காயல்பட்டினம் தீவுத்தெருவிலுள்ள ஏ.கே.என்.பெண்கள் தைக்கா வளாகத்தில் செயல்பட்டு வரும் மாதிஹுல் ஜலாலிய்யா மகளிர் அரபிக்கல்லூரியின் பட்டமளிப்பு விழா வரும் மே மாதம் 01, 02, 03 தேதிகளில் நடைபெற்றது. இவ்விழாவில், அக்கல்லூரியின் 6 மாணவியர் ஆலிமா பட்டமும், இருவர் முதர்ரிஸா பட்டமும் பெற்றுள்ளனர்.
விழா நிகழ்வுகள் குறித்து கல்லூரி நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
இறையருளால் எமது மாதிஹுல் ஜலாலிய்யா மகளிர் அரபிக்கல்லூரி தனது 09 வயதைப் பூர்த்தி செய்து 10ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது, அல்ஹம்துலில்லாஹ்! இதனை பொதுமக்களுக்கு அறிவிக்கும் வகையில் நாற்பெரும் விழாக்கள் எம் கல்லூரி நிர்வாகத்தால் நடத்தப்பட்டது.
மறுவிலா முழுமதி மஹ்மூது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பிறந்தநாள் பெருவிழா!
மஹ்பூபு சுபுஹானீ அஷ்ஷெய்க் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ அவர்களின் நினைவுநாள் பெருவிழா!!
மத்ரஸா மாதிஹுல் ஜலாலிய்யாவின் 10ஆம் ஆண்டு துவக்க விழா!!!
ஆலிமா ஜலாலிய்யாவின் 04ஆம் ஆண்டு ஸனது வழங்கும் (பட்டமளிப்பு) விழா!!!!
இவ்வாறாக நாற்பெறும் விழாக்கள், மாநபியின் மாமன்றம் புனித மஜ்லிஸுல் புகாரிஷ் ஷரீஃப் ஸபை வளாகத்தில், ஜமாதியுல் அவ்வல் பிறை 26, 27, 28 (மே மாதம் 01, 02, 03) ஞாயிறு, திங்கள், செவ்வாய் தினங்களில் நடைபெற்று முடிந்துள்ளது அல்ஹம்து லில்லாஹ்!
முதல் இரண்டு தினங்களிலும் பெண்கள் நிகழ்ச்சியாக நடத்தப்பட்டது. துவக்க நாள் காலை நிகழ்ச்சியில் கல்லூரி நிர்வாகி ஹாஜ்ஜா என்.கே.முத்து ஆஸியா உம்மா தலைமையேற்க, கல்லூரி மாணவியரின் இன்சுவை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
மாலை அமர்விற்கு கல்லூரி நிர்வாகி ஹாஜ்ஜா எஸ்.ஏ.கதீஜத்து ஜுமானிய்யா தலைமை தாங்கினார். இவ்வமர்வில் மாணவியரின் இன்சுவை நிகழ்ச்சிகள் மற்றும் ஹதீது போட்டிகள் நடைபெற்றது.
இரண்டாம் நாள் பெண்கள் நிகழ்ச்சியின் காலை அமர்விற்கு ஹாஜ்ஜா வி.எம்.ஏ.கே.ஆபிதா தலைமை தாங்கினார். கல்லூரி மாணவியரின் இன்சுவை நிகழ்ச்சிகளின் தொடர்ச்சி இவ்வமர்வில் நடைபெற்றது. அன்றைய தினம் மாலை அமர்விற்கு ஹாஜ்ஜா டி.எஸ்.ஏ.உம்மு ஹபீபா தலைமை தாங்கினார். இன்சுவை நிகழ்ச்சிகள் மற்றும் “சந்தன மணம் கமழும் சுந்தர நபியின் மீது ஸலவாத் சொல்வதன் சிறப்பு” எனும் தலைப்பில் பேச்சுப்போட்டி நடைபெற்றது.
நிறைவு நாள் நிகழ்ச்சிகள் ஆண்கள் நிகழ்ச்சியாக நடைபெற்றது. பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டிருந்தது. காலை அமர்விற்கு, காயல்பட்டினம் மஸ்ஜிதுல் ஆமீர் - மரைக்கார் பள்ளியின் இமாம் ஹாஜி டி.எம்.கே.முத்து செய்யித் அஹ்மத் தலைமை தாங்கினார். நகர பிரமுகர்கள் முன்னிலை வகித்தனர். ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தின் மாணவர் என்.ஏ.ஸாலிஹ் நுஸ்கீ கிராஅத் ஓதி நிகழ்வைத் துவக்கி வைத்தார். பின்னர் இறைவேண்டற்கவி அனைவரும் நின்று பாடினர். தொடர்ந்து, ஜே.எம்.முஹம்மத் நூஹ் தம்பி வரவேற்றுப் பேசினார்.
பின்னர், பட்டம் பெறும் மாணவியரை வாழ்த்தி,
பன்னூல் ஆசிரியர் முத்துச்சுடர் மவ்லவீ ஹாஃபிழ் என்.டி.எஸ்.முஹம்மத் ஸாலிஹ் நுஸ்கீ மஹ்ழரீ,
ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தின் பேராசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் சாவன்னா பாதுல் அஸ்ஹப் ஃபாஸீ,
ஐக்கிய சமாதானப் பேரவை தலைவர் மவ்லவீ என்.ஹாமித் பக்ரீ மன்பஈ
ஆகியோர் சிறப்புரையாற்றினர். இறுதியாக, ஹாஃபிழ் என்.டி.ஷெய்க் சுலைமான் லெப்பை துஆவுடன் காலை அமர்வு நிறைவுற்றது.
அன்று மாலை அமர்விற்கு மவ்லவீ முத்துச்சுடர் என்.டி.எஸ்.முஹம்மத் ஸாலிஹ் மஹ்ழரீ தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளர்கள் முன்னிலை வகிக்க, ஹாமிதிய்யா மாணவர் ஜே.எம்.ஷெய்க் அப்துல் காதிர் கிராஅத் ஓதி நிகழ்ச்சிகளைத் துவக்கி வைத்தார். ஹாஃபிழ் எம்.ஏ.சி.ஈஸா ஷஃபீக் வரவேற்றுப் பேசினார்.
மஹ்ழரா அரபிக்கல்லூரியின் பேராசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் கே.எம்.காஜா முஹ்யித்தீன் பாக்கவீ சிறப்புரையாற்றினார்.
மஃரிப் தொழுகைக்குப் பின் தொடர்ந்த அமர்வில், நபிகள் நாயகம் புகழ்பாடும் பைத் அனைவராலும் நின்று பாடப்பட்டது. பின்னர், ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தின் பேராசிரியர் மவ்லவீ ஏ.சுல்தான் அப்துல் காதிர் ரஹ்மானீ, காயல்பட்டினம் அல்ஜாமிஉல் கபீர் - பெரிய குத்பா பள்ளியின் கத்தீபும், முஅஸ்கர் மகளிர் அரபிக்கல்லூரியின் நிறுவனருமான மவ்லவீ ஹாஃபிழ் எச்.ஏ.அஹ்மத் அப்துல் காதிர் மஹ்ழரீ ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
பின்னர், இக்கல்லூரியில் மூன்றாண்டு பாடத்திட்டத்தின் கீழ் பயின்று தேர்ச்சி பெற்ற
காயல்பட்டினம் தேங்காய் பண்டகசாலை தெருவைச் சார்ந்த என்.எம்.ஷெய்க் முஹம்மத் என்பவரின் மகள் எஸ்.எம்.பி.செய்யிதலி ஃபாத்திமா,
கீழ நெய்னார் தெருவைச் சார்ந்த ஏ.கே.ஷாஹுல் ஹமீத் என்பவரின் மகள் எஸ்.எச்.ஆஸியா உம்மாள்,
சித்தன் தெருவைச் சார்ந்த ஹாஃபிழ் எஸ்.எச்.அப்துல் அஜீஸ் என்பவரின் மனைவி ஜே.எஃப்.ஜைத்தூன் முனவ்வரா,
கீழ நெய்னார் தெருவைச் சார்ந்த மர்ஹூம் எம்.எஸ்.செய்யித் முஹம்மத் புகாரீ என்பவரின் மகள் எஸ்.எம்.பி.ஆமினா ஃபஹ்மிதா,
கீழ நெய்னார் தெருவைச் சார்ந்த மர்ஹூம் எஸ்.ஏ.வாஹித் அலீ என்பவரின் மகள் வி.நளீமா
ஆகிய 6 மாணவியருக்கு “ஆலிமா ஜலாலிய்யா” பட்டமும் (ஸனது),
கீழ நெய்னார் தெருவைச் சார்ந்த கே.எம்.எஸ்.அய்யூப் ரஹ்மான் என்பவரின் மனைவி ஏ.எஸ்.முத்து ஆமினா ஆலிமா,
மேல சித்தன் தெருவைச் சார்ந்த எச்.அபூபக்கர் சித்தீக் என்பவரின் மனைவி எம்.ஐ.இர்ஃபானா ஆலிமா
ஆகியோர் ஆசிரியர் பயிற்சியை முடித்தமைக்காக இருவருக்கு “முதர்ரிஸா” ஸனதும் வழங்கப்பட்டது.
இக்கல்லூரியின் முதல்வரும், மஹ்ழரா அரபிக்கல்லூரியின் துணை முதல்வருமான மவ்லவீ எஸ்.டி.அம்ஜத் அலீ மஹ்ழரீ ஃபைஜீ மாணவியருக்கு பட்டங்களை வழங்கி பட்டமளிப்புப் பேருரை நிகழ்த்தினார்.
இக்கல்லூரியில் செயல்பட்டு வரும் பள்ளி மாணவியருக்கான மார்க்கக் கல்வி (தீனிய்யாத்) பிரிவான ரியாழுல் ஜினான் மத்ரஸதுன் நிஸ்வான் பிரிவில் கற்றுத் தேர்ந்த நான்கு மாணவியருக்கும் இவ்விழாவின்போது சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
இறுதியாக ஹாஃபிழ் எஸ்.ஏ.ஷெய்க் கல்ஜீ நன்றி கூற, மஹ்ழரா அரபிக்கல்லூரியின் பேராசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.செய்யித் அப்துர்ரஹ்மான் அஹ்ஸனீ ஃபாழில் பாக்கவீ துஆவுடன் விழா நிறைவுற்றது.
விழா ஏற்பாடுகளை மஹ்ழரா அரபிக்கல்லூரியின் ஹிஃப்ழுப் பிரிவு பேராசிரியர் ஹாஃபிழ் சொளுக்கு முஹ்யித்தீன் அப்துல் காதிர் தவ்ஹீத் தலைமையில், ஹாஃபிழ் எஸ்.ஏ.ஃபைஸல் ஒருங்கிணைப்பில் கல்லூரி அங்கத்தினர் செய்திருந்தனர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
மாதிஹுல் ஜலாலிய்யா மகளிர் அரபிக்கல்லூரி நிர்வாகம் சார்பாக,
ஹாஃபிழ் காரீ சொளுக்கு முஹ்யித்தீன் அப்துல் காதிர் தவ்ஹீத்,
சொளுக்கார் தெரு, காயல்பட்டினம். |