நடைபெற்று முடிந்துள்ள பன்னிரண்டாம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வில் காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளியைச் சார்ந்த மாணவர் ஏ.எச்.அமானுல்லாஹ் 1200க்கு 1177 மதிப்பெண்கள் பெற்று தூத்துக்குடி மாவட்ட அளவில் முதலிடம் பெற்று சாதனை புரிந்துள்ளார்.
காயல்பட்டினம் நகரிலிருந்து இதுவரை பன்னிரண்டாம் வகுப்பு தேர்வெழுதிய மொத்த மாணவ-மாணவியரில் இவர் சாதனை மதிப்பெண் பெற்றுள்ளார்.
2009-2010 கல்வியாண்டில், காயல்பட்டினம் அப்பாபள்ளித் தெருவைச் சார்ந்த, மறைந்த டாக்டர் அபூ முஹம்மத் ஷஃபீக் அவர்களின் மகன் ஏ.எம்.எஸ்.இஸ்மத் பெற்ற 1164 மதிப்பெண்களே இதுவரை நகர சாதனை மதிப்பெண்ணாக இருந்துவந்தது. இதற்காக, 28.06.2009 அன்று காயல்பட்டினம் ரெட் ஸ்டார் சங்க மைதானத்தில் நடைபெற்ற “சந்தியுங்கள் மாநிலத்தின் முதன்மாணவரை” நிகழ்ச்சியில் அவருக்கு அனைத்துலக காயல் நல மன்றங்களின் அனுசரணையுடன் ரூ.75,000 பணப்பரிசு வழங்கப்பட்டது.
தற்போது மாணவர் ஏ.எச்.அமானுல்லாஹ் 1177 மதிப்பெண்கள் பெற்று அச்சாதனையை முறியடித்துள்ளார். இதற்காக அவருக்கு உலக காயல் நல மன்றங்களின் கல்வித்துறை கூட்டமைப்பான காயல்பட்டினம் இக்ராஃ கல்விச் சங்கம் மற்றும் தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் அமைப்புகள் இணைந்து வரும் ஜூன் மாதவாக்கில் “சந்தியுங்கள் மாநிலத்தின் முதன்மாணவரை” நிகழ்ச்சியின்போது, ஏற்கனவே அறிவிக்கப்பட்ட படி அனைத்துலக காயல் நல மன்றங்கள் மற்றும் நகர பொதுநல அமைப்புகளின் அனுசரணையுடன் எழுபத்தைந்தாயிரம் ரூபாய் (ரூ.75,000) பரிசு வழங்கப்படவுள்ளது.
இக்ராஃ கல்விச் சங்க தலைவர் ஹாஜி பாளையம் முஹம்மத் ஹஸன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து்ளளார்.
செய்தி திருத்தப்பட்டுள்ளது. |