காயல்பட்டினம் பைத்துல்மால் அறக்கட்டளை நிறுவனம் சார்பில் ஏழை மாணவ-மாணவியருக்கான பள்ளி பாடக்குறிப்பேடுகள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது.
இதற்காக நேற்று மாலை 05.00 மணியளவில் அறக்கட்டளை வளாகத்தில் நடத்தப்பட்ட நிகழ்ச்சிக்கு, காயல்பட்டினம் முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி நிர்வாகியும், காயல்பட்டினம் நகர சரித்திர ஆய்வாளருமான முனைவர் ஹாஜி ஆர்.எஸ்.அப்துல் லத்தீஃப் தலைமை தாங்கினார்.
ஹாஃபிழ் எஸ்.கே.ஸாலிஹ் கிராஅத் ஓதி நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார். அறக்கட்டளை பொருளாளர் ஹாஜி வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். கடந்த ஆண்டு வரையிலும் இவ்விலவச வினியோகத்தில் இருந்து வந்த நடைமுறை சிக்கல்களைப் போக்கிடும் வகையில் ஒருங்கிணைந்த திட்டத்தை வகுத்து நடைமுறைப்படுத்தி, அதற்காக இன்றளவும் பல சிரமங்களை சிரமேற்கொண்டு வரும் - உலக காயல் நல மன்றங்களின் கல்வித்துறைக் கூட்டமைப்பான காயல்பட்டினம் இக்ராஃ கல்விச் சங்கத்திற்கு காயல்பட்டினம் பைத்துல்மால் அறக்கட்டளை சார்பில் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக அவர் அப்போது தெரிவித்தார்.
பின்னர் ஏழை மாணவ-மாணவியருக்கான பள்ளிப் பாடக்குறிப்பேடு இலவச வினியோகம் நடைபெற்றது. நிகழ்ச்சித் தலைவர் முனைவர் ஹாஜி ஆர்.எஸ்.அப்துல் லத்தீஃப் வினியோகத்தைத் துவக்கி வைத்தார்.
அறக்கட்டளை அறங்காவலர் ஹாஜி ஜெஸ்மின் கலீல், செயலாளர் ஹாஜி டூட்டி சுஹ்ரவர்த்தி, பொருளாளர் ஹாஜி வாவு கே.எஸ்.நாஸர் ஆகியோரும் மாணவ-மாணவியருக்கு பள்ளிப் பாடக்குறிப்பேடுகளை வழங்கினர்.
நன்றியுரைக்குப் பின், துஆவுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது. இந்நிகழ்ச்சியில் காயல்பட்டினம் நகரைச் சார்ந்த அனைத்து சமுதாயங்களைச் சார்ந்த 50 மாணவ-மாணவியருக்கு பள்ளிப் பாடக்குறிப்பேடுகள் இலவசமாக வழங்கப்பட்டது.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை காயல்பட்டினம் பைத்துல்மால் அறக்கட்டளை பொறுப்பாளர்களான எம்.ஏ.ஷாஹுல் ஹமீத், எம்.ஏ.தாவூத் நெய்னா ஆகியோர் செய்திருந்தனர். |