காயல்பட்டினம் மக்களின் பொதுவான உடல் நலன் குறித்த தகவல்களைத் திரட்டிடும் பொருட்டு, வட அமெரிக்க காயல் நல மன்ற (நக்வா) செயற்குழு உறுப்பினர் டாக்டர் அலீ ரஸாவின் தூண்டுதலில், நக்வா, தம்மாம் காயல் நற்பணி மன்றம் மற்றும் தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் அமைப்புகள் இணைந்து KAYALPATNAM HEALTH SURVEY என்ற பெயரில் காயலர் உடல் நலன் ஆய்வு செயல்திட்டத்தைத் துவக்கி, தகவல்களை சேகரித்து வருகின்றனர்.
காயல்பட்டினத்தை சொந்த ஊராகக் கொண்டு, உள்ளூர், வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் வசிக்கும் காயலர்களில் ஆண்கள் 2,500 பேர், பெண்கள் 2,500 பேர் என மொத்தம் 5,000 காயலர்களிடம் இந்த ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில், கடந்த பிப்ரவரி மாதத்தில் கத்தர் காயல் நல மன்றம் மற்றும் காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்புகளிணைந்து கே.எம்.டி. மருத்துவமனையில் நடத்திய புற்றுநோய் பரிசோதனை இலவச முகாமின்போது முதற்கட்டப் பணிகள் துவக்கப்பட்டது.
பின்னர் நகரில் பல்வேறு காலகட்டங்களில் நடைபெற்ற பலதரப்பட்ட மக்கள் ஒன்றுகூடல்களின்போதும், நகர பள்ளிக்கூடங்களிலும், அமீரகம், திருவனந்தபுரம் உள்ளிட்ட காயல் நல மன்றங்களின் கூட்டங்களின்போதும் முகாமிட்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.
அதன் ஒருகட்டமாக, காயல்பட்டினம் கே.எம்.டி. மருத்துவமனையில் பெண்களுக்கான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. காயல்பட்டினம் அலியார் தெருவைச் சார்ந்த உம்முஹானீ, அம்பல மரைக்கார் தெருவைச் சார்ந்த ஆசியா உம்மாள் ஆகிய தன்னார்வலர்கள் இணைந்து நடத்திய இம்முகாமில் 200 பெண்களிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மொத்தத்தில் இதுவரை 1,455 பேரிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. |