மவ்லானா அபுல்கலாம் ஆஸாத் நினைவாக காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்கம் (USC) மைதானத்தில் ஆண்டுதோறும் அகில இந்திய அளவில் கால்பந்து போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.
46ஆம் ஆண்டு அகில இந்திய கால்பந்தாட்ட சுற்றுப்போட்டிகள் 09.05.2011 (நேற்று) மாலை ஐக்கிய விளையாட்டு சங்க மைதானத்தில் துவங்கின. துவக்க விழாவிற்கு ஐக்கிய விளையாட்டு சங்க தலைவர் ஹாஜி பி.எஸ்.ஏ.பல்லாக் லெப்பை தலைமை தாங்கினார்.
முன்னாள் திருச்செந்தூர் பாராளுமன்றத் தொகுதி உறுப்பினர் ஏ.டி.கே.ஜெயசீலன், காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவரும், வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியின் நிறுவனர் தலைவருமான ஹாஜி வாவு செய்யித் அப்துர்ரஹ்மான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு முதல் போட்டியைத் துவக்கி வைத்தார். அவருக்கு இரு அணி வீரர்களும் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர்.
பின்னர் துவங்கிய துவக்கப்போட்டியில் கேரள மாநிலம் திருவனந்தபுரம் யுனைட்டெட் கேரளா அணியும், கோழிக்கோடு யுனிவர்ஸல் கால்பந்துக் கழக அணியும் மோதின.
ஆட்டத்தின் முதல் பாதி வரை இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை. இரண்டாம் பாதியில் ஆட்டத்தின் 43ஆவது நிமிடத்திலும், 59ஆவது நிமிடத்திலும் கோழிக்கோடு அணி வீரர்கள் இரண்டு கோல்களை அடித்தனர். திருவனந்தபுரம் அணியினர் கோல் எதுவும் அடிக்காத நிலையில், 2க்கு 0 என்ற கோல் கணக்கில் கோழிக்கோடு அணி வெற்றிபெற்றது.
அந்த அணி, கொச்சி போர்ட் ட்ரஸ்ட் அணியுடன் இன்று மாலைபெறும் போட்டியில் மோதவுள்ளது.
தினசரி போட்டி ஏற்பாடுகளை, ஐக்கிய விளையாட்டு சங்க செயலர் ஹாஜி எஸ்.ஏ.அஹ்மத் முஸ்தஃபா, ஹாஜி முஹம்மத் இல்யாஸ் ஒருங்கிணைப்பில் சங்க நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
படங்கள்:
அப்துல் மாலிக்,
மாஸ்டர் கம்ப்யூட்டர் அகடமி, காயல்பட்டினம். |