நகர்நலப் பணிகளுக்காக மன்ற உறுப்பினர்களுக்கு அளிக்கப்பட்ட உண்டியல்கள் மூலம் இந்திய ரூபாய் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் தொகை திரட்டப்பட்டுள்ளதாக சிங்கப்பூர் காயல் நல மன்ற செயற்குழு தெரிவித்துள்ளது.
கூட்ட நிகழ்வுகள் குறித்து அம்மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
எமது சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் செயற்குழுக் கூட்டம் 06.05.2011 வெள்ளிக்கிழமையன்று இரவு 07.30 மணிக்கு மன்றத்தின் பதிவு அலுவலகத்தில் நடைபெற்றது.
ஹாஜி கே.எம்.முஹம்மத் ஸலீம் தலைமை தாங்கினார். ஜனாப் முஹ்யித்தீன் ஸாஹிப் முன்னிலை வகித்தார்.
மன்றப் பணிகளுக்கு சிறப்பு விருந்தினர் பாராட்டு:
துவக்கமாக, மன்றத் தலைவர் ரஷீத் ஜமான் அனைவரையும் வரவேற்று சிற்றுரையாற்றினார். அதனைத் தொடர்ந்து, சிங்கை காயல் நல மன்றம் குறித்த தனது பார்வை குறித்து சிறப்பு விருந்தினர் ஹாஜி கே.எம்.முஹம்மத் ஸலீம் விவரித்துப் பேசினார். பல்வேறு நிகழ்ச்சிகளில் சிங்கை காயல் நல மன்றம் அனைவருக்கும் முன்னுதாரணமாய்த் திகழ்வதாக அப்போது அவர் தெரிவித்தார்.
செயலர் உரை:
பின்னர், கடந்த கூட்ட நிகழ்வுகள், அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மற்றும் அவை செயல்படுத்த விதம் குறித்து மன்றச் செயலாளர் மொகுதூம் முஹம்மத் கூட்டத்தில் விளக்கிப் பேசியதோடு, மன்றத்தின் நடப்பு வரவு-செலவு கணக்கு குறித்த விபரங்களைத் தெரிவித்தார். கூட்டம் அதனை ஒருமனதாக அங்கீகரித்தது.
விண்ணப்பங்கள் பரிசீலனை:
பின்னர், காயல்பட்டினம் நகரின் ஏழை-எளிய பொதுமக்களிடமிருந்து பல்வேறு தேவைகளுக்காக உதவித்தொகை கோரி பெறப்பட்ட விண்ணப்பங்களை,
ரஷீத் ஜமான்,
ஏ.எம்.உதுமான்,
எம்.எம்.மொகுதூம் முஹம்மத்,
கே.எம்.என்.ரிஃபாஈ
ஆகியோரடங்கிய பரிசீலனைக்குழு பரிசீலித்தது.
உண்டியல் திறப்பு:
பின்னர், நகர்நலப் பணிகளை அதிகளவில் செய்திடுவதற்காக தேவையான நிதியாதாரத்தைத் திரட்டிடும் பொருட்டு அறிமுகப்படுத்தப்பட்ட உறுப்பினர் உண்டியல் நிதி வசூல் திட்டத்தின் கீழ் பெறப்பட்ட உண்டியல்கள் கூட்டத்தில் திறக்கப்பட்டது. இம்முறை இந்திய ரூபாய் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் தொகை வசூலாகியுள்ளதாக கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து கருத்து தெரிவித்த மன்ற வழிநடத்தி ஹாஜி பாளையம் முஹம்மத் ஹஸன், நகர்நலப் பணிகளுக்காக நம் உறுப்பினர்கள் ஆர்வத்தோடு உதவிகளையும் ஒத்துழைப்புகளையும் வழங்கி வருவது பெரிதும் மகிழ்வூட்டுவதாகவும், அதே நேரத்தில் ஒரு சில உண்டியல்களின் எடை குறைவாகவும், வெற்றிடம் கூடுதலாகவும் இருந்தது என்றும், உண்டியலில் உறுப்பினர்கள் எவ்வளவு தொகை தருகின்றனர் என்பது குறித்த தனிப்பட்ட விபரங்கள் எதுவும் வெளியிடப்படாது என்பதால், உறுப்பினர்கள் தமது நிதியுதவிகளை தாராளமாக வழங்கிடுமாறும் கேட்டுக்கொண்டார்.
இலச்சினை தேர்வு:
பின்னர், மன்றத்திற்காக பி.எம்.ஹுஸைன் நூருத்தீன் அவர்களால் உருவாக்கப்பட்ட இலச்சினை மன்றத்தின் இலச்சினையாக அதிகாரப்பூர்வமாகத் தேர்வு செய்யப்பட்டது.
வேலைவாய்ப்பு விண்ணப்பங்கள் மீது மேல்நடவடிக்கை:
சிங்கையில் வேலைவாய்ப்பு பெறுவதற்காக இதுவரை பெறப்பட்டுள்ள விண்ணப்பங்கள் வேலைவாய்ப்பு வழங்கும் நிறுவனத்தாரிடம் அனுப்பி வைக்கப்படவுள்ளதாக கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்த மேல் நடவடிக்கைகளை மன்ற வழிநடத்தி ஹாஜி பாளையம் முஹம்மத் ஹஸன் பொறுப்பேற்று செயல்படுத்த கூட்டம் அனுமதியளித்தது.
அடுத்த பொதுக்குழு:
மன்றத்தின் அடுத்த பொதுக்குழுவை 25.06.2011 அன்று சிங்கை செந்தோஸா பாலவன் கடற்கரையில் நடத்த தீர்மானிக்கப்பட்டது.
இக்ராஃவுக்கான பங்களிப்புகள்:
இக்ராஃவின் கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தின்கீழ், “ஒருவர் ஒருவருக்கு கல்வி அளித்தல்“ என்ற நம் மன்ற முழக்கத்தின் படி நடப்பு அனுசரணைத் தொகை, வரும் வருடங்களுக்கான தொகை மற்றும் இக்ராஃ உறுப்பினர் சந்தா தொகை உள்ளிட்ட அனைத்தும் நிலுவையின்றி செலுத்தப்பட்டுவிட்டதாக கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
இவ்வகைக்கு நிறைவான ஒத்துழைப்புகளை நல்கியமைக்காக இக்ராஃவின் நடப்பு தலைவரும், சிங்கை மன்றத்தின் வழிநடத்தியுமான ஹாஜி பாளையம் முஹம்மத் ஹஸன் உறுப்பினர்களனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார். இவ்வம்சத்தில் முழுமுனைப்புடன் செயலாற்றிய மன்ற உறுப்பினர் டபிள்யு.கே.எம்.முஹம்மத் ஹரீஸ் அவர்களுக்கு அவர் குறிப்பாக நன்றி தெரிவித்துக்கொண்டார்.
வீடு புனர்நிர்மாணத்திற்கு உதவி:
குடியிருக்கும் வீடு புனர்நிர்மாணப் பணிக்காக மன்றத்தின் சார்பில் ரூபாய் ஐம்பதாயிரம் தொகை ஒதுக்கீடு செய்வதென முடிவு செய்யப்பட்டது.
CFFC அறிக்கையை இந்திய தூதரிடம் சமர்ப்பித்தல்:
காயல்பட்டினம் நகரில் புற்றுநோய் காரணிகளைக் கண்டறியும் குழுவினரான Cancer Fact Finding Committee – CFFC சார்பில் அனுப்பித் தரப்பட்டுள்ள அறிக்கையை சிங்கப்பூருக்கான இந்திய தூதரிடம் சமர்ப்பிப்பதற்காக தேதி கேட்டு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
மலர் வெளியீடு:
மன்றத்தின் சார்பில் வெளியிட தீர்மானிக்கப்பட்டுள்ள சிறப்பு மலர் பணிகளை 15.05.2011 முதல் துவக்குவதென தீர்மானிக்கப்பட்டது.
விவாதிக்க வேறு அம்சங்கள் எதுவுமில்லாத நிலையில், ஹாஃபிழ் அஹ்மத் துஆவுடன் இரவு 09.30 மணிக்கு கூட்டம் நிறைவுற்றது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
மொகுதூம் முஹம்மத்,
செயலாளர்,
காயல் நல மன்றம், சிங்கப்பூர். |