நிர்வாக நலன் கருதியே புனித ஜார்ஜ் கோட்டைக்கு தலைமைச் செயலகம் மாற்றப்பட்டதாக முதல்வர் ஜெயலலிதா விளக்கம் அளித்துள்ளார்.
ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் இருந்து தலைமைச் செயலகத்தை கோட்டைக்கு மாற்றக் கூடாது என திராவிடர் கழகம், மதிமுக, பாமக உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. இந்த நிலையில், கோட்டைக்கு தலைமைச் செயலகத்தை மாற்றியது ஏன் என்பதற்கு விளக்கமளித்து முதல்வர் ஜெயலலிதா வெள்ளிக்கிழமை வெளியிட்ட விளக்கம்:
ஆட்சிப் பொறுப்பேற்ற முதல் நாளிலேயே மக்கள் நலன் பெறும் ஏழு புதிய திட்டங்களுக்கு கையெழுத்திட்டேன். மக்கள் நலன் ஒன்றையே கருத்தில் கொண்டு எனது ஒவ்வொரு நடவடிக்கையும் அமைந்துள்ளது.
தமிழக சட்டப் பேரவை மற்றும் தலைமைச் செயலகம் இப்போதுள்ள கட்டடத்தில் இருந்து ஏற்கெனவே இயங்கி வந்த புனித ஜார்ஜ் கோட்டைக்கு மாற்ற நான் உத்தரவிட்டேன். அதன் அடிப்படையில் அதற்கானப் பணிகள் விரைந்து நடைபெற்று வருகின்றன.
புதிய கட்டடம் முந்தைய திமுக அரசால் கட்டப்பட்ட கட்டடம் என்பதால்தான், நான் அதனை மாற்றுவதற்கு உத்தரவிட்டதாக சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் எந்த நடவடிக்கையையும் எப்போதும் எடுத்ததில்லை. கடந்த முறை நான் முதல்வராக இருந்தபோது புதிய தலைமைச் செயலகக் கட்டடம் கட்டுவதற்கு எடுத்த முயற்சிகளுக்கு அப்போது மத்திய அமைச்சராக இருந்த டி.ஆர்.பாலு, கருணாநிதியின் தூண்டுதலால் பல்வேறு தடைகளை ஏற்படுத்தினார் என்பது எல்லோரும் நன்கு அறிந்தது.
அவ்வாறு தடையை ஏற்படுத்தியவர்கள், பின்னர் புதிய தலைமைச் செயலகக் கட்டடத்தை கட்டியுள்ளனர். அவ்வாறு தலைமைச் செயலகத்துக்குப் புதிய கட்டடம் கட்டப்பட்டுள்ளதை நான் ஒரு போதும் எதிர்த்தது இல்லை. எனினும், இப்போது கட்டப்பட்டுள்ள புதிய தலைமைச் செயலகக் கட்டடத்தில் இருந்து பணியாற்றுவது அரசுப் பணிக்கும் நிர்வாகத்துக்கும் ஊறு விளைவிக்கும் என்பதால் புதிய தலைமைச் செயலகக் கட்டடத்தில் இருந்து பணிபுரிய விரும்பவில்லை.
கட்டடப் பணி முடியவில்லை: புதிய தலைமைச் செயலக கட்டுமானப் பணிகள் 2008ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு முழுமை அடையாத நிலையில் 2010ஆம் ஆண்டு மார்ச்சில் துவக்கி வைக்கப்பட்டது. கட்டடம் முழுமை அடைந்த கட்டடமாக இருந்திருந்தால் ஏன் முந்தைய அரசு அன்றைய தினம் முதலே அரசுத் துறைகளை புதிய கட்டடத்துக்கு மாற்றவில்லை?
புதிய கட்டட தொடக்க விழாவினை நடத்தியதால் சட்டப் பேரவைச் செயலகம் அப்போதிலிருந்தே புதிய கட்டடத்தில் செயல்படத் தொடங்கியது. தாற்காலிக இருக்கைகள் அமைக்கப்பட்டன. பேரவைத் தலைவரின் இருக்கையும் கூட தாற்காலிகமாக உயர்த்தப்பட்ட மேடையில் நிறுவப்பட்டது.
கடந்த ஆண்டு டிசம்பருக்குப் பின்னர் ஒரு சில துறைகள் மட்டும் புதிய தலைமைச் செயலகத்துக்கு மாற்றப்பட்டன. முதல்வர், துணை முதல்வருக்கான இலாக்காக்கள் மட்டுமே புதிய தலைமைச் செயலகக் கட்டடத்துக்கு கொண்டு செல்ல உத்தரவிடப்பட்டது. அவையும் முழுமையாக கொண்டு செல்லப்படவில்லை.
சட்டப் பேரவைச் செயலகம், பொது, உள்துறை, தொழில், பொதுப்பணி, ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் ஆகிய துறைகள் மட்டுமே மாற்றப்பட்டன. மேலும், அப்போதைய அனைத்து அமைச்சர்களின் அறைகளும் மாற்றம் செய்யப்பட்டன.
தலைமைச் செயலகத்தின் அனைத்து துறைகளும் மாற்றப்படாமல் அள்ளித்தெளித்த அவசரக் கோலத்தில் முந்தைய அரசு இரண்டு தலைமைச் செயலகங்களில் இருந்து செயல்பட்டுக் கொண்டிருந்தது.
அதாவது, புனித ஜார்ஜ் கோட்டையில் இருந்து செயல்படும் தலைமைச் செயலகம் ஒன்று, புதிய கட்டடத்தில் தலைமைச் செயலகம் ஒன்று என இரண்டு தலைமைச் செயலகங்கள் இயங்கிக் கொண்டு வந்தன.
மாற்றப்பட்ட துறைகளைத் தவிர மேலும் ஒரு துறை மட்டும் செயல்படுவதற்குத்தான் புதிய கட்டடத்தில் இடவசதி உள்ளது. இரண்டாம் பிளாக் முடிக்கப்பட்டால் தான் எஞ்சியுள்ள துறைகளுக்கு இடவசதி இருக்கும். அந்த இரண்டாவது பிளாக் கட்டடம் கட்டி முடிக்க இன்னும் ஓராண்டுக்கு மேலாகும்.
சட்டப் பேரவைச் செயலகம் உட்பட 36 துறைகளுள் வெறும் ஆறு துறைகள் மட்டும் புதிய கட்டடத்தில் இருந்தும், எஞ்சிய 30 துறைகள் புனித ஜார்ஜ் கோட்டையில் இருந்தும் செயல்பட்டால் அரசு இயந்திரத்தை செம்மையாக நிர்வகிக்க முடியுமா? நிர்வாக வசதிகளை புறந்தள்ளிவிட்ட காரணத்தால்தான், முழுமை அடையாத கட்டடத்தில் இருந்து செயல்பட்டுக் கொண்டிருந்தார்கள். இப்போதும் அவ்வாறு இரண்டு தலைமைச் செயலகங்களில் இருந்து செயல்படுவது நிர்வாக நலனுக்கு ஏற்றதா என்பதை மக்கள்தான் கூற வேண்டும்.
இரண்டு கிலோ மீட்டர் தொலைவு: புதிய தலைமைச் செயலகத்துக்கும், கோட்டைக்கும் இடையே இரண்டு கிலோ மீட்டர் தொலைவு உள்ளது. அமைச்சர்கள் அரசு அலுவலர்களுடன் விவாதிக்க அவர்களை இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கட்டடத்தில் இருந்து ஒவ்வொரு முறையும் வரவழைப்பதும், அமைச்சர்கள் பார்க்க வேண்டிய கோப்புகளையும் அவ்வாறு தொலைவில் உள்ள கட்டடத்தில் இருந்து பெறுவதும் காலவிரயம், பொருள் விரயம் மற்றும் நிர்வாகக் குறைபாட்டை தானே ஏற்படுத்தும்?
புதிய கட்டடத்தில் இன்னமும் முழுமையான வசதிகள் அனைத்தும் செய்து முடிக்கப்படவில்லை. மின் தூக்கிகள் கூட முழுமையாக முடிக்கப்படவில்லை. எனவே, அரசு அலுவலர்கள், மக்கள் அந்தக் கட்டடத்தின் மேல் மாடிகளுக்கு செல்வதற்கு மிகவும் சிரமப்படுகின்றனர்.
ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டுவதை பல வணிகர்களும், ரிச்சி தெருவிலுள்ள மின்னணு சாதனங்களை விற்போரும் எதிர்ப்பு தெரிவித்தே வந்தனர். மேலும், போக்குவரத்து நெரிசல் மிகுந்த சென்னையின் மத்திய பகுதியில் உள்ள அண்ணா சாலையில் புதிய தலைமைச் செயலகம் கட்டப்பட்டுள்ளது.
போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதி என்பதால் தலைமைச் செயலகத்துக்கு வரும் அனைவருக்கும் இடர்பாடு ஏற்படுகிறது. அண்ணாசாலை பகுதியில் புதிய மேம்பாலங்கள் கட்டப்படும் என திமுக ஆட்சியிலே அறிவிக்கப்பட்டது. சாலை மேம்பாலம் தொடங்கப்படாத நிலையில் புதிய தலைமைச் செயலகப் பகுதியில் உள்ள அண்ணாசாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கவே இயலாது.
நிர்வாக வசதியே இல்லாமல், முதல்வர், அமைச்சர்கள் ஒரு பக்கமும், பல துறைகள் புனித ஜார்ஜ் கோட்டை வளாகத்தில் இயங்கி வந்தால், அரசை நிர்வகிக்க இயலாது என்பதால்தான் சட்டப் பேரவை மற்றும் அரசுத் துறைகள் அனைத்தும் ஒரே இடத்தில் இயங்க வேண்டும்.
இதனால்தான், புனித ஜார்ஜ் கோட்டையில் எனது பணியைத் தொடருவேன் என தேர்தலின்போது அறிவித்து இருந்தேன். எனவே, நிர்வாக நலன் கருதி கோட்டையில் இருந்தே செயல்பட முடிவெடுத்துள்ளேன்.
இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
நன்றி:
தினமணி (21.05.2011) |