காயல்பட்டினம் குத்துக்கல் தெருவில், முஹ்யித்தீன் பள்ளிவாசலுக்கருகில் செயல்பட்டு வருகிறது ரஹ்மத்துன் லில் ஆலமீன் மீலாது பேரியம்.
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு இவ்வமைப்பின் சார்பில் ஆண்டுதோறும் மீலாது விழா நடத்தப்பட்டு வருகிறது. இவ்விழாவில் சன்மார்க்கப் போட்டிகள் நடத்தப்பட்டு, பரிசுகளும் வழங்கப்படுகிறது.
அத்துடன், நகரில் நடைபெறும் மீலாது விழாக்களிலிருந்து சற்று மாறுபட்டு, விழாவையொட்டி கல்வி உதவித்தொகை உள்ளிட்ட சமூகப் பணிகளுக்காகவும் இவ்விழாவில் அனுசரணைகள் செய்யப்பட்டு வருகிறது.
சன்மார்க்கப் போட்டிகள்:
நடப்பாண்டின் மீலாது விழா வரும் ஜூலை மாதம் 22, 23 தேதிகளில் குத்துக்கல் தெருவில் நடைபெறவுள்ளது. விழாவையொட்டி ஏழை சிறுவர்களுக்கு கத்னா எனும் சுன்னத் வைபவம் நடத்தப்படவுள்ளது.
விழாவில் மாணவர்களின் திறனறியும் திருக்குர்ஆன் மனனப் போட்டி, பேச்சுப்போட்டிகள் நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்படவுள்ளன.
கல்வி உதவித்தொகை:
உலக காயல் நல மன்றங்களின் கல்வித்துறைக் கூட்டமைப்பான காயல்பட்டினம் இக்ராஃ கல்விச் சங்கத்தின் கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ், கடந்த இரண்டாண்டுகளில் வழங்கப்பட்டது போன்று இவ்வாண்டு முதல் 4 மாணவர்களுக்கான உதவித்தொகைக்கு அனுசரணையும் வழங்கப்படவுள்ளது.
அனைத்துலக கா.ந.மன்றங்களுக்கு பாராட்டு விழா:
விழாவின் துவக்க நாளான வெள்ளிக்கிழமையன்று, உலக காயல் நல மன்றங்களின் நகர்நலப் பணிகளைப் பாராட்டி சிறப்பு நிகழ்ச்சி வழமை போன்று நடத்தப்படவுள்ளது. இந்நிகழ்ச்சியில் அனைத்துலக காயல் நல மன்றங்களின் அங்கத்தினர் கலந்துகொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
அப்துல் ஹமீத் பாக்கவீ, தொல்.திருமாவளவன் சிறப்புரை:
அன்று இரவு நிகழ்ச்சியில், வேலூரைச் சார்ந்த மார்க்க அறிஞர் மவ்லவீ எம்.அப்துல் ஹமீத் ஃபாழில் பாக்கவீ சொற்பொழிவாற்றுகிறார்.
இரண்டாம் நாள் இரவு நிகழ்ச்சியில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் சிறப்புரையாற்றுகிறார்.
அனைத்து நிகழ்ச்சிகளிலும் நகர பொதுமக்கள் திரளாகக் கலந்துகொள்ளுமாறு விழா ஏற்பாட்டுக் குழுவினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.
தகவல்:
ரஹ்மத்துன் லில் ஆலமீன் மீலாது பேரியத்தின் சார்பில்,
சட்னி செய்யித் மீரான்,
ஜித்தா, சஊதி அரபிய்யா. |