தூத்துக்குடி மாவட்டத்தில் அரசின் விதிமுறைகள்படி அனைத்து நர்சரி பள்ளிகளும் செயல்படுகிறதா, குழந்தைகளுக்குரிய போதிய அடிப்படை வசதிகள் இருக்கிறதா என்பதை ஆய்வு செய்து இம்மாத இறுதிக்குள் அறிக்கை தர வேண்டும் என்று உதவி தொடக்க கல்வி அதிகாரிகளுக்கு முதன்மை கல்வி அதிகாரி பரிமளா உத்தரவிட்டார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகள் செயல்படும் விதம் குறித்து ஆய்வு செய்யும் பொருட்டு கல்வி அதிகாரிகள் கூட்டம் முதன்மை கல்வி அதிகாரி பரிமளா தலைமையில் நடந்தது.
மாவட்ட தொடக்க கல்வி அதிகாரி (பொ) பெருமாள்சாமி, உதவி தொடக்க கல்வி அதிகாரி (நர்சரி) ஜெயச்சந்திரன் மற்றும் அனைத்து தொடக்க கல்வி அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் அரசின் விதிமுறைகளுக்கு இணங்க நர்சரி மற்றும் பிறைமரி பள்ளிகள் செயல்படுகிறதா என்பதை நர்சரி ஏ.இ.ஓ மட்டுமின்றி, ஒவ்வொரு வட்டாரத்திற்கு உட்பட ஏ.இ.ஓக்கள் தங்கள் பகுதியில் உள்ள நர்சரி பள்ளிகளை ஆய்வு செய்ய வேண்டும் என்று சி.இ.ஓ பரிமளா தெரிவித்தார்.
மொத்தம் இம் மாவட்டத்தில் 148 நர்சரி மற்றும் பிறைமரி பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிகளுக்கு சென்று ஏ.இ.ஓக்கள் ஆய்வு செய்ய வேண்டும். அடிப்படை வசதிகள் சரியாக இருக்கிறதா என்பதை பார்க்க வேண்டும்.
எந்தக் காரணம் கொண்டும் மாடியில் வகுப்பறை நடத்தாமல் தரைத்தளத்தில் தான் நடத்த வேண்டும். குழந்தைகளுக்குரிய குடிநீர், கழிப்பறை வசதிகள் இருக்கிறதா என்பதை பார்க் வேண்டும். தரைத்தளத்தில் 20 x 20 அளவில் வகுப்பறை இருக்க வேண்டும்.
இதுபோன்ற அரசின் விதிமுறைகள்படி நர்சரி பள்ளிகள் இருக்க வேண்டும். அவ்வாறு இல்லை என்றால் அந்த பள்ளி குறித்து உடனடியாக மாவட்ட தொடக்க கல்வி அதிகாரி மூலம் தெரிவிக்க வேண்டும். அதன் அடிப்படையில் ஆய்வு செய்து அந்த பள்ளிகள் மீது கல்வித்துறை உத்தரவுப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று சி.இ.ஓ தெரிவித்தார்.
அரசின் விதிமுறைகள் பின்பற்றப்படாத பள்ளிகள் மூன்றாண்டுக்கு ஒருமுறை புதுப்பிக்க வரும்போது அந்த பள்ளிக்கு புதுப்பித்தல் அனுமதி வழங்க கூடாது என்று தெரிவித்துள்ள கல்வித்துறையின் உத்தரவு அமல்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார். இம்மாத இறுதிக்குள் அறிக்கை செய்ய வேண்டும் என்றும் பரிமளா தெரிவித்தார்.
நன்றி:
தினமலர் (05.05.2011) |