இவ்வருடம் ஹஜ் பயணம் செய்வோர்களுக்கான மருத்துவ சோதனைகளில் கூடுதல் கண்காணிப்பு இருக்கும் என இந்திய ஹஜ் குழு (Haj Committee of India) அறிவித்துள்ளது. இது குறித்த செய்திக்குறிப்பு இந்திய முழுவதும் உள்ள மாநில ஹஜ் குழுக்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
வரும் ஜூன் 1 முதல் - பல்வேறு நகரங்களில் - ஹஜ் குழு அலுவலர்களுக்கு என சிறப்பு பயிற்சி முகாம்கள் நடத்தப்படும். அதில் பயணிகளுக்கான தடுப்பூசியின் முக்கியத்துவம் குறித்தும், முறையான சான்றிதழ்களின் அவசியம் குறித்தும் விளக்கப்படும்.
இந்திய ஹஜ் குழுவின் தலைவர் மொஹ்சினா கித்வாய்க்கு, இந்தியாவுக்கான சவுதி அரேபியா தூதர் பைசல் ஹசன் திராட் அனுப்பியுள்ள ஏப்ரல் 21 தேதியிட்ட Fax செய்தியில் - சென்ற ஆண்டு இந்தியாவில் இருந்து ஹஜ் பயணம் மேற்க்கொண்டோரில் 59,473 பேர் போலி Meningitis தடுப்பூசி சான்றிதழ் சமர்ப்பித்ததாகவும், அவர்களுக்கு சவுதி விமானநிலையத்தில் முன்னெச்செரிக்கை மருத்துவம் செய்யப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
ஹஜ் விசா பெற குறைந்தது பத்து நாட்களுக்கு முன்னர் தடுப்பூசி போட்டுக்கொண்டதற்க்கான முறையான சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும் என மேலும் தெரிவித்துள்ளார்.
ஜித்தாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரி பீ.எஸ். முபாரக் - இந்திய ஹஜ் குழுவுக்கு அனுப்பியுள்ள செய்தியில் உடல் நலன் சான்றிதழின் (Fitness Certificate) முக்கியத்துவம் பற்றி எடுத்து கூறியுள்ளார். சென்ற ஆண்டு ஹஜ் பயணம் மேற்கொண்ட ஒருவர் சவுதியில் மரணிக்க நேர்ந்தது. மரணத்திற்கு காரணம் இந்திய ஹஜ் குழுவின் கவனக்குறைவே என அவரின் குடும்பத்தினர் தற்போது வழக்கு போட்டுள்ளனர். அவரின் மருத்துவ வரலாறு அவர் ஹஜ் யாத்திரை மேற்கொள்ள உடல் வலிமை இல்லாதவர் என காட்டுக்கிறது என தூதரக அதிகாரி கூறியுள்ளார். இருப்பினும் அவருக்கு ஹஜ் விண்ணப்பத்தின் போது வழங்கப்பட்ட உடல் நலன் சான்றிதழில் அவர் ஹஜ் யாத்திரை மேற்கொள்ள தகுதியானவர் என கூறப்பட்டுள்ளது.
எனவே வரும் ஆண்டுகளில் - இவ்வாறு சான்றிதழ்கள் வழங்கும் மருத்துவரே தவறான தகவல்களுக்கு பொறுப்பாவார் என அவரிடமே உத்திரவாதம் வாங்க வேண்டும் என மேலும் தூதரக அதிகாரி தெரிவித்துள்ளார். |