பிளஸ் 2 தேர்வு எழுதியுள்ள மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் மே 25ஆம் தேதி வழங்கப்படும் என்று தேர்வுத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 09 (திங்கள்கிழமை) வெளியிடப்பட உள்ளன. இதற்கான ஏற்பாடுகளை தேர்வுத்துறை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
இந்த ஏற்பாடுகள் குறித்து தேர்வுத்துறை அதிகாரிகள் கூறியது:
பிளஸ் 2 தேர்வு மதிப்பெண்களைப் சரிபார்க்கும் பணியும், தவறுகளைத் திருத்தும் பணியும் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. இந்தப் பணிகள் அனைத்தும் சனிக்கிழமை மாலை நிறைவடையும். ஞாயிற்றுக்கிழமை மாலை அந்தந்தப் பள்ளிகளுக்கு மதிப்பெண் பட்டியல் அனுப்பிவைக்கப்படும். மாணவர்கள் தங்களது மதிப்பெண் விவரங்களை திங்கள்கிழமை தெரிந்துகொள்ளலாம்.
தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட பிறகு, டேட்டா சென்டர்களில் மதிப்பெண் சான்றிதழ் அச்சடிக்கும் பணி தொடங்கும். இந்தப் பணி பத்து நாள்களுக்கு மேல் நடைபெறும்.
ஒவ்வொரு நாளும் அச்சடிக்கப்பட்டு வரும் மதிப்பெண் சான்றிதழ்களை தேர்வுத்துறை பணியாளர்கள் சரிபார்ப்பர். மதிப்பெண், பெயர் விவரங்கள், சான்றிதழின் உண்மைத் தன்மை ஆகியவற்றை சரிபார்த்த பிறகு அரசுத் தேர்வுகள் இயக்குநர் முத்திரை அதில் இடப்படும். மதிப்பெண் சான்றிதழ்களை முழுமையாகச் சேகரித்து தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு ஒரே நாளில் அனுப்பி வைக்கப்படும்.
பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்கள் மே 25ஆம் தேதி மதிப்பெண் சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்ளலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற பிளஸ் 2 தேர்வை மொத்தம் 7 லட்சத்து 20 ஆயிரம் மாணவர்கள் பள்ளிகள் மூலம் நேரடியாகவும், 50 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தனித்தேர்வர்களாகவும் எழுதினர்.
தேர்வு முடிவு மே 14ஆம் தேதி வெளியிடப்படலாம் என்று பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் சபிதா அறிவித்தார். ஆனால், அவரது அறிவிப்பு தன்னிச்சையானது என்று கூறிய பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தேர்வு முடிவுகள் மே 09ஆம் தேதி வெளியிடப்படும் என்று அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
நன்றி:
தினமணி (06.05.2011) |