தேர்தல் பார்வையாளர் ஒருவரை தவிர யாரும் ஓட்டு எண்ணிக்கையின் போது செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளில் பதிவான ஓட்டுக்கள் வரும் 13ஆம் தேதி எண்ணப்படுகிறது. தூத்துக்குடி அரசு பாலிடெக்னிக்கில் ஓட்டு எண்ணிக்கை மையத்தில் தூத்துக்குடி, திருச்செந்தூர், கோவில்பட்டி, ஓட்டப்பிடாரம், விளாத்திகுளம், ஸ்ரீவைகுண்டம் ஆகிய 6 சட்டமன்றத் தொகுதியில் பதிவான வாக்குகள் பதிவு செய்யப்பட்ட இயந்திரங்கள் (இ.வி.எம்.) பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது.
ஓட்டு எண்ணிக்கை ஏற்பாடுகள் நடந்து வருகிறது. ஓட்டு எண்ணிக்கையில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் தேர்வு செய்து வைக்கப்பட்டுள்ளனர். சுமார் 200 பேர் லிஸ்ட் தயாரித்து வைக்கப்பட்டுள்ளது. இதில் ரேண்டம் முறையில் ஊழியர்களை தேர்வு செய்து ஒவ்வொரு தொகுதிக்கு எந்த ஊழியர் பணி செய்வார் என்பது அவர்களுக்கு ஓட்டு எண்ணிக்கை துவங்குவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பாகத்தான் தெரிவிக்கப்படும்.
இதற்கிடையில் தூத்துக்குடி மாவட்டத்தில் ஓட்டு எண்ணிக்கை சம்பந்தமாக மாவட்ட தேர்தல் அதிகாரி, தொகுதி தேர்தல் அதிகாரி, மாவட்ட தேர்தல் அலுவலக அதிகாரிகள் உள்ளிட்டோர் மதுரையில் தேர்தல் ஆணைய அதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்றனர். அப்போது ஓட்டு எண்ணிக்கை சம்பந்தமாக பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டது.
இந்நிலையில், ஓட்டு எண்ணிக்கையின்போது தேர்தல் பார்வையாளர் ஒருவரைத் தவிர வேறு யாரும் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. தொகுதி தேர்தல் அதிகாரி கூட செல்போன் பயன்படுத்த தடை விதித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருப்பதாக தேர்தல் வட்டாரங்கள் தெரிவித்தன.
தபால் ஓட்டுகள் போடுவதற்காக ஒவ்வொரு தொகுதி தேர்தல் அதிகாரி அலுவலகம் முன்பாக தபால் ஓட்டு பெட்டி வைக்கப்பட்டுள்ளது. அந்த ஓட்டு பெட்டி அருகே ஒரு ஊழியரை நியமிக்க வேண்டும். ஓட்டு போடுவோரின் எண்ணிக்கையை அவர்தான் கவுண்ட் செய்து அன்று எத்தனை ஓட்டுக்கள் பதிவாகியுள்ளது என்பதை தெரிவிக்க வேண்டும். எந்தக் காரணம் கொண்டும் ஓட்டு பெட்டியைத் திறந்து எத்தனை ஓட்டு போடப்பட்டுள்ளது என்பதைப் பார்க்க கூடாது.
ஓட்டு பெட்டியை ஓட்டு எண்ணிக்கையின் போது மட்டுமே திறக்க வேண்டும். ஓட்டு எண்ணிக்கையின்போது முதலில் எண்ணப்படும் தபால் ஓட்டை காலை 08.00 மணி முதல் 08.30 மணிக்குள் எண்ணி முடித்து விட வேண்டும். இதில் எந்தவித காலதாமதமும் செய்யக் கூடாது. தபால் ஓட்டு சம்பந்தமாக பல்வேறு பிரச்னைகள் வந்துகொண்டிருப்பதால் இதில் கவனமாக செயல்பட வேண்டும் என்றும் தேர்தல் கமிஷன் அறிவுரை வழங்கியிருக்கிறது.
நன்றி:
தினமலர் (05.05.2011) |