நடைபெற்று முடிந்துள்ள 12ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில், 1200க்கு 1172 மதிப்பெண்கள் பெற்று, தூத்துக்குடி மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளி மாணவர் ஏ.எச்.அமானுல்லாஹ்வுக்கு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சி.நா.மகேஷ்வரன் பாராட்டி கேடயம் வழங்கினார்.
அடுத்த ஆண்டில் தூத்துக்குடி மாவட்டம் மாநில அளவில் பிளஸ் 2 தேர்வில் ரேங்க் பெற வேண்டும் என்று மாவட்ட அளவில் ரேங்க் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு தேர்வு முடிவு வெளியான அன்றே மாவட்ட நிர்வாகம் சார்பில் பாராட்டு தெரிவித்து கலெக்டர் மகேஷ்வரன் கேடயம் வழங்கி பரிசளித்தார்.
மாவட்டத்தின் முதல் மூன்று மாணவர்கள்:
தூத்துக்குடி மாவட்ட அளவில் காயல்பட்டினம் எல்.கே.மேல்நிலைப்பள்ளி மாணவர் அமானுல்லாஹ் மாவட்டத்தில் முதலிடமும், கோவில்பட்டி நாடார் மேல்நிலைப்பள்ளி மாணவர் வெங்கடேஷ் மாவட்டத்தில் இரண்டாம் இடமும், தூத்துக்குடி ஹோலிகிராஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி சோபான வள்ளி, தூத்துக்குடி சக்தி விநாயகர் இந்து வித்யாலயம் மேல்நிலைப்பள்ளி மாணவி ஜினி பிரியர்தர்ஷினி ஆகிய இரண்டு பேரும் மாவட்ட அளவில் மூன்றாம் இடம் பெற்றுள்ளனர்.
இது தவிர மாநில அளவில் சில பாடங்களில் மாணவிகள் ரேங்க் பெற்றுள்ளனர். தமிழகத்தில் கல்வித்துறை வரலாற்றில் புதிய முறையாக பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவ, மாணவிகள் அனைவருக்கும் கலெக்டர் லட்டர் பேடில் தனித்தனியாக கடிதம் எழுதி மாணவர்கள் சிறப்பாக தேர்வு எழுத வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
கலெக்டரின் இது போன்ற புதுமையான நடவடிக்கை மாணவ, மாணவிகள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியது. அதற்கு பலனாக மாநில அளவில் ரேங்க் இல்லை என்றாலும் தேர்ச்சி சதவீதத்தில் மாநில அளவில் இம்மாவட்டம் சிறப்பிடம் பெற்றுள்ளது. மாவட்ட அளவில் தேர்ச்சி சதவீதமும் இம்மாவட்டத்தில் அதிகரித்திருப்பதால் கல்வித்துறை அதிகாரிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
பொதுவாக மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களை பெறும் மாணவ, மாணவிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் மாவட்ட நிர்வாகம் சார்பில் பாராட்டி கேடயம் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் அந்த நிகழ்ச்சி தேர்வு முடிவு வெளியாகி ஒரு சில நாட்களில் நடக்கும். ஆனால் தூத்துக்குடி மாவட்டத்தில் உடனடியாக மாவட்ட அளவில் ரேங்க் பெற்ற மாணவ, மாணவிகளை ஒரே இடத்திற்கு உடனடியாக அழைத்து கலெக்டர் மகேஷ்வரன் பாராட்டி பரிசு வழங்கி அவர்களை உற்சாகப்படுத்தினார்.
நேற்று மதியம் 12.30 மணிக்கு தூத்துக்குடி சுப்பையா வித்யாலயம் பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களை பெற்றவர்கள், குறிப்பிட்ட சில பாடங்களில் மாநில அளவில் ரேங்க் பெற்றவர்கள் வரவழைக்கப்பட்டு விழா நடந்தது. மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பரிமளா வரவேற்றார்.
அப்போது அவர் பேசியதாவது:-
***தூத்துக்குடி மாவட்டத்தில் மாவட்ட அளவில் மாணவ, மாணவிகள் சாதனை படைத்துள்ளனர்.
***ஏழு பேர் மாநில அளவில் பாடங்களில் ரேங்க் பெற்றுள்ளனர்.
***23 பள்ளிகள் நூறு சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது.
***தேர்ச்சிபெற்ற பெரும்பாலான பள்ளிகள் 90 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.
***மாவட்ட அளவில் 93.07 சதவீதம் தேர்ச்சி கிடைத்துள்ளது.
***70 சதவீதத்திற்கு குறைவாக எந்த ஒரு பள்ளியிலும் தேர்ச்சி குறைவு இல்லை.
இந்த அளவிற்கு தேர்ச்சிக்கு காரணம் மாவட்ட கலெக்டரின் ஊக்கம்தான்.
இவ்வாறு சி.இ.ஓ பேசினார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் மாவட்ட அளவில் முதல், மூன்று இடங்களை பிடித்தவர்களுக்கு பொன்னாடை போர்த்தி கலெக்டர் மகேஷ்வரன் கேடயம் பரிசு வழங்கி பாராட்டினார். அவர்களுக்கு புத்தகமும் பரிசளிக்கப்பட்டது. இதேபோல் மாநில அளவில் ரேங்க் பெற்ற ஒவ்வொருவருக்கும் கலெக்டர் பொன்னாடை அணிவித்து பாரட்டினார். அப்போது கலெக்டர் பேசியதாவது:-
தூத்துக்குடி மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் அனைவருக்கும் மாவட்ட நிர்வாகம் சார்பில் பாராட்டு தெரிவிக்கிறோம். மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களை பெற்றவர்களுக்கும், மாநில அளவில் ரேங்க் பெற்றவர்களுக்கும் பாராட்டு தெரிவிக்கிறோம்.
வரும் கல்வியாண்டிலாவது...
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மாணவ, மாணவிகள் மாநில அளவில் ரேங்க் பெறவில்லை. இந்த குறையை வரும் கல்வி ஆண்டில் போக்க வேண்டும். இதற்கு இப்போதே ஆசிரியர்கள் பணியாற்ற வேண்டும். அவர்களுக்கு கல்வி அதிகாரிகள் ஊக்கம் அளிக்க வேண்டும். ஊக்கம் அளித்தால் மாணவ, மாணவிகள் அதிக மார்க் பெற்று விடுவர். இது ஆசிரியர்கள் கையில் இருக்கிறது.
குடும்பத்துடன் விருந்து:
மாணவர்களும், ஆசிரியர்களும் இதற்காக கடுமையாக உழைக்க வேண்டும்.
உழைப்பு இருந்தால் பலன் கிடைக்கும். பிளஸ் 2 தேர்வில் விடப்பட்ட மாநில ரேங்க் குறை எஸ்.எஸ்.எல்.சி தேர்வில் நிறைவேறும் என்கிற நம்பிக்கை இருக்கிறது. அந்த தேர்வில் மாநில ரேங்க் பெறும் மாணவர்கள் வீட்டிற்கு நான் குடும்பத்துடன் சென்று சாப்பிடுவேன். அவர்களை எங்கள் வீட்டிற்கு அழைத்து விருந்தளிப்பேன். அந்த நாளை எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன்.
இவ்வாறு கலெக்டர் மகேஷ்வரன் பேசினார். தனித்தனியாக கேடயம் வழங்கப்பட்ட மாணவ, மாணவிகள் பின்னர் கலெக்டருடன் குரூப் போட்டோ எடுத்தனர். தேர்ச்சி பெற்ற நாளிலே மாவட்ட நிர்வாகம் மற்றும் கல்வித்துறை சார்பில் பாராட்டு கிடைத்ததால் மாணவ, மாணவிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
நன்றி:
தினமலர் (10.05.2011) |