தூத்துக்குடி அரசு ஐ.டி.ஐயில் எட்டாம் வகுப்பு மற்றும் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றோர் சேர்ந்து படிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் செல்வராஜ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
கோரம்பள்ளம் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவர்கள் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகிறது. பொறிப்பகுதி பொருத்துநர், கடைசல் பிடிப்பவர், இயந்திரப்பட வரைவாளர், கம்மியர் குளிர்பதனம் மற்றும் தட்ப வெப்பநிலை கட்டுப்படுத்துதல், மின்சார பணியாளர், கம்மியர் பராமரிப்பு (ரசாயன சாதனம்), கம்மியர் கருவிகள் (ரசாயன சாதனம்), பற்றவைப்பவர், இயந்திர வேலையாள், கட்டுமானம் (பொறுத்துநர் மற்றும் பற்றவைப்பவர்) ஆகிய தொழில் பிரிவுகளுக்கு தேர்வு செய்யப்படுகின்றனர். இயந்திர வேலையாள் மற்றும் கட்டுமானம் (பொருத்துநர் மற்றும் பற்றவைப்பவர்) ஆகிய தொழில் பிரிவுக்கு அரசின் அனுமதி எதிர்பார்த்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அவ்வாறு அனுமதி கிடைக்காவிட்டால் இந்த தொழில் பிரிவுகளுக்கு விண்ணப்பித்தவர்களின் விண்ணப்பங்கள் உரிய அனுமதி பெற்று காலியிடங்கள் உள்ள பிற தொழில் பிரிவுகளுக்கு மாற்றப்பட்டு பரிசீலிக்கப்படும்.
அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர்வதற்கு பயிற்சி கட்டணம் எதுவும் கிடையாது. இதர சேர்க்கை கட்டணங்கள் அதிகப்பட்சம் 155 ரூபாய் மட்டும்தான். மாதாந்திர கட்டணங்கள் எதுவும் கிடையாது. பற்றவைப்பவர் நீங்கலாக மற்ற 9 பிரிவுகளுக்கும் பத்தாம் வகுப்பில் கணக்கு, அறிவியல் பாடங்களில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் சேர்க்கை நடத்தப்படும். பற்றவைப்பவர் பிரிவுக்கு எட்டாம் வகுப்பில் கணக்கு, அறிவியல் பாடங்களில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் சேர்க்கை நடத்தப்படும். பற்ற வைப்பவர் பிரிவுக்கு விண்ணப்பிப்பவர்கள் எட்டாம் வகுப்பிற்குரிய மதிப்பெண் சான்றிதழ் நகல் விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.
மேலும் விதிகளின்படி இன அடிப்படையிலும் மகளிர், முன்னாள் ராணுவத்தினர், விதவைகள், மாற்றுதிறன் படைத்தோர், மாநில அளவில் முதன்மை பெற்ற விளையாட்டு வீரர்கள், தாய், தந்தை இருவரையும் இழந்தோர் ஆகிய அடிப்படையில் இடஒதுக்கீடு சேர்க்கை நடத்தப்படும்.
சீர்மரபினர், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் அனைவருக்கும் மாதாந்திர கல்வி உதவித் தொகை வழங்கப்படும். இதர பிரிவினருக்கு வருமானத்தின் அடிப்படையில் கல்வி உதவித் தொகை வழங்கப்படும். விவசாய அடையாள அட்டை வைத்திருப்போருக்கு வருடாந்திர கல்வி உதவித் தொகை குறைந்தப்பட்சம் 1200 ரூபாய் வழங்கப்படும்.
பயிற்சியின் இறுதியில் அகில இந்திய தொழில் தேர்வு நடத்தப்படும். இதில் தேர்ச்சி பெற்றோருக்கு மத்திய அரசின் என்.சி.வி.டி சான்றிதழ் வழங்கப்படும். இவ்வாறு தேர்ச்சி அடைந்தவர்களுக்கு தொழிற்பழகும் பயிற்சியில் (அப்ரெண்டிஸ் டிரைனிங்) சேரவும், தனியார் நிறுவனங்களின் வேலைக்கு சேரவும் வாய்ப்புகள் பெறுவதற்கு பயிற்சியாளர்கள் பரிந்துரைக்கப்படுவர்.
கோரம்பள்ளம் தொழில் பயிற்சி நிலையம் மூலம் தற்போது ஆண்டுதோறும் தனியார் நிறுவனங்களில் வளாகத்தேர்வு நடத்தப்பட்டு ஆண்டுதோறும் பல நூறு பேர் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர். வரும் 30ஆம் தேதி விண்ணப்பம் பெறுதல் முடிவடைவதால் விருப்பம் உள்ளோர் கோரம்பள்ளம் தொழிற்பயிற்சி நிலையத்திற்கு நேரில் வந்து விண்ணப்பம் ஒன்றுக்கு 50 ரூபாய் செலுத்தி விண்ணப்பிக்கலாம். ஒரு விண்ணப்பத்தில் ஒரு தொழிற் பிரிவுக்கு மட்டுமே விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஆர்.செல்வராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி:
தினமலர் (11.06.2011) |