காயல்பட்டினம் இக்ராஃ கல்விச் சங்கம் மற்றும் தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் அமைப்புகளிணைந்து, “சந்தியுங்கள் மாநிலத்தின் முதன்மாணவரை 2011” நிகழ்ச்சியை இம்மாதம் 24, 25 தேதிகளில் நடத்த திட்டமிட்டு, நிகழிடங்களையும் முடிவு செய்துள்ளன.
இதுகுறித்து, உலக காயல் நல மன்றங்களின் கல்வித்துறைக் கூட்டமைப்பான காயல்பட்டினம் இக்ராஃ கல்விச் சங்கத்தின் செயலாளர் கே.ஜே.ஷாஹுல் ஹமீத் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
காயல்பட்டினம் மாணவ-மாணவியரை மாநில அளவில் முதலிடம் பெற்றிடத் தூண்டும் நோக்குடன், காயல்பட்டினம் தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட், உலக காயல் நல மன்றங்களின் கல்வித்துறைக் கூட்டமைப்பான காயல்பட்டினம் இக்ராஃ கல்விச் சங்கம் அமைப்புகள் இணைந்து தொடர்ந்து ஐந்தாமாண்டாக நடத்தி வரும் நிகழ்ச்சி “சந்தியுங்கள் மாநிலத்தின் முதன்மாணவரை”.
துவக்கமாக 2006ஆம் ஆண்டு நடத்தப்பட்ட விழாவில், ப்ளஸ் 2 தேர்வில் மாநிலத்தில் முதலிடம் பெற்ற மாணவர் ஆர்.பரத்ராம் கலந்துகொண்டார்.
இரண்டாவதாக 2007ஆம் ஆண்டு நடத்தப்பட்ட விழாவில், அவ்வாண்டின் மாநிலத்தின் முதல் இரண்டு மாணவியரான ரம்யா, ரூபிகா ஆகியோர் கலந்துகொண்டனர்.
மூன்றாவதாக 2008ஆம் ஆண்டு நடத்தப்பட்ட விழாவில், அவ்வாண்டின் மாநிலத்தின் முதல் இரண்டு மாணவர்களான ராஜேஷ்குமார், தாரணி ஆகியோர் கலந்துகொண்டனர்.
நான்காவதாக 2009ஆம் ஆண்டு நடத்தப்பட்ட விழாவில், அவ்வாண்டின் முதன்மாணவர் பி.ரமேஷ் கலந்துகொண்டார்.
ஐந்தாவதாக 2010ஆம் ஆண்டு நடத்தப்பட்ட விழாவில், அவ்வாண்டின் முதன்மாணவர் ஆர்.பாண்டியன் கலந்துகொண்டார்.
நடப்பு கல்வியாண்டிற்கான விழா, “சந்தியுங்கள் மாநிலத்தின் முதன்மாணவரை 2011” என்ற பெயரில், இம்மாதம் 24, 25 தேதிகளில் நடத்தப்படவுள்ளது. இவ்விழாவில், மாநிலத்தின் முதன்மாணவி ஓசூரைச் சார்ந்த கே.ரேகா கலந்துகொள்ளவிருக்கிறார்.
24.06.2011 வெள்ளிக்கிழமையன்று மாலை 04.30 மணிக்கு, சாதனை மாணவ-மாணவியருக்கு பரிசளிப்பு விழா (Prize distribution) காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்க மைதானத்தில் நடத்திட முடிவு செய்யப்பட்டுள்ளது.
மறுநாள் 25.06.2011 சனிக்கிழமை காலை 09.30 மணிக்கு காயல்பட்டினம் எல்.கே.மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி வளாகத்தில், மாநில சாதனை மாணவியுடன் காயல்பட்டினம் நகரின் அனைத்துப் பள்ளி மாணவ-மாணவியரை கலந்துரையாடச் செய்யும் நிகழ்ச்சி (Interactive session) நடத்தப்படவுள்ளது.
இவ்வாறு இக்ராஃ கல்விச் சங்க செயலாளர் கே.ஜே.ஷாஹுல் ஹமீத் தனதறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தகவல்:
ஹாஜி A.தர்வேஷ் முஹம்மத்,
நிர்வாகி,
இக்ராஃ கல்விச் சங்கம், காயல்பட்டினம். |