நாடு முழுவதும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். முதல்நிலைத் தேர்வை ஏறத்தாழ 3 லட்சம் மாணவர்கள் ஞாயிற்றுக்கிழமை எழுதினர். தமிழகத்தில் இந்தத் தேர்வை ஏறத்தாழ 20 ஆயிரம் மாணவர்கள் எழுதினர். இந்த ஆண்டு புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட சி-சாட் என்ற திறனறியும் தேர்வுமுறை எளிமையாக இருந்ததாகப் பல மாணவர்கள் தெரிவித்தனர். ஒரு சில மாணவர்கள் இந்தத் தேர்வுக்கு நேரம் போதவில்லை என்றும் தெரிவித்தனர்.
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கான தேர்வை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) நடத்துகிறது. இந்த ஆண்டு 880 பணியிடங்களுக்கான முதல்நிலைத் தேர்வு ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டது. முதல்நிலைத் தேர்வில் பொதுஅறிவுப் பாடம், விருப்பப்பாடம் என இரண்டுத் தேர்வுகள் மாணவர்களுக்கு நடத்தப்பட்டு வந்தன. இந்த ஆண்டு விருப்பப் பாடத்தை நீக்கி விட்டு, ஆங்கிலம், கணிதம் அடங்கிய சிவில் சர்வீசஸ் ஆப்டிடியூட் தேர்வு (சி-சாட்) அறிமுகப்படுத்தப்பட்டது.
பொதுஅறிவுப் பாடம் காலையிலும், ஆப்டிடியூட் தேர்வு மாலையிலும் நடத்தப்பட்டது. இந்த இரண்டு கேள்வித் தாள்களிலும் முறையே 100, 80 கேள்விகள் இருந்தன. இந்தப் பாடங்களுக்கு 200 மதிப்பெண் வழங்கப்படும்.
தமிழகத்தில் சென்னை, மதுரை ஆகிய இடங்களில் 70-க்கும் அதிகமான தேர்வு மையங்களில் ஏறத்தாழ 20 ஆயிரம் பேர் இந்தத் தேர்வை எழுதினர்.
தகவல்:
தினமணி |