கத்தர் காயல் நலமன்றத்தின் 38ஆவது செயற்குழு கூட்டம் 06.05.2011 (வெள்ளிக்கிழமை) அன்று நடைபெற்றது. கூட்ட நிகழ்வுகள் குறித்து அம்மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
எமது கத்தர் காயல் நலமன்றத்தின் 38ஆவது செயற்குழுக் கூட்டம் 06.05.2011 வெள்ளிக்கிழமையன்று மன்றத் தலைவர் ஃபாஸுல் கரீம் இல்லத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மன்றத்தின் மூத்த உறுப்பினர் சோனா முஹைதீன் தலைமை தாங்கினார். செயற்குழு உறுப்பினர் கே.எம்.மீரான் கிராஅத் ஓதி கூட்டத்தைத் துவக்கிவைத்தார். துணைத்தலைவர் முஹம்மத் யூனுஸ் உரையாற்றினார்.
இலவச சீருடை:
எதிர்வரும் 2011-2012 கல்வியாண்டில் 202 மாணவ-மாணவியருக்கு தலா ஒரு செட் பள்ளிச்சீருடை இலவசமாக வழங்க திட்டமிட்டிருப்பதாக துணைத் தலைவர் தனதுரையில் குறிப்பிட்டார்.
தொடர்ந்து மன்றத்தலைவர் எஸ்.ஏ.ஃபாஸுல் கரீம் உரையாற்றினார்.
நகர பள்ளிகளுக்கிடையேயான வினாடி-வினா போட்டி:
கத்தர் காயல் நல மன்றம் மூலமாக இவ்வாண்டும் காயல்பட்டினத்தில் அனைத்துப்பள்ளி மாணவ-மாணவியருக்கிடையிலான வினாடி-வினா போட்டியை நடத்தவுள்ளதாகவும், இப்போட்டி குறித்த முறையான அறிவிப்புகள் அடுத்த மாத துவக்கத்தில் அனைத்துப் பள்ளிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளதாகவும் மன்றத் தலைவர் தனதுரையில் குறிப்பிட்டார்.
புற்றுநோய் பரிசோதனை இலவச முகாம்:
இவ்வாண்டு ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் வழமைபோல, காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்புடன் இணைந்து புற்றுநோய் பரிசோதனை இலவச முகாமை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும்,
காயல்பட்டினம் இளைஞர் ஐக்கிய முன்னணி (YUF) நூகலத்திற்கு வேலைவாய்ப்பு, கணினி தொடர்பான நூல்களுக்கான ஆண்டுச் சந்தா அனுசரணை வழங்கல், ஏழை மாணவ-மாணவியருக்கு பள்ளி பாடக்குறிப்பேடுகளை காயல்பட்டினம் காயிதேமில்லத் இளைஞர் சமூக அமைப்பின் சார்பில் இலவசமாக வழங்க அனுசரணையளித்தல் உள்ளிட்டவை செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகவும், மருத்துவ உதவி கோரி காயல்பட்டினத்திலுள்ள ஏழை மக்களிடமிருந்து பெறப்பட்ட விண்ணப்பங்களை மன்றத்தின் மருத்துவக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் மன்றத் தலைவர் ஃபாஸுல் கரீம் தனதுரையில் தெரிவித்தார்.
இறுதியாக ஹாஃபிழ் முஹம்மது லெப்பை துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |