காயல்பட்டினத்தில் பழக்கடையை சேதப்படுத்தி, அதன் உரிமையாளரைத் தாக்கியதாக மூன்று பேரை ஆறுமுகநேரி காவல்துறையினர் கைது செய்தனர்.
ஆறுமுகநேரி முத்துகிருஷ்ணாபுரம் தேவபிச்சை மகன் பிரடிபால் (32). இவர் ஆறுமுகநேரி பள்ளிவாசல் பஜாரில், ஆறுமுகநேரி - காயல்பட்டினம் சாலையில் பழக்கடை வைத்துள்ளார். இவரது கடையில், ஞாயிற்றுக்கிழமையன்று காயல்பட்டினம் காட்டு தைக்கா தெருவைச் சார்ந்த அலீ அக்பர் மகன் முஹம்மத் ஹுஸைன் (23) இளநீர் வாங்குகையில், விலை அதிகமாக இருப்பதாகக் கூறி தகறாறு செய்தாராம்.
அதன் தொடர்ச்சியாக, அன்றிரவு காயல்பட்டினம் ஸீ-கஸ்டம்ஸ் சாலையில், பிரடிபாலின் மைத்துனரும், ஆறுமுகநேரி முத்துகிருஷ்ணாபுரம் மகராஜன் என்பவரின் மகனுமான மனோகரன் வைத்துள்ள பழக்கடையில் முஹம்மத் ஹுஸைனும் மற்றும் மூவரும் சென்று தகராறு செய்தனராம். அப்போது பழக்கடையிலிருந்த பழங்களை அவர்கள் சேதப்படுத்தி, மனோகரனைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. அதனையடுத்து மனோகரன் திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சம்பவ இடத்திற்கு விரைந்த ஆறுமுகநேரி காவல் நிலைய உதவி ஆய்வாளர் குமாரசெல்வம் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்துள்ளார். உதவி ஆய்வாளர் நடராஜன், இவ்வழக்கு தொடர்பாக ஆம்னி வேன் ஓட்டுனரான முஹம்மத் ஹுஸைன், காயல்பட்டினம் சிவன்கோயில் தெரு அப்துல்லாஹ் ஸாஹிப் மகன் ஷாஹுல் ஹமீத் (24) மற்றும் அதே தெருவைச் சார்ந்த ஜெய்னுத்தீன் மகன் இர்ஷாத் ஆகிய மூவரையும் கைது செய்து விசாரணை செய்து வருகிறார்.
இவ்வழக்கு தொடர்பாக மாட்டுக்குளம் அமீர் சுல்தானை காவல்துறையினர் தேடி வருகின்றனர். இச்சம்பவத்திற்கு பயன்படுத்த முஹம்மத் ஹுஸைன் ஓட்டி வந்த ஆம்னி வேன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவத்தையடுத்து, அப்பகுதியில் விரைவுப்படையினர் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர். |