இஸ்லாமிய தமிழ் இலக்கியக் கழகத்தின் சார்பில், இஸ்லாமிய தமிழிலக்கிய 15ஆவது மாநாடு வரும் ஜூலை மாதம் 08, 09, 10 தேதிகளில் காயல்பட்டினத்தில் நடைபெறவுள்ளது.
இம்மாநாட்டில் இஸ்லாமிய தமிழ் இலக்கிய கண்காட்சி, கருத்தரங்கம், பட்டிமன்றம், கவிதையரங்கம் என பலவும் இடம்பெறவுள்ளன. முக்கிய தலைப்புகளில் ஆய்வுக்கட்டுரைகளும் சமர்ப்பிக்கப்படவுள்ளன.
மாநாட்டு பொதுநிகழ்வுகளை காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்க மைதானத்திலும், உள்ளரங்க நிகழ்ச்சிகளை ஜலாலிய்யா நிக்காஹ் மஜ்லிஸ், சென்ட்ரல் மேனிலைப்பள்ளி வளாகங்களிலும் நடத்த திட்டமிடப்பட்டு வருகிறது.
இம்மாநாட்டுப் பணிகளை பொறுப்பேற்று செயல்படுத்துவதற்காக பல்வேறு குழுக்கள் துறைவாரியாக பிரிக்கப்பட்டுள்ளன. வெவ்வேறு தினங்களில் அக்குழுவினர் தனித்தனியே கூடி, தம் துறை சார்ந்த பணிகள் குறித்து விவாதித்து முடிவுகளை முன்வடிவு செய்தனர்.
முன்வடிவு செய்யப்பட்ட முடிவுகளை இறுதி முடிவு செய்திடும் பொருட்டு அனைத்துக் குழு தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் 10.06.2011 அன்று மாலை 06.00 மணிக்கு மாநாட்டு அலுவலகமான காயல்பட்டினம் பிரதான வீதியிலுள்ள செய்யித் இப்றாஹீம் ஆலிம் கட்டிடத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை தலைவரும், மாநாட்டு ஏற்பாட்டுக்குழு தலைவருமான ஹாஜி எம்.எம்.உவைஸ் தலைமையிலும், காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவரும், வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியின் நிறுவனர் தலைவருமான ஹாஜி வாவு செய்யித் அப்துர்ரஹ்மான் முன்னிலையிலும் நடைபெற்றது.
அல்அஸ்ரார் மாத இதழின் ஆசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் டி.எஸ்.ஏ.செய்யித் அபூதாஹிர் மஹ்ழரீ ஃபாழில் ஜமாலீ கிராஅத் ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார். மாநாட்டு ஏற்பாட்டுக் குழு செயலாளர் ஹாஜி கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
பின்னர் அனைத்துக்குழு தலைவர்கள் மற்றும் துறைசார் பொறுப்பாளர்கள் தம் குழுவினர் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் முன்வடிவை கூட்டத்தில் சமர்ப்பிக்க, அவை குறித்து விவாதிக்கப்பட்டு இறுதி செய்யப்பட்டன. இறுதி செய்யப்பட்ட அம்முடிவுகள் சென்னையில், இஸ்லாமிய தமிழ் இலக்கியக் கழக பொதுச் செயலாளர் மு.சாயபு மரைக்காயருடன் கலந்தாலோசனை செய்த பின் முறைப்படுத்தி அறிவிக்கப்படும் என தீர்மானிக்கப்பட்டது.
பின்னர் www.kayalitlc.org என்ற பெயரில் மாநாட்டிற்கான அதிகாரப்பூர்வ வலைதளம் துவக்க நிகழ்ச்சி நடைபெற்றது. ஹாஜி வாவு செய்யித் அப்துர்ரஹ்மான் வலைதளத்தை துவக்கி வைத்தார். வலைதளத்திலுள்ள பக்கங்கள் குறித்து ஹாஃபிழ் எஸ்.கே.ஸாலிஹ் கூட்டத்தில் விளக்கமளித்தார்.
இறுதியாக, மாநாட்டு ஏற்பாட்டுக்குழு பொருளாளர் ஹாஜி டி.ஏ.எஸ்.முஹம்மத் அபூபக்கர் நன்றி கூற, துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது.
பின்னர் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், மாநாட்டு ஏற்பாடுகள் குறித்து செய்தியாளர்களுக்கு தகவல்கள் தரப்பட்டன.
கூட்ட ஏற்பாடுகளை மாநாட்டு விழாக்குழு தலைவர் காயல் எஸ்.இ.அமானுல்லாஹ், விழாக்குழு உறுப்பினர் ஏ.எல்.எஸ்.அபூஸாலிஹ், மலர் வெளியீட்டுக்குழு உறுப்பினர் எஸ்.ஏ.இப்றாஹீம் மக்கீ உள்ளிட்டோர் செய்திருந்தனர். |