அங்கிங்கெனாதபடி வீடு வீடாக நகரின் அனைத்தில்லங்களிலும் தகவல் சேகரிக்கப்பட்ட முறை அரசு கணக்கெடுப்பு போல நன்றாக உள்ளதாகப் பாராட்டியதோடு, இதுகுறித்த மேல் முயற்சிகளுக்கு தன்னாலியன்ற முழு ஒத்துழைப்பையும் அளிப்பதாக அவர் தெரிவித்தது குறித்து கூட்டத்தில் இக்ராஃ நிர்வாகி விளக்கினார்.
மிரட்டல்:
இதற்கிடையில்,
புற்றுநோய் தகவல் சேகரிப்பு குறித்த செய்தியை உள்ளூர் தொலைக்காட்சி அலைவரிசைகளில் ஒளிபரப்பிய இரு தினங்களில் அரசு அதிகாரி ஒருவரிடமிருந்து தனக்கு தொலைபேசி அழைப்பு வந்தது... பணிநேரம் அல்லாத இரவு நேரத்தில் இரண்டு முறை வந்த அந்த தொலைபேசி அழைப்பில், இந்த கேன்சர் சர்வே பணிகளை நிறுத்தி வைக்குமாறு அவர் மிரட்டல் தொனியில் தெரிவித்தார்...
எனினும், இந்த சர்வே எடுக்கப்பட வேண்டியது காலத்தின் கட்டாயம் என்பதைக் கருத்தில் கொண்டு, இதுபோன்ற சர்வே எடுப்பதற்கு தடையேதும் இல்லை என்பதை அரசு உயரதிகாரி மூலம் உறுதி செய்துகொண்டோம்...
இக்ராஃ எடுத்துக்கொண்ட இந்த முயற்சியிலிருந்து ஒருபோதும் பின்வாங்கக் கூடாது என்ற உறுதியினாலும் இந்த சர்வே செயல்திட்டம் வெற்றிகரமாக நிறைவேற்றி முடிக்கப்பட்டுள்ளது.
பெறப்பட்டுள்ள இத்தகவல்கள் வெகுவிரைவில் ஆய்விற்குட்படுத்தப்பட்டு, அதுகுறித்த மேல் நடவடிக்கை குறித்து மூன்று அமைப்புகளிடமும் கலந்தாலோசனை செய்யப்பட்டு அடுத்தகட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு ஏ.தர்வேஷ் முஹம்மத் தெரிவித்தார்.
புதிய உறுப்பினர்கள்:
இக்ராஃவில் புதிதாக உறுப்பினராவதற்காக விண்ணப்பித்துள்ளவர்களின் படிவங்கள் கூட்டத்தில் பரிசீலிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டது.
விண்ணப்பித்தவர்களில் அதிகமானோர் சிங்கப்பூர் காயல் நல மன்றத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
மின்தடை சிரமம் தவிர்க்க இன்வெர்ட்டர் தேவை:
நிலையான நேர வரையறையின்றி கண்ட நேரத்திலும் நகரில் அடிக்கடி மணிக்கணக்கில் மின்தடை செய்யப்பட்டு வருவதால், இக்ராஃவின் அத்தியாவசிய பணிகள் - குறிப்பாக மே, ஜூன் மாதங்களில் மேற்கொள்ளப்படும் கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டம் உள்ளிட்ட முக்கிய பணிகள் அனைத்தும் பாதிப்படைந்து வருவதாகவும், இச்சிரமத்தைப் போக்க இன்வெர்ட்டர் ஒன்று மிக அவசியமாகிறதெனவும், அதற்காக ரூ.21,000 தேவைப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இது விஷயத்தில் உலக காயலர்கள் தங்களது மேலான ஒத்துழைப்பைத் தந்துதவுமாறு கூட்டத்தில் கேட்டுக்கொள்ளப்பட்டது.
அடுத்த பொதுக்குழு:
இக்ராஃவின் வருடாந்திர பொதுக்குழுக் கூட்டத்தை மே மாத இறுதிக்குள் நடத்துவதெனவும், இக்ராஃ தலைவர்களின் வருகையை அனுசரித்து, (திருமணம் நடைபெறும் நாட்களான) வெள்ளி, சனி, ஞாயிறு அல்லாத கிழமைகளில் பொதுக்குழுக் கூட்டத்தை நடத்தலாம் எனவும், காயல்பட்டினம் ஜலாலிய்யா நிக்காஹ் மஜ்லிஸின் சிறிய அரங்கம் அல்லது எல்.கே.மேனிலைப்பள்ளியின் சுலைமான் ப்ளாக் கட்டிடத்தில் கூட்டத்தை நடத்திடவும் தீர்மானிக்கப்பட்டது.
துணைத்தலைவர்களின் கருத்துக்கள் குறித்த விவாதம்:
இக்ராஃ துணைத்தலைவர்களான ஹாஜி எம்.இ.எல்.நுஸ்கீ (ரியாத் காஹிர் பைத்துல்மால்), எஸ்.ஏ.ஃபாஸுல் கரீம் (கத்தர் காயல் நல மன்றம்) ஆகியோர் அனுப்பிய கருத்துக்கள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
இக்ராஃ கூட்ட அரங்க பயன்பாடு:
உலக காயல் நல மன்றங்களின் கூட்டங்களோ, ஆலோசனைகளோ இக்ராஃ கூட்டரங்கில் நடத்தப்பட வேண்டுமானால் அந்தந்த காயல் நல மன்றத்திலிருந்து அதிகாரப்பூர்வமாக மின்னஞ்சல் அனுப்புமாறு மன்றங்களைக் கேட்டுக்கொள்ள தீர்மானிக்கப்பட்டது.
சிறப்பு அழைப்பாளர்கள்:
இக்கூட்டத்தில், ஹாஜி லேண்ட்மார்க் ராவன்னா அபுல்ஹஸன், ஹாஜி எம்.ஏ.எஸ்.ஜரூக், ஹாஜி என்.எஸ்.இ.மஹ்மூத் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்துகொண்டனர்.
இக்ராஃ துணைச் செயலர் ஹாஃபிழ் எஸ்.கே.ஸாலிஹ் துஆவுடன், இரவு 10.15 மணிக்கு இறையருளால் கூட்டம் நிறைவுற்றது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |