உலக காயல் நல மன்றங்களின் கல்வித்துறைக் கூட்டமைப்பான காயல்பட்டினம் இக்ராஃ கல்விச் சங்கத்தின் அடிப்படைத் தேவைகள் ஓராண்டு காலத்திற்குள் பூர்த்தி செய்யப்படுமென தம்மாம் காயல் நற்பணி மன்ற செயற்குழு தீர்மானித்துள்ளது.
கூட்ட நிகழ்வுகள் குறித்து அம்மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
சஊதி அரபிய்யா தம்மாம் காயல் நற்பணி மன்றத்தின் 59ஆவது செயற்குழுக் கூட்டம் 10.06.2011 வெள்ளிக்கிழமையன்று, மன்றத் தலைவர் டாக்டர் முஹம்மத் இத்ரீஸ் தலைமையில் அவரது இல்லத்தில் நடைபெற்றது. அப்துல் காதிர் ஸூஃபீ கிராஅத் ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார்.
இக்ராஃவின் விடைபெற்ற தலைவருக்கு புதிய தலைவர் பாராட்டு:
துவக்கவுரையாற்றிய டாக்டர் இத்ரீஸ், இக்ராஃ சுழற்சிமுறை நிர்வாகத்தின் கீழ் முதன்முறையாக தலைவர் பொறுப்பேற்று, அனைத்துப் பணிகளையும் “முதல் தரம்” என்று போற்றுமளவிற்கு உயர்தரத்துடன் செயலாற்றிய - “ஹஸன் சார்” என அனைவராலும் பிரியமுடன் அழைக்கப்படும் “சிங்கைத் தலைவர்” ஹாஜி பாளையம் முஹம்மத் ஹஸன் அவர்களின் அரிய தொண்டைப் பாராட்டி, அனைத்து உறுப்பினர்கள் சார்பிலும் நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாக நெகிழ்வுடன் தெரிவித்தார்.
உறுப்பினர்களின் விரிவான கலந்துரையாடலுக்குப் பின், கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் பின்வருமாறு:-
இக்ராஃ தலைவருக்கு செயற்குழு வாழ்த்து:
காயல்பட்டினம் நகரின் கல்வி மேம்பாட்டிற்காக அயராமல் உழைத்து வரும் உலக காயல் நல மன்றங்களின் கல்வித்துறைக் கூட்டமைப்பான காயல்பட்டினம் இக்ராஃ கல்விச் சங்கத்தின் சுழற்சி முறை நிர்வாகத்தின் கீழ், அதன் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் தம்மாம் காயல் நற்பணி மன்றத் தலைவர் ஹாஜி டாக்டர் முஹம்மத் இத்ரீஸ் அவர்களை இச்செயற்குழு மனதார வாழ்த்துவதோடு, அவர்களின் சீரிய தலைமையின் கீழ் நகர மாணவ சமுதாயம் சிறந்தோங்கவும், கல்வி வளர்ச்சியில் காயல்பட்டினம் தன்னிகரற்றுத் திகழவும் பிரார்த்திக்கிறது.
இக்ராஃவின் விடைபெற்ற தலைமைக்கு வாழ்த்து:
இதுவரை இக்ராஃவின் தலைமைப் பொறுப்பை தனது தனித்திறமையால் அலங்கரித்த சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் முன்னாள் தலைவரும், நடப்பு ஆலோசகருமான ஹாஜி பாளையம் முஹம்மத் ஹஸன் அவர்களுக்கும், இக்ராஃ தொடர்பாக அவர் மேற்கொண்ட அனைத்து செயல்திட்டங்களுக்கும் முதுகெலும்பாய் விளங்கிய சிங்கப்பூர் காயல் நல மன்ற அங்கத்தினருக்கும் இச்செயற்குழு மனப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.
இக்ராஃவின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்தல்:
இந்த ஓராண்டு கால குறுகிய அவகாசத்திற்குள், தம்மாம் காயல் நற்பணி மன்றத்தின் தலைமைக்கு வழங்கப்பட்டுள்ள இக்ராஃ தலைமைப் பொறுப்பை இயன்றளவு சிறப்புற செய்திடும் பொருட்டு, இக்ராஃவின் அடிப்படைத் தேவைகளை நிறைவாகப் பூர்த்தி செய்திட அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வதென தீர்மானிக்கப்பட்டது.
இக்ராஃவை பொருளாதார ரீதியாக செம்மைப்படுத்தல்:
இனி வருங்காலங்களில், இக்ராஃ நிர்வாகம் பொருளாதார ரீதியாக செம்மைப்படுத்தப்பட வேண்டிய வழி வகைகளை, செயற்குழுவினரின் மனப்பூர்வமான ஒத்துழைப்புடன் திட்டமிட்டு, உடனடியாக பணிகளில் இறங்குவதென தீர்மானிக்கப்பட்டது.
“சந்தியுங்கள் மாநிலத்தின் முதன்மாணவரை” நிகழ்ச்சிக்கு உதவல்:
இம்மாதம் 24, 25 தேதிகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள “சந்தியுங்கள் மாநிலத்தின் முதன்மாணவரை - 2011” விழா நிகழ்வுகள் சீரோடும், சிறப்போடும் நடத்தி முடிக்கப்பட எல்லா வகைகளிலும் உதவுவதென தீர்மானிக்கப்பட்டது.
மன்றத்தின் அடுத்த பொதுக்குழு:
மன்றத்தின் பொதுச் செயலாளர், உதவித்தலைவர், செயற்குழு உறுப்பினர்களின் ஒப்புதலுடன், இன்ஷாஅல்லாஹ் எதிர்வரும் 24.06.2011 அன்று மன்றத்தின் பொதுக்குழுக் கூட்டத்தை நடத்துவதென தீர்மானிக்கப்பட்டது.
மேற்கண்டவாறு கூட்டத்தில் முடிவுகள் மேற்கொள்ளப்பட்டன.
கூட்டத்தில் மன்றத்தின் செயற்குழு உறுப்பினர்கள் திரளாகக் கலந்துகொண்டனர். அனைவருக்கும் வழங்கப்பட்ட சுவையான இரவு உணவுடன் செயற்குழு நிகழ்வுகள் இறையருளால் சிறப்புடன் முடிவுற்றன. எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே, அல்ஹம்துலில்லாஹ்!
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
M.M.முஹம்மது ஹசன்,
மற்றும்
B.A.முத்துவாப்பா,
செய்தித் தொடர்பாளர்கள்,
காயல் நற்பணி மன்றம்,
தம்மாம், சஊதி அரபிய்யா. |